Monday, February 18, 2013

enninaivugalin e-pathivu velacherry mall

அமைதி ஏரி'யாக இருந்த வேளச்சேரி, 2002 லிருந்து தொடர்ந்து அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டுவருகிறது. குறிப்பாக பறக்கும் ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எந்த தாமதமுமின்றி 40 நிமிடங்களுக்குள் சென்றுவிட முடிகிறது. சைதாப்பேட்டை, கிண்டி, அடையார், திருவான்மயூர், மீனம்பாக்கம், தாம்பரம் என வேளச்சேரியிலிருந்து மிக விரைவாக சென்றடையக்கூடிய சென்னையின் முக்கிய இடங்கள் உள்ளன. சமீப காலங்களில் போத்தீஸ், தங்கமாளிகை தவிர, வேளச்சேரியில் அனைத்து முக்கிய, பிரபலமான கடைகள், உணவுவிடுதிகள் வந்துவிட்டன.

இங்கு, இரண்டு மில்லியன் சதுர அடி இடத்தில் மிக பெரிய வணிக வளாகம் வரப்போவது தெரிந்ததிலிருந்து எனக்கு பெருமையை விட, போக்குவரத்தை நினைத்து அதிக பயமே இருந்தது. காரணம், பல வருடங்களாகவே அலுவலக நேரங்களில் குருநானக் கல்லூரியிலிருந்து, செக்போஸ்ட் வரையில் போக்குவரத்து நெரிசலில் மண்டை காய்ந்து போயிருக்கிறேன். அந்த சாலை மிகவும் குறுகிய சாலை என்பது இன்னுமொரு மைனஸ். இரண்டு சக்கர வாகனம் கூட எப்படி வேண்டுமானலும் வளைந்து நெளிந்து புகுந்து சென்றுவிட முடியாது. அப்படியொரு சாலையில் இந்த வணிக வளாகம் வருவது எனக்கு அத்தனை எதிர்பார்ப்பை தரவில்லை. அது கட்ட ஆரம்பித்த நாளிலிருந்தே இதே புலம்பல் தான்.


உள்ளே நுழையும் போதே தலையை குனிந்தபடி வண்டியோட்டி செல்லவேண்டியிருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தின் மேல் கூரை அந்தளவு கீழிறங்கி இருந்தது. மேற்கூரை என்னவோ உயரத்தில் தான் இருக்கிறது. அதற்கு கீழே ஏகப்பட்ட தண்ணீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் செல்லக்கூடிய குழாய்கள் என மேற்கூரை நிறைக்கப்பட்டு கீழே இறங்கி வந்துவிட்டது. கண்டிப்பாக இதில் தலையிடித்து மண்டை உடையக்கூடிய அபாயம் அதிகமாகவே உள்ளது. அது யாருக்கு எப்போது நடக்குமென்பதே இப்போதைய கேள்வி.  

உயரம் 5.10- 6 அடி இருக்கும் ஒரு மனிதர் தலை நிமிர்ந்து நிச்சயம் நடக்க இயலாது. வண்டியில் நிமிர்ந்து உட்கார்ந்தும் வண்டி ஓட்டமுடியாது. இதில் நடந்து செல்லும் போதும் "Mind your head" என்ற பலகையை கண்டு உட்சபட்ச கடுப்பிற்கு ஆளானேன். ஏனென்றால் அது குழாய்கள் இணைப்புகள் ஏதுமில்லாத வெறும் கட்டிடத்தின் மேற்கூரையே. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒர் இடத்தில் இப்படி ஒரு மோசமான ஆபாயகரமான கட்டிட அமைப்பு,

இப்பொழுதே இந்த நிலையென்றால், இன்னமும் சத்யம் சினிமாவின் திரையரங்குகள் திறக்கப்பட்டால்..?!!  பல வருடங்களாக வசித்துவந்த, பழகிவிட்ட ஓரிடம்  தீடீரென மாசுப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். இந்த வளாகத்தினால் ஏற்படும் போக்குவரத்தில் வேளச்சேரி ஸ்தம்பிக்க போவதென்னவோ உறுதி.  

எது எப்படியோ, வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் ஒரு மிகப்பெரிய மால்..... வெயில் கொளுத்தும் நாட்களில், சில்லென்று நேரத்தைக் கழிக்க இங்கே சென்றுவிடத் திட்டமிட்டிருக்கேன்.  
 

enninaivugalin e-pathivu amazing photo



good afternoon friends