Wednesday, October 30, 2013

enninAIVUGALIN e-pathivu--story

புதிதாக வாங்கியிருக்கும் 'மொபைலை ' பத்திரமாகப் பிரித்தான் சுந்தர்.

"என்னங்க ! ஏது இந்த புது மொபைல் ! எவ்வளவு ஆச்சு' என்று சுந்தரின் மனைவி ராதிகா ஆச்சரியாமாக பார்த்தாள். 

"சும்மா பத்தாயிரம் தான்"

"என்ன பத்தாயிரமா? அப்படியென்ன இதிலே இருக்கு?"

"என்னவா! இது எல்லாமே டச் ஸ்கிரீன் தான்.இதோ, இந்த மொபைல் புத்தகத்திலே இதை எப்படி இயக்குறதுன்னு தெளிவா போட்டிருக்காங்க. நான் படிச்சு அதுபடி செஞ்சு பார்த்து உனக்குச் சொல்லித் தருகிறேன். ம்.. இதுக்கே பாதி நாள் ஆயிடும் போலயிருக்கு. முக்கியமா இதுக்குள்ளே போறதுக்கு 'பாஸ் வேர்டு' இருக்கு. அதைப் பத்தி விவரமா படிச்சு முடிச்ச பிறகு சொல்றேன்" என்றான் சுந்தர்.

"சரி சரி ..நீங்க படிங்க.. எனக்கு சமையலறையிலே வேலை இருக்கு" என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் ராதிகா.

சுமார் ஒரு மணி நேரம் ஆயிருக்கும்.

"என்னங்க , இன்னுமா படிச்சு முடியல்லே! இங்கே கொடுங்க அந்த புத்தகத்தை!" என்று கேட்டு வாங்கி ஒரு பக்கத்தைப் படித்துப் பார்த்தாள்.

"என்னங்க ஒன்னும் புரியல்லை. ம்.. நீங்க எப்போ படிச்சு முடிக்கிறது.எப்போ உபயோகிக்க போறோமோ?" என்று மீண்டும் சமையலறைக்கு ஓடினாள்.


"ராது" என்று அழைத்தவாறு "என்னோட பழைய மொபைல் கொஞ்சம் கொடு. முக்கியமா ஒரு கால் பண்ணனும்" என்று கேட்டபிறகு தான் ராதிகா தான் அவசரமாக எங்கோ வைத்த மொபைலைத் தேடினாள்.

"என்னங்க. இங்கே தான் வச்சேன். கொஞ்சம் தேடுங்க. இல்லாட்டி மறதியா ஹால்லே வச்சுட்டேன்னா கூட தெரியல்லே.அங்கேயும் கொஞ்சம் தேடிப்பாருங்க" என்று சொல்ல சுந்தர் பொறுமையாக தேடினான். இதிலிருந்து இந்த மாதிரி நடப்பது அவனுக்கு புதிதல்லவென்று தெரிகின்றது.

எல்லா இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. பரபரப்பாக சுந்தர் ஏதோ தேடுவதைப் பார்த்துக்கொண்டிருந்த அவன் மகன் "என்னப்பா .. என்ன தேடுறீங்க?" என்று அவனும் சற்று பதற்றத்துடன் கேட்டான்.

"ஒண்ணுமில்லேடா செல்லம்.! என்னோட பழைய மொபைலை அம்மா எங்கேயோ வச்சுட்டாங்க. அதை தான் தேடுறேன்" என்றான் சுந்தர்.

" அப்பா. இதுக்குப் போய் இவ்வளவு டைம் வேஸ்ட் பண்ணுறீங்களே. உங்களோட புது மொபைலைக் கொடுங்க. இதுக்காக நேத்து நீங்க வாங்கின 'சிம்' கொடுங்க" என்று கேட்டான்.

அவன் இரண்டையும் தன் மகனிடம் கொடுத்தான். 

அந்த புது மொபைலின் கவரைக் கழட்டி , பேட்டரியை எடுத்து அதற்கு கீழே அந்த புது சிம்மை சொருகி மீண்டும் பழையபடி அனைத்தும் பொருத்தி மொபைல் திரையை இரண்டு மூன்று தடவை தேய்த்து 

"டாடி உங்க நம்பர் இது தானே என்று கண் இமைக்கும் நேரத்தில்  கால் செய்தான். இந்த குட்டி பையன் செய்வதை கண் இமைக்காமல் அவர்கள் இருவரும் பார்த்துகொண்டிருந்தனர்.   

"என்னங்க , இனிமே இந்த புத்தகத்தை படிச்சு டயத்தை வேஸ்ட் பண்ணாமே உங்க பையன் கிட்டே இதை பத்தி நல்ல கேட்டுத் தெரிஞ்சுக்குங்க."

