Thursday, December 8, 2011

privacy--story



ஒரு ராஜா இருந்தான். அவன், தினமும் மந்திரியை கூப்பிட்டு, "நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?' என்று கேட்பான்.
அதற்கு மந்திரி, "ஆம் மகாராஜா...' என்பார். ஊரில் மழை இல்லாமல் ஏரி, குளங்கள், கிணறுகளெல்லாம் வறண்டு, மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக தெருத் தெருவாய் ஓடுவதை சொல்ல மாட்டார்.
"மக்கள் எல்லாரும் சவுக்கியமாக இருக்கிறன்றனரா?' என்று கேட்பான் ராஜா. "ஆம் மகாராஜா...' என்பார் மந்திரி. மக்கள் வறுமையால் வாடி, எங்கே இலவச கஞ்சி கிடைக்கும் என்று குவளையுடன் ஓடுவதை சொல்ல மாட்டார்.
ராஜாவும், மந்திரி சொல்வதைக் கேட்டு சந்தோஷப்படுவான்.
ராஜாவுக்கு வேறு வேலை இல்லாததால், யாரையாவது கூப்பிட்டு, கதை சொல்லச் சொல்லி கேட்டு, பொழுதைப் போக்குவான்; ஆனால், ஒரு நிபந்தனை... கதையை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். "கதை அவ்வளவுதான்; முடிந்து விட்டது...' என்று சொன்னால், அவரை சிறையில் தள்ளி விடுவான். கதையை போதும் என்று சொல்லும் அளவுக்கு சொன்னால், அவருக்கு பணமுடிப்பு அளிக்கப்படும்.
இப்படி ஒரு நிபந்தனை விதித்தான்.
கதை சொல்ல வந்தனர் பலர். ஆனால், போதும் என்ற அளவுக்கு தொடர்ந்து கதை சொல்ல முடியவில்லை. அவர்
களையெல்லாம் சிறையிலடைத்தான் ராஜா. கடைசியாக கதை சொல்ல வந்தார் ஒருவர்.
"நிபந்தனை தெரியுமா?' என்று கேட்டான் ராஜா. "ஓ... தெரியுமே!' என்றார் அவர். "சரி... அப்படியானால் கதையை சொல்லும்...' என்றான் ராஜா; அவரும் கதையை ஆரம்பித்தார்...
"ஒரு பெரிய களஞ்சியம் நிறைய நெல் இருந்தது. அதில், ஒரு சின்ன வழி இருந்தது. ஒரு குருவி வந்து, ஒரு நெல்லைக் கொத்தி போயிற்று. மற்றொரு குருவி வந்து, ஒரு நெல்லைக் கொத்தி போயிற்று...' என்று சொல்லிக் கொண்டே
இருந்தார்.
ராஜாவுக்கு கோபம் வந்தது... "சரி... சரி அப்புறம் என்ன?' என்று கேட்டான். "பொறுங்கள் மகாராஜா... களஞ்சியம் நெல் முழுவதும் தீர்ந்த பிறகுதான் மேற்கொண்டு கதை சொல்ல முடியும்... ஒரு குருவி வந்தது. ஒரு நெல்லை...' என்று இவர் ஆரம்பித்ததும், ராஜாவுக்கு தலை சுற்றியது...
"ஐயா... போதும், போதும்... கதையை நிறுத்துங்கள். பணமுடிப்பை வாங்கி போங்கள்...' என்றான். கதை சொன்னவர் பணமுடிப்பை வாங்கிக் கொள்ள ஒரு நிபந்தனை சொன்னார்... அதாவது, "பணமுடிப்பைக் கொடுங்கள்; அதோடு ஏற்கனவே கதை சொல்ல வந்தவர்களை சிறையில் அடைத்திருக்கிறீர்களே... அவர்களை விடுதலை செய்ய வேண்டும்...' என்றார்.
ராஜாவுக்கு புத்தி வந்து, சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்ததோடு, கதை சொன்னவருக்கும் பணமுடிப்பைக் கொடுத்தனுப்பினான். அன்று முதல் கதை கேட்பதை விட்டுவிட்டு கும்பாபிஷேகம், தெய்வ வழிபாடு செய்வதிலும் ஈடுபட்டு நற்கதியடைந்தான் ராஜா.
அதாவது, ராஜா என்றால் மக்களின் நல்வாழ்வுக்கு வழி செய்ய வேண்டும். அப்படியிருந்தால், மக்கள் சவுக்கியமாக இருப்பர்; மாதம் மும்மாரி பொழியும்!

No comments:

Post a Comment