Saturday, August 25, 2012
Sunday, August 19, 2012
en ninaivugalin e -pathivu --ashokamithran
8-8-12 ஆனந்த விகடனில் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரனின் பேட்டி வெளியாகியிருந்தது.
அசோகமித்திரனைப் போன்ற இலக்கியவாதிகளுடனான நேர்காணல் எல்லா வாசகர்களையும் முக்கியமாக எழுத்தாளர்களையும் கவரக்கூடியது என்பதில் சந்தேகமில்லை.
எந்தவித ஒளிவு மறைவுமில்லாமல் தன்னை அவர் வெளிப்படுத்திக் கொள்ளும் பாங்கு பலராலும் சிந்திக்கத்தக்கது.
சிலரது பேட்டிகளைப் படித்தால் 'ஓஹோ இந்த ஆள் இத்தனை விஷயங்களை உடையவரா எல்லாம் உண்மையாய் இருக்குமா? டமாரம் அடித்துக்கொள்கிறாரா? பெரிய கொம்பனோ என்றெல்லாம் தோன்றும்.
அசோகமித்திரன் விதிவிலக்கு. அவரது இலக்கியம் சிகரத்தை தொட்டுக்கொண்டிருந்தாலும் அவரது அடக்கமான இயல்பும் எளிமையும் மனிதநேயமும் பறைசாற்றிக்கொள்ளாத காந்தியமும் அவருடைய பேட்டிகளில் எப்போதும் காணப்படும்.
விகடனுக்கு அவர் அளித்த பேட்டிகளிலிருந்து சில பகுதிகள் :
கேள்வி : இந்த வயதில் இருந்து பார்க்கும்போது, வாழ்க்கை எப்படி இருக்கிறது?
பதில் : ரொம்பச் சோர்வாக இருக்கிறது. தள்ளாமையும் வியாதிகளும் வலியும் கொல்கின்றன. உலகம் விடை கொடுத்துவிடாதா என்று காத்திருக்கிறேன்.
கேள்வி : வாழ்க்கை ஒரு சாமானியனுக்கும் படைப்பாளிக்கும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறதா?
பதில் : ஷேக்ஸ்பியரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால், கவித்துவமாக ஏதாவது சொல்லி இருப்பார். படைப்பாளி என்ன பெரிய படைப்பாளி? அவரவர் வாழ்க்கை அவரவருக்கு."
கேள்வி : உங்கள் அறுபது ஆண்டு எழுத்து வாழ்க்கை திருப்தியைத் தருகிறதா?
பதில் : இதுவரைக்கும் ஒன்பது நாவல்கள், முந்நூற்றிச் சொச்ச சிறுகதைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். என்னுடைய எழுத்து மேல் திருப்தி இருக்கிறது. வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது. ஆனால், என் எழுத்தைப் படித்துவிட்டு எழுத்தாளனாகப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு யாராவது என்னைப் பார்க்க வந்தால் மட்டும் எனக்குப் பொல்லாத கோபம் வரும். 'போடா மடையா... உருப்படியாக ஏதாவது வேலையைத் தேடிக்கொள்' என்று கத்தத் தோன்றும். நான் எப்படியோ வாழ்ந்துவிட்டேன்... எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கை. மற்றவர்களுக்கு இந்தக் கஷ்டம் வேண்டாம்.
புதுமைப்பித்தன், கு. அழகிரிசரிமி, கு.ப.ரா. எனப் பலர் அந்தக் காலகட்டத்திலேயே புதுப் புது முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தார்கள்... இல்லையா?"
ஆமாம்; ஆனால் அது தொடக்கம்தான். செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருந்தது.
இதிகாசங்களும் புராணங்களும் நிறைந்த இந்தியாவில், தத்துவ விசாரணைகளைக் களமாகக் கொண்ட ராபர்டோ கலாஸோவின் 'க' போன்றோ, ஒரு பெரிய பரப்பில் இயங்கும் மார்க்வெஸின் 'ஒன் ஹன்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்' போன்ற படைப்புகளோ குறிப்பிடத்தக்க அளவில் வரவில்லையே... ஏன்?
முதலில், அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்க ஒரு படைப்பாளிக்குப் பெரிய துணிச்சல் வேண்டும். இரண்டாவது, சமூகத்தில் அதற்கான தேவை இருக்க வேண்டும். இதிகாசங்கள், புராணங்கள் எல்லாம் இருப்பது வாஸ்தவம்தான். மக்களின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதும் முக்கியம் இல்லையா? ஆனால், பெரிய தளத்தில் இயங்கும் படைப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. மார்க் வெஸினுடைய 'ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆஃப் சாலிட்யூட்'டை விடவும் அவருடைய 'தி ஜெனரல் இன் ஹிஸ் லாபரின்த்' அற்புதமான படைப்பு."
பொதுவாகவே, தமிழ்ப் படைப்பாளிகள் சமகால வரலாற்றைப் பற்றி அலட்டிக்கொள்வது இல்லை... நீங்கள் உட்பட ஏன்?