. இந்த காலத்து குழந்தைங்க சும்மா சொல்லக்கூடாது கம்ப்யூட்டர் , மொபைல் ஹான்டில் பன்றதிலே நல்லாவே செய்யுறாங்க" என்று அவனை மெச்சிவிட்டு தான் படித்துக்கொண்டிருந்த மொபைல் புத்தகத்தை ஓரத்தில் வைத்துவிட்டு தன் மகனிடம் மொபைல் ஆப்பரேட் செய்யும் நுணுக்கத்தை படிக்க ஆரம்பித்தான் சுந்தர்.

enninaivugalin e-pathivu--story

"என்ன சங்கர் ! இப்போ வந்து இடி போல அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை சொல்றீங்க! அப்போ... இதுநாள் வரைக்கும் நீங்க என்கிட்டே பேசினது? .. என்னோட பழகினது? எல்லாமே ரொம்ப பேரு காதலிச்சு ஏமாத்துறாங்களே அந்த ரகம் தானா நீங்களும்! நீங்க இந்த மாதிரி அற்ப குணமுள்ளவருன்னு தெரிஞ்சிருந்தா நான் ஒருபோதும் இந்த காதலுக்கு ஒத்திருக்கவே மாட்டேன்.இவ்வளவு  கீழ்தரமான எண்ணமுடையவர் தான் என்னுடைய காதலனா? நான் கட்டிக்க போற புருஷனா? நினைச்சு பார்க்கவே என்னோட கல்யாண வாழ்க்கை ரொம்ப பயமா இருக்குதே ! இப்ப என்ன பண்ணுவேன்?" என்று புலம்பினாள் மாலா.

எதிரில் இருந்த சங்கரோ இதற்கு உடனே பதில் சொல்லாமல் சற்று அமைதி காத்து பிறகு அழுத்தமாகவே, " என்ன செய்யுறது மாலா? அப்பாகிட்டே எதிர்த்து பேச முடியல்லே! சின்ன வயசு பழக்கம் இப்பவும் மாறாம அப்படியே இருக்கு. அவரு ஒரே வார்த்தையிலே என்கிட்டே சொல்லிட்டாரு. 'நீ மாலாவை கட்டிக்கணும்னா, கட்டாயம் அவங்க 20 பவுன் நகையும் 50,000 ரூபாய் ரொக்கமும் வரதட்சனையாய் எனக்கு வேண்டுமென்று. அப்பத்தான் இந்த கல்யாணத்தை நடக்கவிடுவேன். இல்லாட்டி உங்க காதல் கல்யாணத்திலே முடியாதுன்னு?' கறாரா சொல்லிட்டாரு. அப்பா பேச்சை என்னாலே தட்ட முடியல்லே! அப்படியிருந்தும் நான் தைரியத்தை வரவழைத்து "அப்பா! நிச்சயதார்த்தம் நடக்கிறப்போ கூட இதை பத்தி பேசலையேப்பா. அப்போ என்ன பேசுனீங்க. கொஞ்சம் நினைச்சு பாருங்க.' பையனுக்கு பொண்ணு பிடிச்சிருக்கு ! பொண்ணுக்கு பையனை பிடிச்சிருக்கு ! ஒருத்தருக்கொருத்தர் விரும்புறாங்க. என்மகன் சங்கர் இஷ்டப்படி தான் இந்த கல்யாணம் நடக்கும். பையன் விருப்பபடி கட்டுன புடவையோட மாலா எங்களுக்கு மருமகளாக வந்தாப்போதும் ' என்று இதுவரை யாரும் சொல்லாததை நீங்க சபையிலே எல்லோருக்குமுன்னாடி  பகீரங்கமாக சொல்லி எல்லோரையும் ஆச்சரியபடுத்தினீ ங்களே ! இப்போ திடீரென்று பல்டி அடிக்குறீங்களே. நகை விக்கிற விலையிலே பவுனும், ரொக்கமும் எப்படி அவங்க உடனே புரட்டுவாங்க?ன்னு கெஞ்சினேன். உங்க கஷ்டத்தையும் வீட்டு சூழ்நிலையும் சொன்ன பிறகுகூட என்னப்பா தன்னோட முடிவை மாத்திக்கவேயில்லை! அதுக்கு அவரு என்ன பதில் கொடுத்தாரு தெரியுமா? 'நான்  என்ன ஏமாந்தவனா? மூக்கும் முழியுமாய், லட்சனமா, அழகா கைநிறைய சம்பாதிக்கும் பையனை ஒரு பைசா கூட வாங்காம அவளுக்கு கட்டி கொடுக்குறதுக்கு நான் ஒன்னும் இளிச்ச வாயன் கிடையாது' என்று கடுமையாகவே பேசிட்டாரு. இப்போ என்ன பன்றதுன்னு எனக்கு தெரியல்லே! மாலா டியர், தயவுசெய்து எனக்காக எப்படியாச்சும் உங்க வீட்டிலே சொல்லி இந்த கல்யாணத்தை நடத்திட சொல்லிடு. நீ தான் என்னோட உயிர். நீயில்லாம எனக்கு வாழ்கையே இல்லை. ப்ளீஸ் !" என்று கெஞ்சினான் சங்கர்.

