Saturday, August 18, 2012

en ninaivugalin e -pathivu ---alien story

என் மடியில் தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தாள் என் பத்து வயது மகள் டிமோ. மணி இரவு பன்னிரெண்டை தாண்டியிருந்தது. ஜன்னல் வழியே சில்லென்ற காற்றும், ஏதோவொரு பூவின் வாசமும் மிதந்து வந்தது. நான் மிகுந்த குழப்பத்திலிருந்தேன். இரண்டு நாட்களாய் மண்டைக்குள் குடைச்சல். என் மனைவி மேலியனிடமும் சரியாக பேசவில்லை. என் வீட்டு நாயின் குரைப்புச் சத்தம் அவ்வப்போது கேட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தூக்கமின்றி பின்னிரவில் வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் நடந்தபோது நான் கண்ட சில விநோதங்கள்தான் இதற்கெல்லாம் காரணம். என்னுடைய முப்பது வருட வாழ்க்கையில் அன்றுதான் அந்த விநோதமான கால்தடங்களை தோட்டத்தில் பார்த்தேன்.
முதலில் ஏதோவொரு மிருகத்தின் கால்தடமென்றே நினைத்தேன். மிருகங்களை பற்றிய ஆராய்ச்சியில் பத்துவருட அனுபவமுள்ள என்னால் அந்த கால்தடத்திற்கு எந்தவொரு மிருகமும் காரணமில்லை என்று உறுதியாக நம்ப முடிந்தது. அப்படியெனில்….. அந்த தடங்களை புகைப்படம் எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன்.
என்னுடைய கணினியின் டிஜிட்டல் நூலகத்தை ஆராய்ந்தபோது நூறு வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கால்தடமொன்றின் புகைப்படம் கிடைத்தது. அந்த புகைப்படத்திலுள்ள கால்தடமும் நான் எடுத்த புகைப்படத்திலுள்ள கால்தடமும் ஒத்துப்போனதை கண்டவுடன் துள்ளிக்குதித்தேன். என் சந்தேகம் சரிதான். ஒரு வேற்றுகிரக வாசியின் கால்தடம்தான் நான் தோட்டத்தில் பார்த்தது.
வேற்றுகிரக வாசியை உயிருடன் பிடித்துக்கொடுத்தால் மூன்று தலைமுறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்துகொடுக்கும். என் மகளை தேசத்தின் மிகச்சிறந்த பள்ளியில் சேர்க்கலாம். என் மனைவிக்கு மிக உயர்ந்த பரிசுப்பொருட்கள் வாங்கிக்கொடுக்கலாம். சிறகு முளைத்து பறக்க ஆரம்பித்தன என் கனவுகள்.
ஏலியனை பற்றி இணையத்தில் ஆராய்ந்ததில் ஏலியன்கள் பலமற்றவர்கள் என்ற செய்தி மனதிற்கு தெம்பூட்டியது.
உடனே செயலில் இறங்கினேன். என்னிடமிருக்கும் இரவுக்கேமிரா மூலமாக தினமும் தோட்டத்தை நோட்டமிட ஆரம்பித்தேன். நான்கு நாட்களுக்கு பின் அந்த வினோத உருவம் மெதுவாய் என் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மரத்தின் மீது விறுவிறுவென்று ஏறி பழம் பறித்து தின்ன ஆரம்பித்தது தெரிந்தது. மிகவும் குள்ள உருவம்.உடம்பில் ரோமங்கள் இல்லை. பெயர்தெரியாத ஏதோ ஒன்றால் இடுப்பை மறைத்திருந்தது. முகத்தில் இரண்டு கண்கள் இருந்தன. மூக்கு நீண்டிருந்தது. தலையில் மட்டும் கொஞ்சம் முடியிருந்தது. ஆச்சரித்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியும் ஒரு ஜீவனா? நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.
