Friday, November 20, 2020

Enninaivugalin epathivu.பேணுவோம் இயற்கையை

 பேணுவோம்! தலைப்பு என்னவோ யோசித்து விட்டேன்! ஆனால் எந்த ஒரு மையக் கருத்தை எடுத்துக் கொள்வது? மனித நேயத்தையா,அறத்தையா,அன்பையா??


மனிதநேயத்துடன்,அறத்துடன்,அன்புடன், இப்ப நாம் பேண வேண்டியது இதயத் துடிப்புடன் தொடர்புடைய இயற்கையின்  பிடிப்பை..
எனவே,இயற்கையைப் பேணுவோம்.

வாழ்வு வசப்பட பாடுபடு! என முன்னோர் சொன்ன வார்த்தை. ஆனால் நாமோ,பாடுபடாமல் எளிதாக எது கிடைக்கும் என தேடித் தேடி திரிகிறோம்.பணம் தான் சகலமும் என வாழ்ந்து மனிதம் மட்டுமா இழந்தோம்,
இயற்கையையும் அல்லவா அறிந்தே அழித்து இழந்து நிற்கிறோம்.

அனைவருக்கும் தேவை உணவு.கோடிகளில் புரண்டாலும் விளைநிலம் இல்லையேல் அனைவரும் தெருக் கோடி தான்.எனவே  ஆரோக்கியமாக வாழ விவசாயம் கண்டிப்பாக வேண்டும் .

நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் இந்த ஐந்து பூதங்களைச் சுற்றி தான் சுற்றுச்சூழல் செயல்படுகிறது. எனவே,நாம் இந்த ஐந்தையும்  பாதுகாப்பது முக்கியம்.

நிலத்தில் விதையை மட்டுமா விதைக்கிறோம்! பிளாஸ்டிக் என்னும் எமனையும் விதைப்பதால் நிலம் மலட்டுத் தன்மை அடைகிறது.
மேலும், தொழிற்சாலை கழிவுகளால் நிலம் மாசுபடுகிறது.
நாம் வீசும் பிளாஸ்டிக், பாலிதீன், மக்காமல் நிலத்தில் புதையுண்டு,
நிலம் மாசுபட்டு  வீரிய மிக்க செடி 
கொடிகள் வளர்ச்சி தன்மையை இழந்து விடுகிறது.

பல ஆண்டுகளாக  நாம் அனுபவித்த இயற்கை வளங்கள் இன்று குறைந்து வருவதைக் காண்கிறோம்.
வனங்கள்,புல்வெளிகள்,தாதுக்கள்,ஆறுகள்,ஏரிகள்,கடல்கள் ,நுண்ணுயிர்கள், போன்றவை மட்டுமா இயற்கை வளங்கள்..
மழைத்துளியும் கூட இயற்கை வளமே! 
உயிர்கள் படைக்கப்பட்ட போதே அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்ந்தே படைக்கப்பட்டுள்ளன.இவை இல்லாமல்  நாம் வாழவே முடியாது..

இப்படி வாழ அவசியமான வளத்தை அழித்துவிட்டு,யாரோடு, எதனோடு,
எப்படி வாழ போகிறோமோ தெரியவில்லை! 

அதிகரித்து வரும் நகரமயமாதல்,
தொழில்மயமாதல்,மக்கள் பெருக்கம் போன்ற காரணங்களால் இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும்  தாமிரபரணியின் அன்றைய நிலையை கண்டிப்பாக கூறியே ஆக வேண்டும். 
மிகவும் அழகானவள் தாமிரபரணி.
நாங்கள் எங்க குடும்ப
உறுப்பினராகவே எண்ணுவோம்.

ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு அழகு.திருநெல்வேலியில் ஒரு அழகு என்றால் அம்பாசமுத்திரத்தில் நிறைய பாறைகளுடன்,
படித்துறையுடன் கூடிய அழகு. 

இருபுறமும் பச்சைப்பசேல் என வயல் பரப்பு கண்கொள்ளா காட்சி.

கல்லிடைக்குறிச்சி அப்பளம் ருசிக்க  இந்த தாமிரபரணி தண்ணீரே காரணம்.திருநெல்வேலி அல்வா ருசிக்கும் தாமிரபரணியே  காரணம் என சொல்லவும் வேண்டுமா!!

 தாமிரபரணியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்தி செல்வோம்.ஏழை முதல் பணக்காரர் 
வரை அருகருகே குளிப்பர்.

துண்டில் சோப்பு டப்பாவை சுற்றி கேரியரில் வைத்துக் கொண்டு,
சைக்கிளை தள்ளிக் கொண்டே செல்லும் பெரியவர்கள் அழகு!

குளித்து முடித்து ஈர புடவையுடன்
,திருநீறு நெற்றியில் காய்ந்தும் காயாமலும் மணக்க,திருமுறைகளை முணுமுணுத்தபடி திரும்பும் மூதாட்டிகள்  அழகு!

ஆற்றங்கரையிலுள்ள நாவல்மர பழங்களை சாப்பிட்டபடி நாக்கு கலர் மாறிட்டா என்றபடி வீடு திரும்பும் சிறுவர் கூட்டம் அழகு!

ஆத்துக்கு குளிக்க வந்தியா என 
( நமக்கு அசட்டு தனமாக தோன்றும்) கேள்வி கேட்டபடி வீடு திரும்பும் பெண்கள் அழகு..

  ஆனால் இப்ப வீட்டுக்கு வீடு குழாய். 
நதியும் மாசுபட்டு காணப்படுகிறது.
பாறைகளே மிஞ்சி இருக்கின்றன.
நீரின் சுவையும் நாளுக்கு  நாள் மாறி வருகிறது. நதியின் போக்கு மாறியதால் பல இடங்களில் ஓடையாக காட்சியளிக்கிறது. கழிவுகளை தாங்கும் பள்ளமாக மாறி இருப்பது வேதனை தருகிறது.
கழிவுநீரால் பிராணவாயு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழிந்து விட்டது. 

இப்படி ஆறுகளில் (நீர்நிலைகளில்) ஏற்படும் மாற்றத்திற்கும்,காற்றில் ஏற்படும் மாசிற்கும் காரணம் காடுகளை மரங்களை அழிப்பதே என்பதை நாம் மறுக்க முடியாது.


அன்று  நீர் வளத்துடன்  காற்று மாசு இல்லாமல் இருந்தது. முக்கியமாக ஒலி மாசு கிடையாது.இனிமையாக பறவைகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
வானவில்லும் ஏழு கலரில் காணப்பட்டது.இன்றோ...வானவில் மாசினால் பல வண்ணங்களில் காணப்படுகிறது.
வாகன ஒலி,தொழிற்சாலைகள் ஒலி,போன்றவற்றால்செவிப்பறை,
நரம்புமண்டலம்,பாதிக்கப்படுகிறது.மன அமைதியும்,உடல் நலமும் பாதிக்கப் படுகிறது.

அதிகமான மரங்களை ஒருபுறம் வெட்டிச் சாய்த்து மறுபுறம் மக்கள் தொகை அதிகரித்ததால்,பிராண வாயுவில் சமநிலை ஏற்பட வழி இல்லை.எல்லாவகையான மாசினாலும் பூமி வெப்பமாகிறது.
செல்போன் சூடானால் கவலை கொள்ளும் நாம் பூமியின் வெப்பத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.ஓசோன் படலத்திலும்பாதிப்பு.
பூமியின்சீரான வெப்பநிலையை பராமரிக்க வழி இல்லாமல் பருவநிலை மாறுபாடுகள்,பல அழிவுகள், என ஏற்படுகிறது.

எனவே, பூமிவெப்பமாகாமல்,
காற்று,நீர்,நிலம்,மாசுபடாமல் இயற்கையை பாதுகாக்க வேண்டும். 

இயற்கையை இயற்கையாகவே வைத்திருக்க வேண்டும்.

"மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரப்புகட் டாவிடினும் 
அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண்மீது மரங்கள்வகைவகையா நெற்கள் 
புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
உங்களுக்குத் தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர்!"

என பாரதி கூறியது போல,

நம் வேலை  ,இயற்கையை நேசிப்பதே. அது நம் கடமை மட்டு மல்ல..பொறுப்பும்கூட. 
நம் தலைமுறைக்கு சொத்து சேர்த்து 
வைப்பதைப் போல இயற்கையையும் பாதுகாத்து கொடுப்போம்.