சட்டென்று ஆத்திரம் பொங்க கோபத்துடன், " எப்படிங்க கல்யாணத்துக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. உடனே பவுனும் நகையும் எப்படி புரட்டமுடியும்? ஜீ ..பூம் ..பா வா? அப்படி சொன்னவுடன் நாம் நினைச்ச பவுனும், நகையும் வந்துறதுக்கு?! உங்களை நம்பினேனே, எல்லாம் என்னோட தலைவிதி! உங்களைப்போய் நல்லவர்ன்னு நினைச்சு காதலிச்சேனே அது தான் நான் வாழ்கையிலே செஞ்ச பெரிய தப்பு! இது போதாதுன்னு உங்க ப்ரண்ட்ஸ்க 'மாலா ! , நீ புடிச்சாலும் புடிச்சே புளியம்கொம்பா புடிச்சுட்டே . சங்கர் போல பையன் கிடைக்கிறதுக்கு நீ நிறைய கொடுத்துவச்சிருக்கணுமாம்!  கொடுத்து வச்சது என்னன்னு இப்போல்லே தெரியுது! இதுல்லாமே 'தங்கமான பையனாம்?' தங்கமில்லே தகரமான பையன்னு இப்போல்லே புரியுது! என்ன என்ன 'வைரமான குணமா? 'வெறும் பாலிஷ் செய்த கூலாங்கல்லுன்னு உண்மை விளங்கிடுச்சி " பட படவென்று மனதில் பட்டதை ஆதங்கத்தோடு பேசிவிட்டு அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று தன் வீட்டை நோக்கி நடந்தாள் மாலா.

சங்கரும் வேறுவழி தெரியாமல் அமைதியாக அவள் சொன்ன வார்த்தைகளையெல்லாம் அசை போட்டவாறே அந்த இடத்தைவிட்டு நகன்றான்.

மாலா வீட்டில்...

"என்னம்மா சொல்றே! இந்த கல்யாணம் வேண்டாமா?"

"ஆமாப்பா , மனசுலே ஒன்னு வச்சிட்டு, செய்றது வேறயா இருக்கிறவர்கிட்டே எப்படி காலம்பூரா குடும்பத்தை நடத்துறது? நீங்களே சொல்லுங்கப்பா? " குமுறினாள் மாலா.

"உன்னோட மனசு படும் கஷ்டம் புரியுதம்மா. ஒரு வகையிலே நானும் பேராசைக்காரன் ! கட்டின புடைவையோட கல்யாணம் செஞ்சு கொடுத்திட்டா போதும்ன்னு அதிகமாகவே ஆசைபட்டுட்டேன். அதுவும் எல்லாவிதத்திலேயும் தரமுள்ள பையனை கட்டி கொடுக்க?! இதோ பாரு மாலா ! இந்த கல்யாணம் நடக்கலேன்னா நமக்கு தான் அசிங்கம். சும்மா சொல்லக்கூடாது. பையன்... அவங்கப்பா மேல ரொம்பவே மரியாதை வச்சிருக்கான் போலிருக்கு? அப்பா பேச்சை தட்டாம ஒன்னுவிடாம் உன்கிட்டே  சொன்னானே அதுக்கு பாராட்டியே தீரனும். எப்பாடுபட்டாவது என் தலையை அடமானம் வச்சாவது அவங்களோட எண்ணத்தை பூர்த்தி செய்து இந்த கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்திக்காட்டுறேன். நீ நடந்ததை நினைச்சு கவலைபடாம சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு செய்யுற பெரிய உதவி !" என்று மாலாவிடம் சமாதானம் சொன்னாலும் சங்கரின் வீட்டு கடைசி நேர மிரட்டலும் , திடீர் கோரிக்கையும் மாலாவிற்கு வேதனையுண்டாக்கியது.

சங்கரும் மாலாவும் இருவரும் 'கண்டதும் காதல்' என்று கம்ப்யூட்டர் காதலை போல்  சட்டென்று அவர்கள் இருவரும் பார்த்ததும் பழகிவிடவில்லை. பார்த்தது தான் அதிக நாட்கள். பேசியது மிகவும் கொஞ்சம் தான். அப்படி புரிந்து கொண்டதில்  தான் இருவருக்கும் உள்ள ஒற்றுமை ! அவர்களின் காதல் பயணம் காதல் விமானத்தில் ஏறி வானத்தில் உல்லாசமாய்  பறக்க நினைக்கும்போது ஆரம்பத்தில் விமானம் எப்படி ஓடுதளம் விட்டு மேலே எழும்பும் போது இருக்கும் பிரச்சினை போல அவர்களது காதலிலும் இருந்தது. முதலில் கஷ்டப்பட்டர்ர்கள். சிரமபட்டார்கள். பிறகு தான் வானத்தில் காதல் பறவைகள் போல் சந்தோஷமாக பறந்துவந்தனர். ஆனால் மறுபடியும் கல்யாணம் என்கிற ஓடு தரையில் பாதுகாப்பாக இறங்குவதற்குள் திடீரென்று அவனது அப்பா செய்த பவுனும் நகையும் கட்டாயம் வேண்டுமென்ற  'ப்ளாக்  மெயில் 'க்கு பணிந்து அவர்களது காதல் விமானம் ஒருவழியாக தரையிலிறங்கியது. இனி இந்த காதல் விமானம் கல்யாண விமானமாக மாறவேண்டியது தான் பாக்கி. அதுவும் சில நாட்களிலே!

ஒருவழியாக மாலாவின் அப்பா கல்யாணத்திற்கு வேண்டிய பவுனும் ரொக்கமுடன் கல்யாண செலவுக்கான பணத்தையும் புரட்டிவிட்டார். இதற்காக பலரிடத்தில் இவரது சுயமரியாதை கூட இழந்தார். அவமானமும் பட்டார். பணம் கொடுத்தவர்கள், 'கல்யாண வயசுலே பொண்ணு ஒன்னு இருக்குன்னு தெரியுமில்லே! கொஞ்சம் கூட சேர்த்து வைக்காம இப்போ பாரு, பணம் பணம்ன்னு நம்மளை போட்டு உயிரெடுக்கின்றீர்களே!' இது போல ஆயிரம் வசவுகள். இதுவெல்லாம் சங்கரின் நல்ல குணத்தில் புதைந்துபோனது.


மாலா தன்னுடைய திருமணப் பத்திரிக்கை கொடுக்க சென்ற இடத்தில் கூட எல்லோரும் சங்கரை பற்றி புகழ்ந்து பேசாதவரே இல்லையெனலாம். 'இந்த உலகத்தில் அவனைப்போல் ஒரு பையன் யாரும் இருக்கவே மாட்டார்கள். இனிமேலும் பொறக்கவும் மாட்டார்கள் ! பையன்னா அவனைப்போல இருக்கணும்!' இப்படியான பேச்சுகள் கேட்க கேட்க மாலாவுக்கு வயிறு பற்றிக்கொண்டு வந்தது. அவளுடைய மனதிலோ 'இவரா நல்லவர்? அவ்வளவும் நடிப்பு! எல்லோரையும் நம்ப வச்சு கடைசியில் கழுத்தை அறுத்தவர்! ம் .. நடந்ததை நான் எப்படி யாரிடம் சொல்வது? எப்படியோ அசிங்க படாம இந்த கல்யாணம் நடந்தா சரிதான்! ' இனிமேல் சங்கரை எக்காரணம் கொண்டும் ஏறெடுத்து  பார்க்ககூடாது. அவனிடத்தில் ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது என்ற பிடிவாதத்துடன் இருந்தாள்.

ஆனால் அவளுக்குள் 'அவங்களுக்கு மட்டும் தான் பேசத்தெரியுமோ? கல்யாணம் முடியட்டும். அவனா? இல்லை நானா?ன்னு பார்த்துடுறேன். அவனை உண்டு இலைன்னு ஆக்கிடுறேன். இந்த மாலா கதாநாயகியாக உனது பெண்டாட்டியாக இருக்க மாட்டாள். உங்க குடும்பத்துக்கு ஒரு வில்லியாக மாறிவிட்டாள் ன்னு அனைவருக்கும் தெரிய வைக்கிறேன். என் பூ போல மனசு தாலி கட்டிய பிறகு புயலாக மாறப்போவதை எல்லோரும் முன்னாடி  காட்டுகிறேன். தாலி கட்டின மணமேடையிலே அனைவருக்கும் மத்தியிலே இந்த சங்கர் யாரு? அவங்க குடும்பம் எப்படி பட்டதுன்னு காமிக்கிறேன். கல்யாண நாள்லே தாலி கட்டின மறு நிமிஷமே 'டைவர்ஸ்' செய்து புது சரித்திரம் படைக்கும்  பெண்ணாக பலருக்கும் தெரியவைக்கிறேன். அவள் மனதில் இந்த மாதிரியான எண்ணங்களின் வார்த்தைகள்  தவறு செய்தவரின் நெற்றியில் அடிக்கும் சுத்தியலாய், 360 டிகிரியில் சுழற்றி அடிக்கும் சாட்டையாய் எழுந்தன.

கல்யாண நாளும் வந்தது.


தனது அனைத்துவிதமான குமுறல்களையும், எண்ணங்களையும் அடக்கி கொண்டிருப்பவளென்று அவளுடைய முகத்தில் லேசாக பிரதிபலித்தது. பக்கத்தில் இருந்த சங்கரைப் பார்க்கவே கூச்சப் பட்டாள் . இன்னும் சிறிது நேரத்தில் பிரியப் போகிறோம். அதுவும் அவனை 'பழிக்குப் பழி' தீர்த்துவிட்டு.இப்படி செய்வது தன் வீட்டிலுள்ளவர்களுக்கும், கல்யாணத்திற்கு வந்திருப்பவர்களுக்கும் அதிர்ச்சியை, அவமானத்தை கொடுத்தாலும் 'என்னை பொருத்தமட்டில் எனக்கு மகிழ்ச்சி தான். இவர் போன்ற ஏமாற்றுகாரர்களுக்கு ஒரு சவுக்கடியாக இருக்கட்டும்' என்ற பலத்த சிந்தனைகளோடு தன்னை தயார் படுத்திக்கொண்டு கல்யாண மேடையில் இருப்பு மனிதன் போல அமர்திருந்தாள்.


 "கெட்டி மேளம் ,,,,, கெட்டி மேளம் ..."  நாதஸ்வர மேள தாள மங்கள ஒலி முழக்க அனைவரும் பூக்களை தூவி மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர். அனைவரும் எதிர்பார்த்த சுப காரியமான தாலி கட்டுதல் நிகழ்ச்சி முடியும்விதமாக அவள் கழுத்தில் தாலி ஏறியது. இன்னும் சற்று நேரத்தில் அவள் பேசும் நேரம் வரப்போகிறது. இந்த மண்டபமே அலறப்போகிறது. யார் யாருக்கு அவமானம் வரப்போகிறதோ? ...

"மாப்பிள்ளையும் பொண்ணும் பெத்தவங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கிக்கங்க!" இந்த வார்த்தைகளை கேட்டவுடன் கடுகடுத்த முகத்துடன் வேண்டா வெறுப்பாக சங்கரின் கைகளை பிடித்துக் கொண்டு எழுந்தாள்.

மாலாவின் பெற்றோர்கள் மனதில்..

இப்போ தான் எங்களுக்கு நிம்மதி ! ஒரு நல்ல பையனை கட்டி கொடுத்துட்டோம். இனி நமக்கு காலமெல்லாம் கவலையில்லை. இனி அவங்க வாழ்கை சந்தோஷமாக தொடங்கப் போகுது! ' தங்களை நோக்கி வந்த மணமக்களைப் பார்த்து தங்களுக்குள் நினைத்துக்கொண்டனர்.

அதேவேளையில் சங்கரின் அப்பா தன் மனைவியினிடத்தில் மெல்லிய குரலில் " பார்த்தாயடி பங்கஜம்! என்னோட கடைசி நேர அஸ்திரம்! 20 பவுனும் 50,000 ரூபாய் ரொக்கமும்? அப்படி மிரட்டியிருக்காவிட்டா நமக்கு கிடைச்சிருக்குமா?எல்லாம் நமக்குத்தான். கடைசி காலத்திலே அது நமக்கு நல்லா உதவும்! " ஏதோ  பெரிதாக சாதித்தவர் போல தோரணையாக பேசினார்.

அதற்கு அவளுடைய மனைவியோ," என்னவோ போங்க . நீங்க செய்றது எனக்கு கொஞ்சங்கூட பிடிக்கலே! எனக்கு மனசே சரியில்லை! ஆசை ஆசையாய் காதலிச்சதுக்காக அவங்ககிட்டே கடைசி நேரத்திலே கொடுத்த வாக்குறுதிக்கு எதிரா பவுனும் நகையும் நீங்க கேட்டது எனக்கு இஷ்டமேயில்லை. இது நீங்க உங்க மகனுக்கு செய்யுற பச்சை துரோகம்! உங்களைப் பத்தி உங்க மகன் எப்படி நினைச்சிருப்பான் 'இந்த மாதிரியான  ஒருஅப்பா கிடைக்க நான் நல்லாவே கொடுத்து வச்சிருகேன்னு. கடைசியில் இப்படி அற்ப மனுஷனாக மாறிட்டீங்களே ' ஆதங்கப்படாள். வயதான காலத்தில் இந்த மனுஷனை நம்பித்தான் வாழனும்மென்று வேறுவழியில்லாமல் பொறுமை காத்தாள்.

மணமேடையை விட்டு மாலா மூன்றடி கூட எடுத்து வைக்கவில்லை. மண்டபமே அலறும்போல் சங்கர் " மாலா ! கொஞ்சம் நில்லு ! " சற்று கடுமையான முகத்தோடு கத்தினான். மாலாவும் இதற்கு முன் சங்கருடைய முகத்தில் இத்தகைய கோபம் கண்டிருக்க மாட்டாள். அந்த காட்சியை கண்டு கொஞ்சம் பயந்து நடுங்கினாள் மாலா! என்ன நடக்க போகிறதோ? என்று எண்ணிக்கொண்டிருந்த மாலா அவனைப்ப் பார்த்தாள். அவளது பார்வை 'நான் என்ன செய்ய வேண்டும்' என்பது போல் இருந்தது.

"உன்னுடைய நகைகளை கழற்று! பணத்தை கையிலே எடு ! " என்று அதட்டினான்.