மறுநாளிருந்து அந்த ஏலியனை பிடிக்க திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். இந்த குள்ள உருவத்தை பிடிக்க திட்டம் தேவையா என்று மனதிற்குள் தோன்றினாலும் நூறு வருடங்களுக்கு முன்பு அதாவது 2100ம் ஆண்டு ஏலியனுக்கும் என் முன்னோருக்கும் நடந்த மிகப்பெரிய போரில் ஏலியன்களால் உயிரிழந்த “தியாகிகள் சரித்திரம்” புத்தகம் நினைவுக்கு வந்தது. ஏலியன்கள் நம் போன்று உடல்வலிமை இல்லாவிட்டாலும் நிறைய ஆயுதங்கள் வைத்திருப்பதாக அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்தது. ஒருவேளை இந்தக் குள்ளனும் ஏதேனும் ஆயுதம் வைத்திருந்தால்? மனதிற்குள் பலவாறு சிந்தனைகள் ஓடியது. முடிவில் அறுக்க முடியாத இழைகளால் ஆன வலையை வீசி பிடித்துவிட தீர்மானித்தேன்.
தோட்டத்து மரமொன்றின் உச்சியில் அந்த வலையை இலைகளுக்கு இடையில் மறைவாக விரித்தேன்.
அந்த வலையானது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடியது. இன்று இரவு அந்த ஏலியன் மரத்தில் பழம் தின்ன வரும்போது அவனை ஒரே அமுக்காக அமுக்கிவிடலாம். அதன்பிறகு இந்த தேசத்தின் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் நானும் ஒருவன்.
வீட்டு பால்கனியில் அமர்ந்து உயர்ரக பைனாகுலர் மூலமாக அந்த மரத்தை கவனிக்க ஆரம்பித்தேன். என் அருகில் வந்து நின்றாள் டிமோ. அவளுக்கு இது வியப்பாகியிருக்க வேண்டும். தினமும் இரவானால் தனக்கு கதை சொல்கின்ற அப்பா இன்று ஏதோ விந்தையாக செய்கிறாரே என்று தோன்றியிருக்க வேண்டும்.
“அப்பா என்ன செய்றீங்க?” என்றவளை அணைத்துக்கொண்டே சொன்னேன்.
“இன்று உனக்கு ஒரு ஏலியனை பரிசாக தரப்போகிறேன்” என்னைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் ஒரு முத்தம் தந்துவிட்டு உறங்க போய்விட்டாள் டிமோ.
இரவின் இரண்டாம் பாதியில் எதிர்பார்த்தபடியே அந்த உருவம் மெல்ல மரத்தில் ஏறத்துவங்கியது. பழத்தை பறிக்க கையை நீட்டும் சமயத்தில் ரிமோட்டை இயக்கினேன். வலை விரிந்து அந்த உருவத்தை மொத்தமாக அமுக்கியது.
அங்கும் இங்கும் கையை அசைத்து ஏதேதோ செய்தது அந்த ஏலியன்.
வீட்டிலிருந்து இறங்கி வேகமாக ஓடிச்சென்று வலையை தரதரவென்று இழுத்துக்கொண்டு வந்து வீட்டினுள் போட்டேன். மிரட்சியான ஒரு பார்வையுடன் ஒடுங்கி இருந்தது அதன் உடம்பு.
உறங்கிக்கொண்டிருந்த டிமோவும்,என் மனைவி மேலியனும் சத்தம்கேட்டு எழுந்து வந்தார்கள்.
“இதுதான் ஏலியனா அப்பா” என்றாள் என் மகள் வியப்புக்குறையாமல்.
“ம் இதுதான் ஏலியன்” பெருமையுடன் சொன்னேன்.
“இந்த ஏலியன் எங்கிருந்து வந்திருக்கிறதப்பா?” ஆர்வமிகுதியில் கேட்டாள் டிமோ.
“இது Earth எனப்படும் கிரகத்திலிருந்து வந்திருக்கிறது. இனி நாம்தான் இந்த வெப்டியூன் கிரகத்தின் மிகப்பெரும் பணக்காரர்கள்” என்று சொல்லிவிட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment