Saturday, October 14, 2017

Enninaivugalin epathivu.....story

*





*உன்னுடன் அதிக நேரம் இருப்பவர் யார்?*

நள்ளிரவில் 100 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் திடிரென்று நின்றது..!!

 டிரைவர் சீட்டுக்கு பக்கத்து சீட்டில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்த என் நண்பரை டிரைவர் தட்டி எழுப்பினார்,

“சார் பின்னாடி போய் உட்காருங்க.

நீங்க தூங்கி தூங்கி வழியறத பார்த்தா எனக்கும் தூக்கம் வருது”.

தூங்கி கொண்டிருந்த நண்பர் பின்னால் உட்கார்ந்து,
விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தார்.

என்னால் தான் தூங்க முடியவில்லை. டிரைவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்..!!

*பல நேரங்களில் நம் செயல்பாடுகள் கூட நம் பக்கத்தில் இருப்பவரை பொறுத்துத்தான் இருக்கிறது...!!!*

 *சுறுசுறுப்பான மனிதர்கள் அருகில் இருக்கையில் மெள்ள அந்த சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...*

 *சோம்பேறிகள் பக்கத்தில் இருக்கும்போது மெல்ல மெல்ல அந்த சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.*

 *இந்த லாஜிக்கால் தான் தூங்குபவரை பக்கத்தில் வைத்துக்கொள்ள டிரைவர்கள் விரும்புவதில்லை..*

எனவே முன்னேற விரும்பினால் நீங்களும் *யோசியுங்கள்*,

உங்கள் பக்கத்தில் இருப்பது *யார்..?*

 *உற்சாகமானவரா..? சுறுசுறுப்பானவரா..? நம்பிக்கையானவரா?  விரக்தி எண்ணம் உள்ளவரா?*

*இடித்துரைக்க, எடுத்து சொல்ல நல்ல மனிதர்களை தன் அருகில் வைத்துக் கொள்ளாததாலேயே வீழ்ந்தவர்கள் பலர்..!!*

*மிகப் பெரிய வணிக சாம்ரஜ்யங்களை ஆண்டவர்கள் தங்கள் பக்கத்தில் இருந்த தவறான நபர்களால் வீழ்ந்திருக்கிறார்கள்.*

எனவே உங்களுக்கும் உங்கள் வெற்றிக்கும் இருக்கும் தொடர்பை போலவே உங்கள் அருகில் இருப்பவருக்கும் கூட தொடர்பு இருக்கிறது.

*லட்சியம் இல்லாத வர்களை நண்பர்களாக ஏற்காதீர்கள்*.

*லட்சியமும் அதை அடையவேண்டும் என்று எப்போதும் துடிப்பவர்களாக தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.*

*உங்கள் அருகில் உள்ளவர்களால் நீங்கள் உற்சாகம் பெருவதைப் போலவே...!!!*

 *உங்களைப்பார்த்து மற்றவர்களும் எழுச்சி பெற வேண்டும் என்று நினையுங்கள்...!!!*

எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள். உங்கள் அருகில் இருக்கும் அனைவரும் உற்சாகம் அடைந்தால் உங்களின் அருகாமையினை அனைவரும் விரும்புவார்கள்.

*கொஞ்சம் கண்ணைத்திறந்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் இருப்பது யார்...?*

யாராக இருந்தாலும் ஒன்று உங்களை உற்சாகப்படுத்து பவராக இருக்க வேண்டும் அல்லது உங்களால் உற்சாகம் பெறுபவராக இருக்க வேண்டும்.

*தீதும் நன்றும் பிறர்தர வாரா.

-படித்ததில் பிடித்தது.

நசிகேதன்*

பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு, நம் வாழ்வில் நடந்துவிட்டது. மரணம் ஒரு புதிராகவே இருக்கிறது. மரணம் என்றால் என்ன? அப்போது மனிதனுக்கு என்ன நேர்கிறது? அதன் பின் அவன் என்ன ஆகிறான்? இதுபோன்ற கேள்விகள் எல்லா காலகட்டத்திலும் எழுந்து வந்திருக்கின்றன. விடைகளுக்கான தேடலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கட உபநிஷதம் தனக்கென்று ஒரு கோணத்தை எடுத்துக்கொண்டு மரணத்தை ஆராய்கிறது.