'இதென்னடா புது குழப்பம். நான் நினைச்சதை விட புதுகதையாய் இருக்கு! ஒரு வேளை இந்த நகையும் பணமும் அவரோட அப்பா முகத்திலே தூக்கி வீசி எறிந்துவிட்டு வா..மாலா நாம தனிக்குடித்தனம் போய்விடலாம். இனிமேல் இவர்களோட வாழவேண்டாம் ன்னு பேசப் போகிறாரோ! ஒரு  வழியில் அதுவும் நல்லது தான் ' என்று மனதில் உதிர்ந்த எண்ணங்களோடு சற்றென்று நகைகளை கழற்றினாள். சங்கரின் இந்த அதிரடியில் அவளுடைய திட்டம் என்னவோ மங்கியது.

இதை எதிர்பார்த்த சங்கரின் அப்பா, "பார்த்தியாடி பங்கஜம் ! நம்ம ப்ளான் படி அந்த பவுனும் நகையும் நம்ம கிட்டே தூக்கி கொடுத்திட்டு 'எங்களை விட்டுடுங்க. உங்களுக்கு தேவை இந்த நகையும் பணமும் தானே. இந்தாங்க. நாங்க வர்றோம்'ன்னு பேசிட்டு போகப் போறாங்க. நீ பார்துட்டேயிரு. எப்படியும் ஒருநாளைக்கு அப்பா மகன் பிரிஞ்சு தான் போகப்போறாங்க!. அது  கொஞ்சம் முன்னாடியே  நடக்கப் போகுது. அப்போ பிரிஞ்சு போகும்போது  இந்த மாதிரி நகை,பணம் கிடைக்குமா? நமக்கு வந்த வரைக்கும் லாபம் !" ஆசையுடன் காத்திருந்தார் சங்கரின் அப்பா..

சங்கரின் அம்மாவுக்கு என்ன நடக்கப் போகிறதோ! என்கிற பயத்தில் இருந்தாள்.

நகையும் பணமும் கையிலெடுத்தவுடன் சங்கரின் முகம் சிறிதளவு சாந்தமாக மாறியது.

நேராக தன்னுடைய மாமனார், மாமியார்ரிடம் சென்றான்.

மிகவும் பணிவான மெல்லிய குரலில் " மாமா ! என்னை மன்னிச்சுடுங்க. அத்தை நீங்களும் தான். நான் உங்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செஞ்சுட்டேன். மாலா மீது நான் வச்சிருக்கும் உண்மையான அன்பையும்  பாசத்தையும் என்னோட அப்பாவின் சுய நலத்திற்காக எனது அறிவை அடகு வச்சுட்டேன். நீங்க இந்த நகையும் பணத்தையும் சேர்க்குறதுக்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பீ ங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நான் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டேன். மாலா நீயும்  தான் என்னை மன்னிக்கணும்! இந்த பணம் , நகை யார் யார்கிட்டே கடனா வாங்குனீங்களோ அவங்ககிட்டே திருப்பிகொடுத்து கடன அடைச்சிடுங்க. என்னோட அப்பாவின் வறட்டு பிடிவாதத்திற்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். சபையிலே சொன்ன சொல்லை காப்பாற்றாத பெரியவங்களுக்கு இது ஒரு சரித்திரமா விளங்கட்டும். மாமா ! உங்ககிட்டே நான் வாக்கு கொடுத்தது போல் உங்க பொண்ணை கட்டின புடவையோட அழைச்சுட்டு போய் காலம் பூராவும் ராணி போல அவளை பார்த்துக்குவேன். அவளோட பற்றி இனி யாருக்கும் கவலை வேண்டாம். சுந்தந்திர பறவைகள் போல நாங்க வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழுவோம்." என்று நீண்டு பேச ..

"என்னடா சொல்லுறே? உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சுடுச்சா? "

"அப்பா.. பைத்தியம் எனக்கில்லை ! உங்களுக்குத் தான்.! நகை , பணம் மேல் பைத்தியம்! இத்தனை நாட்கள் நான் எதுக்காக பொறுத்தேன்னா   நீங்க என்னை பெத்த கடனுக்காக !  உங்கள் சொல்லை மதிக்கிற மகனாக இருக்கணும்கிற ஒரே காராணத்திற்காக ! உங்களுக்கும் ஊருக்கும் நல்ல பையனா  நடந்துக்கனும்ன்னு உங்க பேச்சை தட்டாம உங்க போக்குப்படி ஆடினேன். இப்போ உங்க மகனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனி எனக்கும் தனியாக பொறுப்பு வந்திருச்சு. என்னை நம்பி, என்னோடு  கைபிடுச்சு வரும் மாலாவுக்கு நல்ல புருஷனா, சொன்ன சொல்லுபடி நடந்துகொள்ளும் ஒரு யோக்கியனா இருக்கனும்ன்னு ஆசைபடுறேன். அப்போ தான் எங்க வாழ்கையிலே எப்போது வசந்த காற்று வீசிட்டே இருக்கும்.உங்களோட நான் இருந்தா உங்களோட புத்தி எனக்கு வந்தாலும் வந்துவிடும். மாலாவோ அல்லது அவளை பெத்தவங்க உங்களை மன்னிச்சாலும் என்னாலே உங்களை மன்னிக்கவே முடியாது!" நீண்ட எழுச்சிமிக்க வார்த்தைகள் பேச பேச மாலாவின் புயலாக இருந்த எண்ணங்கள் பூப் போல மலர ஆரம்பித்தது.அவள் மனம்  'இவன் தங்க மகனல்ல. தெய்வ மகன்' என்று சொன்னது.  















