Friday, December 9, 2011

privacy-anna


அப்பாவியாகத் தோற்றமளித்த அறிஞன், எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன்!

  சி.என்.ஏ.என்ற மூன்றெழுத்தால் அறிமுகமான அண்ணாதான், தமிழ்நாட்டு அரசியலில் உருவான முதல் `தளபதிபெரியாரின் சீடராக வலம் வந்தபோது அப்படித்தான் அழைக்கப்பட்டார்.அதன் பிறகு எல்லோருக்கும் அவர் `அண்ணாதான்! 
பள்ளியில் படிக்கும்போது பொடி போட்டுப் படித்தார். கல்லூரிக் காலத்தில் வெற்றிலை எச்சில் துப்ப, வகுப்பில் ஜன்னல் ஓரத்து இருக்கையில் இருப்பார். இந்தத் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை இருந்தது. 
என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்’’ என்று அறிவித்திருந்தார். அவரைவிட்டுப் பிரிந்து. தனிக்கட்சி கண்டபோதும் தலைமை நாற்காலியை பெரியாருக்காகக் காலியாகவே வைத்திருந்தார். 
அண்ணா காலமானது வரை தி.மு.க-வுக்குத் தலைவர் அறிவிக்கப்படவே இல்லை! 
இரண்டு மயில்கள், இரண்டு மான்கள்,புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் இறந்தது. பிற விலங்குகளைப் பராமரிக்கக் கொடுத்துவிட்டார்கள்! 
  அண்ணா -ராணி தம்பதியினருக்குக் குழந்தைகள் இல்லை. எனவே, தனது அக்கா மகள் செளந்தரியின் மகன்களான பரிமளம், இளங்கோவன், கெளதமன்,ராஜேந்திரன் ஆகிய நால்வரையும் தத்து எடுத்து வளர்த்தார்!
  தினமும் துவைத்து சுத்தப்படுத்திய வேட்டி-சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார். ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். 
முதலமைச்சரான பிறகுதான் `வெள்ளையான சட்டைஅணிந்தார்! தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார். ``என்னை காலண்டர் பார்க்க வைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி’’ என்று சொல்லிக்கொண்டார்!. 
காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு,சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு மூன்றும் தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்! 
  முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவருக்கு இருந்தன.
  நெசவு மற்றும் தையல் தொழில் நன்றாகத் தெரியும். ``என்னுடைய அளவுக்கு மீறிய பொறுமைக்கு இதுதான் காரணம் நூல் அறந்துவிடக் கூடாது என்பதற்காக நெசவாளியானவன் எப்போதும் இப்படித்தான் கவனமாகவும் பொறுமையாகவும் இருப்பான்’’ என்பார்!. 
புற்றுநோய் பாதிப்பில் இருந்தபோது, சென்னை மருத்துவமனையில் இருந்து வேலூர் சி.எம்.சி-க்கு அவரைக் கொண்டு செல்லும்போது தடுத்தார்.``நாமே அரசாங்க மருத்துவமனையை மதிக்காதது போல ஆகிவிடும்’’ என்றார்!
  அண்ணா பல மணி நேரங்களில் பேசிய கூட்டத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. ஒரு கூட்டத்தில் ஐந்து நொடிகள்தான் பேசினார். ``காலமோ சித்திரை... நேரமோ பத்தரை... உங்களுக்கோ நித்திரை.... போடுங்கள் உதய சூரியனுக்கு முத்திரை’’ என்பதே அந்தப் பேச்சு!  
நாம் வாழும் இந்த மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது. சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கியது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழித் திட்டத்தை சட்டமாக்கியது... இவை மூன்றும் அண்ணாவின் சாதனைகள்! 
தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தான் தான் முதலைமைச்சர் என்ற யோசனைகூட இல்லாமல், தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிட்டவர் அண்ணா! 
  உலகம் பழையதும் புதியதும், நிலையும் நினைப்பும், நாடும் ஏடும், நல்ல தீர்ப்பு. ஆற்றங்கரையோரம் என்று தலைப்பு கொடுத்து அதிகம் பேசியது இவர்தான் மைக் முன்னால் நின்றதும் தலைப்பு கொடுப்பார்கள். அப்படியும் பேசியிருக்கிறார்
இரண்டு அணா டிக்கெட் வசூலும் இவரது பேச்சைக் கேட்க வசூலித்திருக்கிறார்கள்! 'எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ `கத்தியைத் தீட்டாதே புத்தியை தீட்டு,’ `ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,’ `கடமை கண்ணியம்-கட்டுபாடு,’ `எங்கிருந்தாலும் வாழ்க,’ `மறப்போம் மன்னிப்போம்,’ `வாழ்க வசவாளர்கள்,’ `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு,’ `சட்டம் ஒரு இருட்டறை,’ `மக்கள் தொண்டே மகேசன் தொண்டுஆகிய பிரபலமான வாசகங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை!. 
தனக்குக் கீழ் இருந்தவர்களை நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து வளர்த்து விடுவார்
  மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக்*ஷாப், சென்னைஹிக் கின் பாதாம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தங்களையும் வாங்கிவிடுவார்.
ஹிக்கின்பாதாம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின் படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும் தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம்
அந்தக் காலத்தில். பூட்டிய அறைக்குள் தனியாகப் படுக்கப் பயப்படுவார், யாராவது துணைக்கு இருக்க வேண்டும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும்.
காஞ்சிபுரத்தில் குரங்குகள் அதிகமாக இருந்ததால், தன்னைக் குரங்கு கடித்துவிடுமோ என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறது.

Thursday, December 8, 2011

privacy--story


ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

privacy--story

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.


ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.


இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.


சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.


சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

privacy--story



ஒரு ராஜா இருந்தான். அவன், தினமும் மந்திரியை கூப்பிட்டு, "நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?' என்று கேட்பான்.
அதற்கு மந்திரி, "ஆம் மகாராஜா...' என்பார். ஊரில் மழை இல்லாமல் ஏரி, குளங்கள், கிணறுகளெல்லாம் வறண்டு, மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக தெருத் தெருவாய் ஓடுவதை சொல்ல மாட்டார்.
"மக்கள் எல்லாரும் சவுக்கியமாக இருக்கிறன்றனரா?' என்று கேட்பான் ராஜா. "ஆம் மகாராஜா...' என்பார் மந்திரி. மக்கள் வறுமையால் வாடி, எங்கே இலவச கஞ்சி கிடைக்கும் என்று குவளையுடன் ஓடுவதை சொல்ல மாட்டார்.
ராஜாவும், மந்திரி சொல்வதைக் கேட்டு சந்தோஷப்படுவான்.
ராஜாவுக்கு வேறு வேலை இல்லாததால், யாரையாவது கூப்பிட்டு, கதை சொல்லச் சொல்லி கேட்டு, பொழுதைப் போக்குவான்; ஆனால், ஒரு நிபந்தனை... கதையை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். "கதை அவ்வளவுதான்; முடிந்து விட்டது...' என்று சொன்னால், அவரை சிறையில் தள்ளி விடுவான். கதையை போதும் என்று சொல்லும் அளவுக்கு சொன்னால், அவருக்கு பணமுடிப்பு அளிக்கப்படும்.
இப்படி ஒரு நிபந்தனை விதித்தான்.
கதை சொல்ல வந்தனர் பலர். ஆனால், போதும் என்ற அளவுக்கு தொடர்ந்து கதை சொல்ல முடியவில்லை. அவர்
களையெல்லாம் சிறையிலடைத்தான் ராஜா. கடைசியாக கதை சொல்ல வந்தார் ஒருவர்.
"நிபந்தனை தெரியுமா?' என்று கேட்டான் ராஜா. "ஓ... தெரியுமே!' என்றார் அவர். "சரி... அப்படியானால் கதையை சொல்லும்...' என்றான் ராஜா; அவரும் கதையை ஆரம்பித்தார்...
"ஒரு பெரிய களஞ்சியம் நிறைய நெல் இருந்தது. அதில், ஒரு சின்ன வழி இருந்தது. ஒரு குருவி வந்து, ஒரு நெல்லைக் கொத்தி போயிற்று. மற்றொரு குருவி வந்து, ஒரு நெல்லைக் கொத்தி போயிற்று...' என்று சொல்லிக் கொண்டே
இருந்தார்.
ராஜாவுக்கு கோபம் வந்தது... "சரி... சரி அப்புறம் என்ன?' என்று கேட்டான். "பொறுங்கள் மகாராஜா... களஞ்சியம் நெல் முழுவதும் தீர்ந்த பிறகுதான் மேற்கொண்டு கதை சொல்ல முடியும்... ஒரு குருவி வந்தது. ஒரு நெல்லை...' என்று இவர் ஆரம்பித்ததும், ராஜாவுக்கு தலை சுற்றியது...
"ஐயா... போதும், போதும்... கதையை நிறுத்துங்கள். பணமுடிப்பை வாங்கி போங்கள்...' என்றான். கதை சொன்னவர் பணமுடிப்பை வாங்கிக் கொள்ள ஒரு நிபந்தனை சொன்னார்... அதாவது, "பணமுடிப்பைக் கொடுங்கள்; அதோடு ஏற்கனவே கதை சொல்ல வந்தவர்களை சிறையில் அடைத்திருக்கிறீர்களே... அவர்களை விடுதலை செய்ய வேண்டும்...' என்றார்.
ராஜாவுக்கு புத்தி வந்து, சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்ததோடு, கதை சொன்னவருக்கும் பணமுடிப்பைக் கொடுத்தனுப்பினான். அன்று முதல் கதை கேட்பதை விட்டுவிட்டு கும்பாபிஷேகம், தெய்வ வழிபாடு செய்வதிலும் ஈடுபட்டு நற்கதியடைந்தான் ராஜா.
அதாவது, ராஜா என்றால் மக்களின் நல்வாழ்வுக்கு வழி செய்ய வேண்டும். அப்படியிருந்தால், மக்கள் சவுக்கியமாக இருப்பர்; மாதம் மும்மாரி பொழியும்!