*சிறுவனின் கேள்வி*

வேத காலத்தில் வாஜசிரவஸ் என்பவர் வாழ்ந்துவந்தார். அவருடைய புதல்வன் நசிகேதன். வாஜசிரவஸ் இவ்வுலகையே ஆளும் பேரரசன் ஆக விருப்பம் கொண்டார். அந்தப் பலனைத் தரும் விசுவஜித் என்ற யாகத்தைச் செய்தார். விசுவஜித் யாகத்தின் நிபந்தனை விசித்திரமானது. உலகில் உள்ள அனைத்தையும் ஆளும் சக்தி பெறவே இந்த யாகம். ஆனால், அது நிறைவேற வேண்டுமென்றால் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். அனைத்தையும் துறக்கச் சித்தமாக இருப்பவனுக்குத்தான் அனைத்தும் உரிமையாக இருக்க முடியும்.

நிபந்தனைப்படி வாஜசிரவஸ் அனைத்தையும் தானம் செய்தார். ஆனால், தனக்கு உதவாதவற்றைத் தானம் என்ற பெயரில் கொடுத்தார். உதாரணமாக அந்நாட்களில் பசுக்களின் எண்ணிக்கையே ஒருவரின் செல்வச்செழிப்பை நிர்ணயிக்கும். எனவே, பசுவைத் தானம் செய்வது சிறந்தது. இவரோ, மரணத்துக்காகக் காத்திருக்கும் கிழப் பசுக்களைத் தானமாக அளித்தார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல; தானத்தின் அடிப்படைக் கருத்தைச் சரியாகக் கடைப்பிடிக்காததால் இரட்டைத் தவறுகள் செய்தார்.

அவருடைய மகன் நசிகேதன் அனைத்தையும் கவனித்தான். தந்தையிடம் சென்று, “அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டான். சிறந்தவற்றைத் தானம் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக மூன்று முறை கேட்டான். கோபமுற்ற வாஜசிரவஸ், “உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்” என்றார்.

*எமலோகப் பயணம்*

தந்தை கோபத்தில் சொல்லி இருந்தாலும், அவர் சொன்னபடி எமனிடம் போக வேண்டும் என்று நசிகேதன் தீர்மானித்தான். இம்முடிவைத் தன் தந்தையிடம் கூறினான். அவர் தான் கோபத்தில் கூறிய வார்த்தைகளை எண்ணி வருத்தமுற்றார். அவருக்கு ஆறுதல் கூறிய நசிகேதன், “வாழ்க்கை நிலையற்றது. மனிதன் செடி கொடிகளைப் போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் உறுதி. எனவே, நான் எமலோகம் செல்வதைப் பற்றிக் கலங்க வேண்டாம்” என்றான்.

நசிகேதன் எமலோகத்தை அடைந்தபோது, எமன் அங்கு இல்லை. எனவே, எமனின் மாளிகையின் முன் மூன்று நாட்கள் காத்திருந்தான். எமன் வந்ததும் மந்திரிகள் மூலம் செய்தி அறிந்தான். நசிகேதனை நோக்கி, “விருந்தினரான நீ மூன்று நாட்கள் உணவின்றித் தங்க நேர்ந்தது நான் செய்த குற்றம். அப்பழியைப் போக்க, என்னிடமிருந்து மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்” என்றான்.

*நசிகேதனின் மூன்று வரங்கள்*

நசிகேதன் தெளிவான மனதுடன் எமதர்மனை நோக்கி, “உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை, என் தந்தை ஏற்றுக்கொண்டு, மனக்கவலையின்றி, தெளிந்த மனத்துடன் கோபம் அற்றவராய் என்னிடம் பேச வேண்டும். இதுவே எனது முதல் வரம்” என்றான். எமதர்மனும், “என் அருளால் உன் தந்தை உன்னை முன்பு போலவே ஏற்றுக்கொள்வார்” என்று வரம் தந்தான்.

அதன் பின் நசிகேதன், “எமதர்மனே! சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவ தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப் பற்றிச் சொல்வாயாக. இதுவே எனது இரண்டாவது வரம்” என்றான்.