சம கால வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. சம காலத்தின்மீது - இன்றைக்கு நடந்துகொண்டு இரக்கும் ஒரு விஷயம் சரியானதா, தவறானதா என்று முடிவெடுக்கக் குறைந்தது 20 வருஷங்கள் தேவைப்படுகின்றன. அதற்குள் அடுத்த சம காலம் வந்துவிடுகிறது. இன்றைய அரசியல் செயல்பாடுகளைப் பற்றி இன்றைக்கே ஒரு முடிவுக்கு வந்து எழுதி விடுவது பெரும்பாலும் தவறாகவே முடிகிறது."
இப்போதும் முன்புபோல வாசிக்கிறீர்களா?
எந்தச் சூழலிலும் வாசிப்பை விட முடியாது. ஒரு நாளைக்கு அரை மணி நேர் எழுதுவேன். எப்படியும் வாரத்துக்கு இரண்டு புத்தகங்களாவது வாசித்துவிடுவேன்.
உங்கள் அளவில் நல்ல இலக்கியத்துக்கான வரையறை என்ன?
மனிதன் மீது அக்கறை காட்டுகிற எல்லாமே இலக்கியம்தான். மனிதர்களைப் பிரிக்கிற எதுவுமே இலக்கியம் இல்லை.
தமிழில் இப்போது எழுதுபவர்களில் நம்பிக்கை அளிப்பவர்களாக யாரைக் கருதுகிறீர்கள்?
ஜெயமோகன். அவருக்கு இருக்கும் அனுபவங்களும் வாசிப்பும் இன்னும் அவரைப் பெரிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று நினைக்கிறேன். ஆனால், படைப்புகளைத் தாண்டி அவர் எழுதுவதும் பேசுவதும்... ம்ஹூம்...
நாட்டு நடப்புகள், அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் அதிகம் விமர்சித்தது இல்லையே?
வாழ்க்கையோடு முட்டி மோதி நின்றவன் அல்ல நான். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்தவன். அரசியலையும் அப்படித்தான் பார்த்தேன்.
இந்திய நடுத்தர வர்க்கத்தைப் பற்றி அதிகம் எழுதியவர் என்ற முறையில் சொல்லுங்கள்.. நம்முடைய நடுத்தர வர்க்கம் கைவிட வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
இந்திய நடுத்தர வர்க்கத்தால் எதையும் கைவிட முடியாது. அவர்கள் இந்த நிலையிலேயே இருப்பதைத்தான் ஆளும் வர்க்கம் விரும்புகிறது. அதுதான் யார் யாரை எந்தெந்த நிலையில் வைக்கலாம் என்று தீர்மானிக்கவும் செய்கிறது.
சமூகத்தில் ஒருபுறம் அற உணர்வுகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்ககொண்டு இருக்கிறது. மறுபுறம் கோயில்கள், திருவிழாக்களில் கூட்டம் குவிகிறது; சாமியார்கள் சாம்ராஜ்யங்களை உருவாக்குகிறார்கள். ஓர் இறைநம்பிக்கையாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் எந்த ஆட்டோவிலாவது மீட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறதா. ஆனால், சபரிமலை சீஸனில் போய்ப் பாருங்கள். ஆட்டோக்காரர்களில் முக்கால்வாசிப் பேர் மாலை போட்டு இருப்பார்கள். திருப்பதியில் பெருமாள் உண்டியலில் லட்ச லட்சமாகப் போடும் முதலாளிகளில் பாதிப் பேர் தன்னுடைய தொழிலாளிகள் வயிற்றில் அடிப்பவர்கள். மக்கள் அற உணர்வையும் ஆன்மிகத்தையும் பிரித்து விடடார்கள்.
|
திடீரென ஒரு நாள் விஞ்ஞானிகள் கடவுள் இல்லை என்பதை அறிவியல்ரீதியாக நிரூபித்து அறிவித்தால், அதற்குப் பின் இந்த உலகம் எப்படி இருக்கும்?
நான் ஒரு நாள் கோமாவில் இருந்திருக்கிறேன். அந்த நாளை ஞாபகப்படுத்திப் பார்க்கும்போது, ஒன்றுமே இல்லாத சூழலில் இருந்த மாதிரிதான் உணர்கிறேன். கிட்டத்தட்ட சாவுக்குப் பிறகான நிலை அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நாம் ஒன்றுமே இல்லை என்பதுதான் பெரிய உண்மை. என்னுடைய சாம்பலைக் கூடத் திரும்பிப் பார்க்காதீர்கள் என்றுதான் என் குடும்பத்தாருக்கே சொல்லி இருக்கிறேன். ,இந்த உலகத்தை ஏதோ ஒரு சக்தி, அவன் அல்லது அவள் அல்லது அது ஆள்கிறது என்று நம்புகிறோம். அதுவும் இல்லாமல் போனால்.... எனக்குச் சொல்லத் தெரியவில்லை!
Subscribe to:
Posts (Atom)