57 A  வட்டப் பேருந்து சற்று அதிகமான பயணிகளைத் தாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் ..

"எல்லோரும் டிக்கெட்களை கேட்டு வாங்கிக்குங்க. கண்டக்டர் வரலேன்னு சொல்லிடாதீங்க" என்று அத்தனை கூட்டத்திலும் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார். அவரே மேலும் " பஸ் ஸ்டாண்டிலே 'செக்கர்' இருப்பாரு, எல்லோரும் அவங்க அவங்க டிக்கெட்டுகளை கையில் எடுத்து வைச்சுகுங்க" என்று டிக்கெட் வாங்காமல் இருப்பவர்களை கடைசியாக மறைமுகமாக எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார்.

பேருந்து நிலையத்தை நோக்கி உள்ளே சென்று அதற்குரிய நடை மேடையில் ஓட்டுனர் பேருந்தை நிறுத்த, டிக்கெட் பரிசோதகர் வாசலில் நின்று "எல்லாரும் அவரவர் டிக்கெட்டுகளை காட்டுங்க"என்று ஒவ்வொருவரையாக அவரவரின் டிக்கெட்டுகளை  சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பக்கதிதில் பேருந்து நடத்துனர் நின்று கொண்டிருந்தார்.

"என்ன கண்டக்டர்! எல்லோருக்கும் டிக்கெட் போட்டுட்டீங்களா? 'லாக் சீட்' காட்டுங்க" என்று மேலோட்டமாக எந்தெந்த நிறுத்தத்தில் எந்தெந்த விலையில் டிக்கெட் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்துவிட்டு "எல்லா பாசிஞ்சர்களை கீழே இறங்கியாச்சா?" ஒரு குரல் கொடுத்தார் பரிசோதகர்.

"இல்லே சார்! பாதி கூட்டம் உள்ளே இருக்கு" என்று பதிலளித்தார் கண்டக்டர்.

ஒரு பயணி டிக்கெட்டை காட்ட, அதை பார்த்த டிக்கெட் பரிசோதகரோ "இது இந்த பஸ்ஸில் கொடுத்த டிக்கெட் இல்லே. இன்னொரு டிக்கெட் இருக்கும். நல்லா பாருங்க" என்றார்.

அவரும் சட்டைப் பையை துலாவியபடி "இந்த டிக்கெட்டா ?" என்று காட்ட "ஆ.. சரி இந்த டிக்கெட் தான்" என்று அவரை அனுப்பினார்.

கடைசியாக ஐந்து மாணவர்கள் செக்கரின் முன் நின்றார்கள்.அதில் ஒருவன் தன டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருந்தான்.

முதலானவனிடத்தில் "எங்கேப்பா உன்னோட டிக்கெட்?"

"டிக்கெட் வாங்கலே சார்!"

"என்ன டிக்கெட் வாங்கலேயா ?"

" உங்க அப்பா பேரு என்ன?"

" டாக்டர் சீதாபதி சார். இந்த ஊரிலே பெரிய டாக்டர்!  தெப்பக்குளம் பக்கத்தில் இருக்கிறாரு"

" ஓ .. அந்த டாக்டரா! அட எங்களோட பேமிலி டாக்டர். ஏன்பா, நீ எல்லாம் வண்டியிலே வராம ஏம்பா பஸ்ஸிலே ..?"

"வண்டி ரிப்பேர் ! அதனாலே பஸ்ஸிலே வந்தேன்"

"சரி.. சரி கண்டக்டர் இவன் நம்ம பையன். விட்டிடுங்க. நீ போப்பா ! அப்பாவை ரொம்ப கேட்டதாகச் சொல்லுங்க" என்று அவரை அனுப்பி 

இரண்டாமவனிடத்தில் 

"நீ ஏன்பா டிக்கெட் எடுக்கலே? உங்கப்பா பேரு என்ன? என்ன வேலையிலே இருக்கிறாரு?"

"சார்! என்னோட அப்பா பேரு சப் -இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம். பி 2 விலே இருக்கிறார்!"

"அவரோட பையனா? இந்த மாசம் ப்ரோமோசன் வரும்னு சொன்னாரு. வந்துடிச்சா?"