எமதர்மன், “நசிகேதா, சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் யாகத்தைப் பற்றிச் சொல்கிறேன். விழிப்புற்றவனாகக் கேள். சொர்க்கத்தைத் தருவதும் பிரபஞ்சத்துக்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது. அதாவது புறக்கிரியையாகச் செய்யும்போது, சொர்க்கத்தைத் தருகிற அதே யாகம், அக அக்கினியாக, ஆன்ம அக்கினியாகக் கொண்டு வித்யையாகச் செய்யப்படும் போது பிரபஞ்சத்துக்கு ஆதாரமான இறைவனை அடையும் சாதனை ஆகிறது.” என்றான்.

யாகம் செய்யும் வழிமுறைகளை உபதேசித்தான். நசிகேதன் அழகாய்ப் புரிந்துகொண்டு திருப்பிச் சொல்லவும், எமதர்மன் அகமகிழ்ந்தான்.

அந்த யாகம் நசிகேத யாகம் என்றே இனி விளங்கும் என்றான். மேலும், பல யாகங்களின் அறிவைக் குறியீடாக உணர்த்தும் பல வண்ண மாலை ஒன்றையும் வழங்கினான்.

நசிகேதன், “மரணத்துக்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே” என்றான்.

*மரணத்துக்குப் பிறகு*

எமதர்மன் ,“நசிகேதா, நீ வேறு எந்த வரம் வேண்டுமானாலும் கேள். பூமியில் உள்ள எல்லாச் செல்வங்களையும் அரசையும் கேள். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வாழ்ந்துகொள். மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே” என்றான். நசிகேதன் தெளிவாக, “உலகின் இன்பங்கள் நிலையற்றவை. ரகசியமாய் வைக்கப்பட்டுள்ள இவ்வுண்மையை நான் அறிய வேண்டும் . வேறு எந்த வரமும் வேண்டாம்” என்றான்.

எமதர்மன் நசிகேதனின் மன உறுதியில் அக மகிழ்ந்து, “நசிகேதா, உண்மையை அடைவதில் உறுதியாய் இருக்கும் உன் போன்ற மாணவர்கள் எங்களுக்குக் கிடைக்க வேண்டும். லட்சியத்தை அடைவதற்கான மந்திரம் ‘ஓம்’ ஆகும். உடம்பு, உயிர், ஆன்மா என்ற மூன்றின் சேர்க்கையே மனிதன். பொதுவாக மரணம் என்று குறிப்பிடப்படுவது உடம்பின் மரணம் மட்டுமே. உடம்பின் மரணத்துக்குப் பின்னரும் ஆன்மா வாழுகிறது. ஆன்மா பிறப்பற்றது; நிலையானது; அழியாதது” என்றான்.

மேலும், “மரணத்துக்குப் பிறகு சில உயிர்கள் மனித உடம்பைப் பெறுகின்றனர். சில உயிர்கள் தாவரம் போன்ற நிலைகளை அடைகின்றனர். வினைப்பயனும் பெற்ற பிறவியும் எப்படியோ அப்படியே அடுத்த பிறவி அமையும்.”

*ஆன்ம அனுபூதி*

ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது. அதே வேளையில் அந்த வடிவங்களுக்கு வெளியேயும் திகழ்கிறது. ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம். உணர வேண்டியது. இறைவன் பேராற்றலின் உறைவிடம் என்பதை அறிய வேண்டும். அவ்வாறு உணர்பவன் மரணமில்லாப் பெருநிலையை அடைகிறான்.

மனதைச் சார்ந்திருக்கும் எல்லா ஆசைகளும் விலகும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான். மனதின் எல்லா முடிச்சுகளும் அவிழும்போது மனிதன் மரணமற்றவன் ஆகிறான்”-இவ்வாறாக எமதர்மன் தனது உபதேசத்தை நிறைவு செய்தான்.

இதைக் கேட்டு, பின்பற்றிய நசிகேதன் மரணமற்றவன் ஆனான். சிரத்தையுடன் தேடுதல் செய்து, கண்டடைந்தவற்றைத் தெளிவாய் உணர்ந்து, வழுவாமல் பின்பற்றினால் அனைவரும் நசிகேதன் ஆகலாம்.


அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை..!

திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது..!

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..!

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது..!

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்..!

ஏனென்று கேட்டபோது சொன்னாள்:-

நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்..!

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...!

அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்,

“அன்பு என்றால் இது தான்"

ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...!

எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...!

நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...!

ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்...!

ஆனால் உலகம்  அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...!

 அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...!

Monday, October 9, 2017

Enninaivugalin epathivu...story

அமெரிக்காவை அலற வைத்த அப்துல் ஹமீது.!

1965-ல் நடந்தஇந்தியா,பாக் போர், டாங்கிகளிடையே நடந்த தாக்குதல்களுக்குப் பிரசித்தி பெற்றது. அதிலும் குறிப்பாக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 471 பேட்டன் டாங்கிகள் அழிக்கப்பட்டு, பலது கைப்பற்றப்பட்ட சம்பவம் உலக இராணுவ வரலாற்றில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.

போர்முனையில் நடந்த அனைத்து மோதல்களிலும் 'அசல் உத்தர்' என்று குறிப்பிட்ட தாக்குதல் மிகப் பிரசித்தி பெற்றது. அத்தாக்குதலின் எதிரொலியாகவே பாகிஸ்தானின் பல பேட்டன் டாங்கிகள் கைப்பற்றப் பட்டன. போரில் சிதைக்கப்பட்ட டாங்கிகள் பல, போர் முடிந்த பின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தார்ன் தரன் (Tarn Taran) மாவட்டத்தில் உள்ள கேம்கரண் என்ற ஊரில் குவிக்கப்பட்டன. 'பாக் டாங்குகளின் கல்லறை' என்றும், 'பேட்டன் நகர்' என்றும் அந்த ஏரியாவுக்குப் பெயர் சூட்டி, இந்திய இராணுவத்தினரின் வீரத்துக்குச் சாட்சியாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
யுத்தத்தில் 'அசல் உத்தர்' என்றால்... அது அசல் தியாகிகளின் சாதனையாகத்தானே இருக்க முடியும்? இங்கேயும் இருந்தார் ஒரு தியாகி... அவர்தான் ஹவில்தார் அப்துல் ஹமீது. அவருடைய வீரத்தாக்குதல்தான் போரின் திசையையே மாற்றி விட்டது. எது பாகிஸ்தானின் வலிமை என்று அவர்கள் இறுமாந்திருந்தார்களோ... அதைத் தகர்த்தெறிந்தவர் ஹவில்தார் அப்துல் ஹமீது!

அவருடைய மிக நுணுக்கமான பார்வை, படுதந்திரமான தாக்குதல் முறை, பாகிஸ்தானை மட்டுமல்ல... அமெரிக்காவையே அலற வைத்து விட்டது.
மாவீரன் அப்துல் ஹமீது, ஜூலை 1, 1933 அன்று உத்திரப்பிரதேச மாநிலம், தாமுப்பூர் என்ற கிராமத்தில் உஸ்மான் ஃபரூக்கி என்ற ஓர் ஏழை போலிஸ்காரரின் மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த பின், இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். 1954-ம் ஆண்டு கிரெனெடியர்ஸ் படைப் பிரிவில் சேர்க்கப் பட்டு, பதவி உயர்வு பெற்று, ஹவில்தார் (ஏட்டு) அந்தஸ்தில் அவர் பணி புரிந்து வந்த நிலையில்தான் 1965-ல் யுத்தம் வெடித்தது. பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த முதல் சிறப்பு ஆயுதப் படைப் பிரிவின் திட்டம் - பஞ்சாப் மாநிலத்தின் தார்ன்தரன் மாவட்டத்தின் உள்ளே ஊடுருவித் தாக்கி, தங்கள் பேட்டன் டாங்கிகளின் வலிமையினால் விறுவிறுவென முன்னேறுவது! அமெரிக்காவின் பெருமைக்குரிய தயாரிப்பான பேட்டன் டாங்கிகள் பலநூறு அணிவகுத்துச் செல்ல, பல்லாயிரம் போர்வீரர்களுடன் தாக்குதலை ஆரம்பித்தது பாகிஸ்தான்.