" இன்னும் வரலே சார்! அதைத் தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்" 

"சரி.. சரி நீ போகலாம். இன்னொரு தடவை இப்படி செய்யகூடாது சரியா?" என்று செல்லமாக அதட்ட அவனும் தலையாட்டிக் கொண்டே நடையைக்கட்டினான்.

மூன்றாமவனிடத்தில் .

"சார் என்னுடைய அப்பா பேரு ராஜ குரு. இரண்டாவது வார்டு கவுன்சிலர்!"

"அடடா ...உங்கப்பாவைத் தான் பார்க்கணும்ன்னு நினைச்சேன். ஒண்ணுமில்லே தம்பி! அடுத்த மாசம் வீடு கட்டணும்னு ப்ளான் வச்சிருக்கேன். அதுக்கு உங்கப்பாவோட உதவி தேவை. அப்பா கிட்டே சொல்லி வை. வீட்டிலே வந்து பார்க்கிறேன். நீங்க போகலாம் தம்பி" என்று அனுப்பிவிட 

நான்காமவனிடம்..

"சார் ! நான் தாசில்தார் சதாசிவமோட பையன் !!!"

" ரேசன் கார்டு விஷயமா பார்க்கணும்னு. சரி நீங்க கிளம்புங்க ராஜா! எதுக்கும் இன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு வர்றேன். ம் ...அடுத்து .."

ஐந்தாமவனிடம் 

"சார் ! எங்கப்பா பேரு மாடசாமிங்க. கூலி வேலை பார்கிறாருங்க."

"என்ன கூலித் தொழிலாளியா? அப்ப 'பைன் ' கட்டு."

" சார். என்னோட டிக்கெட் என்னோட பிரண்டு கிட்டே இருக்கு.அவன் தான் எனக்காக டிக்கெட்டை எடுத்தான். அவன் முன்னாடி உள்ள ஸ்டாப்பிலே இறங்கிட்டான். வேணும்னா கண்டக்டர்கிட்டே கேட்டுப் பாருங்க. கடைசியா அவனுக்குத் தான் இரண்டு டிக்கெட் போக மீதி சில்லறை கொடுத்தார்."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போ உன்கிட்டே டிக்கெட் இல்லாததாலே பைன் கட்டு." என்றார் கறாராக!

இதை ஆச்சரியமாக பார்த்த கண்டக்டர், " சார்! டிக்கெட் எடுக்காத அந்த நாலு பசங்களும் வசதியானவங்க. ஆனாலும் அவங்கெல்லாம் ஒன்பது ரூபா கொடுத்து டிக்கெட் எடுக்கலே. அவங்களை விட்டுட்டீங்க. ஆனா கடைசியாக வந்த பையன் ஏழை. ஆனா அவன் சொன்னது உண்மை. இவனோட பிரண்டு இவனுக்காக டிக்கெட் எடுத்துட்டான். இவனை போய் பைன் கட்டச் சொல்றீங்களே, அது நியாயமா?" அந்த ஏழை மாணவனுக்காக பரிந்து பேசினார் கண்டக்டர்.     


"என்னப்பா ! நீ புரியாத ஆளாயிருக்கிரே. அந்த நாலு பசங்களோட அப்பாக்கள் ரொம்ப பெரிய பதவியிலே இருக்காங்க. அவங்களாலே எனக்கு கட்டாயம் ஏதாவது காரியம் ஆகும் அல்லது ஆதாயம் இருக்கும்.  அதுவுமில்லாமே அவங்களை பகைச்சுட்டா என்னோட வேலைக்கு ஆபத்து வந்தாலும் வந்துவிடும். ஆனா இந்த ஏழை பையனோட அப்பா ஒரு கூலித் தொழிலாளி. அவராலே எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. மேலும் அவராலே என்னை எதுவும் பண்ண முடியாது. மேலிடத்திலே இந்த மாதிரி ஒண்ணு இரண்டு கேசுங்க பிடிச்சுக் கொடுத்தாத் தான் நான் இந்த பதவியிலே தங்க முடியும்.அதனாலே இந்த பையன் 'பைன் ' கட்டிட்டா விட்டுவிடுங்க. இல்லாட்டா போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லுங்க" என்று தன் கடமை தவறாத குணத்த்தை அந்த ஏழை பையனிடம் காட்டிச் சென்றான்.


Tuesday, October 29, 2013

enninaivugalin e-pathivu

இங்கிதமாய் வாழ்ந்தும்
                           இனிமையாய் வாழ முடியவில்லையே

விட்டுக் கொடுத்து வாழ்ந்தும்
                                          விருப்பமாய் வாழ முடியவில்லையே

பொறுமையாய் வாழ்ந்தும்
                                போராடாமல் வாழ முடியவில்லையே

சிந்தித்து வாழ்ந்தும்
                    சிறப்பாய் வாழ முடியவில்லையே

வாழ முடியா வாழ்க்கை வாழ்ந்தும்
............................................................முடியவில்லையே