சரியாகச் சொல்வதானால், 'அசல் உத்தர்' என்ற அந்த சாதனைத் தாக்குதல் செப்டம்பர் 6-ம் தேதி அரங்கேறியது. அப்துல் ஹமீது பங்கு பெற்றிருந்த கிரெனெடியர்ஸ் பிரிவு முதலில் நடுங்கித்தான் போனது. பாகிஸ்தான் இராணுவ பேட்டன் டாங்கிகள் அப்படியொரு குண்டு மழை பொழிந்தன. எங்கும் வெடிச்சத்தம் பயங்கரமாக எதிரொலித்தது. நமது படையினரால், பழைய ஷர்மன் டாங்கிகளைக் கொண்டு தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கேம்கரண் டவுன் பாகிஸ்தான் படையின் வசமானது. எதிரிப் படையினர் மெதுவாக கேம்கரணிலிருந்து சீமா கிராமத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தனர். நிலைகுலைந்து போயிருந்த நம் படைவீரர்களுக்கு உற்சாகம் தரும் குரலாக ஒலித்தது அப்துல் ஹமீதின் அழைப்பு! "ம்... ம்... வாருங்கள்... அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தாக்குதலைப் பதிலடியாகத் தரப் போகிறோம்" என்று கூறிக்கொண்டே தம் ஜீப்பில் ஏறிப் பாய்ந்தார் ஹமீது. சற்றுத் தயக்கத்துடன்தான் பின்தொடர்ந்தனர் அவரது படைப்பிரிவினர்.

புராணக் கதைகளில் நாம் கேட்டிருப்போம் - எத்தனை பெரிய வீரனுக்கும் எங்கேனும் ஓரிடத்தில் பலவீனம் இருக்குமென்று! கிருஷ்ணனுக்குக் கால் விரலில், கிரேக்க மாவீரன் அக்கிலஸுக்குக் குதிகாலில் என்றெல்லாம் உதாரணங்கள் உண்டு. சர்வ வல்லமை பொருந்தியதாகக் கருதப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பு பேட்டன் டாங்கிகளுக்கு அந்தப் பலவீனம் அவற்றின் பினபுறத்தில் இருந்தது. அவற்றின் பினபுறத் தடுப்புத் தகடு அத்தனை உறுதியாக இல்லாமல், மெல்லியதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பலவீனத்தை எப்படியோ கண்டறிந்து விட்ட அப்துல் ஹமீது, அந்த டாங்கிகளைப் பின்புறமிருந்து தாக்கத் திட்டமிட்டார்.

எதிர்பார்த்தபடியே பின்புறம் போயும் ஆயிற்று... "ட... ட... ட... ட...டுமீல்!" பயங்கர சத்தத்துடன் பேட்டன் டாங்கி வெடிக்கிறது. அத்தனை நவீன டாங்கி, இப்படி 'பிஸ்கோத்து'த் துப்பாக்கித் தோட்டாவுக்கே வெடித்து விடுகிறதே எனத் திகைத்துப் போகிறார்கள் நம் வீரர்கள். ஹமீது மீண்டும் சுடுகிறார்.
"ட... ட... ட... ட...டுமீல்!" இன்னொரு டாங்கி அவுட்.

இப்படியே 9 பேட்டன் டாங்கிகளைத் தனி மனிதராகச் சுட்டு அழித்தார் ஹமீது.
எதிரிகள் திக்குமுக்காடித்தான் போனார்கள். டாங்கிகளை மெதுவாக ரோட்டை விட்டு வயல் வெளியில் இறக்கி அப்படியே பின்வாங்க நினைத்தனர்.
அமெரிக்காவின் ஆயுத நவீனத்தனத்தை நினைத்து நினைத்து அந்த டாங்கிகளை அதுவரை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்த இந்திய வீரர்களுக்கு, இப்படி அவற்றைக் கொசு போலத் தனி மனிதராக அப்துல் ஹமீது நசுக்கியது ஏகமாகவே உசுப்பிவிட்டது. இழந்த நம்பிக்கையை முழுதாகத் திரும்பப் பெற்றவர்களாக ஆக்ரோஷத்துடன் தாக்குதலைத் தொடர்ந்தனர் அவர்கள்.

இந்திய இராணுவத்தால் அந்த இடத்தில அழிக்கப்பட்ட 97 பாகிஸ்தானிய டாங்கிகளில் 9 டாங்கிகள் அப்துல் ஹமீது என்ற தனி ஒரு வீரனால் அழிக்கப்பட்டது.

திரும்ப எத்தனித்து வயல்வெளிகளில் இறங்கிய பேட்டன் டாங்கிகளோ, சேற்றில் சிக்கிக் கொண்டு நகர மறுத்தன. பதில் தாக்குதலைத் தொடர்ந்த இந்தியப் படையினர் கோழியை அமுக்குவது போல் அவற்றைச் சுற்றி வளைத்துப் பிடித்து அழித்தனர்.

ஆனால், அப்துல் ஹமீது என்ற அந்த மாவீரனின் வீரத் தாக்குதல் வெகுநேரம் நீடிக்கவில்லை. பின் வாங்கி ஓடிய பாகிஸ்தான் படையினரின் பீரங்கித் தாக்குதலில், உடல் துளைக்கப்பட்டு அவர் வீர மரணமடைந்தார்.

தமது தனி மனித வீரதீரத்தால், ஒரு யுத்தத்தின் நிலையையும், ஒரு நாட்டின் சரித்திரத்தையும் தம் உயிரைக் கொடுத்து மாற்றி எழுதி விட்டார் அப்துல் ஹமீது. வீரத் தியாகியான அப்துல் ஹமீதுக்கு பாரத நாட்டின் உயரிய வீரப்பதக்கமான 'பரம்வீர் சக்ரா' வழங்கப்பட்டது.அமெரிக்கா பேட்டன் டாங்கி தயாரிப்பை 1966ல் முற்றிலுமாக நிறுத்தியது.!இந்த வரலாற்று தோல்வியை பார்த்து கொண்டிருந்த ஒரு இளம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி பின்னாளில் ஆட்சியை பிடித்தார்.அவர் பர்வேஷ் முஸ்ரப்! அந்த வெஞ்சினம் கார்கிலில் வெளிப்பட்டு தோல்வியை தழுவியது வரலாறு.

அப்துல் ஹமீதுக்கு இந்திய அரசு பரம் வீர் சக்ரா விருது அளித்து பெருமைப்படுத்தியது.

ஜெய்ஹிந்த் அப்துல் ஹமீது.
இந்த மாவீரனின் வீர வரலாற்றை முடிந்தால் ஷேர் பண்ணுங்க.
🇮🇳ஜெய்️ஹிந்த் 🇮🇳
️🇮🇳வந்தே️ மாதரம்🇮🇳️

-இந்திய இராணுவச் செய்திகள்.*


செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்ற முருகன் பாட்டு*

ஒரு புலவர் காளமேகத்திடம் கேட்டார்.
“ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே. உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”

“முருகன் அருளால் முடியும். வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?” என்றார் காளமேகம்.

”வேலிலும் தொடங்க வேண்டாம். மயிலிலும் தொடங்க வேண்டாம். செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்”
என்று குசும்பாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.

என்ன கொடுமை? இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?

அதை தகும் என்றும் , முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.

இப்படி .....

செருப்புக்கு வீரர்களை சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனை புல்ல- மருப்புக்கு
தண்தேன் பொழிந்த திரு தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமாறே "

*செரு* என்றால் போர்க்களம்.
*செருப்புக்கு* என்றால் போர்க்களம் புகும் என்று பொருள்படும்.
அப்படி போர்க்களத்தின் புகுந்த வீரர்களை வெற்றி கொள்ளும் முருகனை அணைத்துக் கொள்ளத் துடிக்கிறது உள்ளம்.
குளிர்ந்த தேன் நிறைந்த தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் வண்டே, அந்த முருகன் இருக்கும் இடத்தை விளக்குமாறே உன்னைக் கேட்கிறேன்.
*விளக்குமாறு* என்பதற்கு விளக்கம் , சொல்லுமாறு என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.....?

இப்படி செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடிகின்றது இந்த முருகன் பாட்டு.....!