நம் வாழ்நாளில் ஒரு மரத்தையாவது நட்டு நம் சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். ஒரு மரத்தை மிகவும் அவசியம் கருதி வெட்டினால்,பதிலாக பத்து மரங்களை நட முடிவு எடுக்க வேண்டும். செல் நோண்டும் பல மணி நேரங்களில் சில நிமிடங்கள் ஒதுக்கி மண் நோண்டி மரம் நடுவோம்.

நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத இயற்கை வளத்தை காப்போம்.
தொலைநோக்கு பார்வையுடன் நம் தலைமுறையின் தேவைகளுக்கும் விட்டுச் செல்வோம்.

Enninaivugalin epathivu..tamil bharathidhasan

 ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்

             முன்னேற்றம்  ஒவ்வொன்றும் 
                       உன் முன்  னேற்றம்

கண்டறிவாய் எழுந்திரு நீ
               இளந்தமிழா கண் விழிப்பாய்
                         இறந்தொ  ழிந்த

பண்டைநலம் புதுப்புலமை                   பழம்பெருமை அனைத்தையும் நீ
                           படைப்பாய் இந்நாள்

தொண்டுசெய்வாய் தமிழுக்குத்
             துறைதோறும் துறைதோறும்
                               துடித்தெ  ழுந்தே!"


நரம்புகளில் நாணேற்றும் சொற்கள் பாவேந்தருடையது.
எழுதப்பட்டு முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும் இந்தக் கவிதையின் தேவை தீரவில்லை இன்னும் என்பதே உண்மை

Enninaivugalin epathivu.sulunthi vemarsanam

 சுளுந்தீ படித்தேன். இரா.முத்துநாகு அவர்களின் உள்ளே எரியும் தீயின் குறியீடே சுளுந்தீ..


எழுத்தாளர் ,பத்திரிக்கையாளர் , என பன்முக  திறமை கொண்ட நூலாசிரியரின் மனதோடிய கதை ஓட்டமாய்  ஓடுகிறது இல்லை இல்லை எரிகிறது இச்சுளுந்தீயும் .
 
தமிழர்களின் வாழ்வியலையும், அரசியலையும் கலாசாரத்தை கண் முன்னே நிறுத்தி இருப்பதோடு எழுத்துக்களால் நம்மை நிமிர்த்தியும் இருக்கிறார்.
 
இந்தநூலைப்படிப்பதால் நாம் நிலவியல்,நாட்டுமருத்துவம்,
தாவிரவியல்,விலங்கியல்,வட்டார வழக்காற்றியல், என பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். 
 
ஒரு தொல்குடி சமூகத்தின், குறிப்பாக பண்டுவ சமுகத்தின் ஆவணமாக கொள்ள வேண்டிய வரலாற்று நாவல், வட்டார நாவல், அரசியல் நாவல், உளவியல் நாவல், ஆவண நாவல் என அனைத்தையும் உள்ளடக்கிய பொக்கிஷம் இந்த நாவல். 
 
 
ஒரு சவரக்கத்தியின் மூலம்  சாம்ராஜியத்தை வீழ்த்த முடியும் என அழகாக கூறியிருக்கிறார்.
 
குல நீக்கம் எனும் பெயரில்நசுக்கப்படுவதும்,சுரண்டப்படுவதும்,உரிமைகள் இழந்து வறுமையில் உழல்வதும் என பல வரலாற்று உண்மைகள் நிறைந்த கதை.
 
 கடுமையான உழைப்பு இல்லாமல் கண்டிப்பாக இப்படி ஒரு நூலை படைக்க முடியாது.
 
சுளுந்து இது, ஒரு மரத்தின் பெயர். இதை எரிபொருளாகவும் இன்றளவிலும் மின்சாரமில்லா பகுதிகளில், கடலில் மீனவர்கள் இரவு நேரங்களில் தீவெட்டியாக பயன்படுத்தும் ஒரு வகையான மரம். 
ஆசிரியர் இதை வழிகாட்டும் வெளிச்சமாகவும், ஆதிக்க உணர்வுக்கு எதிராக எரியும் நெருப்பாகவும் , ஒடுக்கப்பட்டோரின் வாழ்விற்குரிய போர் ஆயுதமாகவும் இந்த நாவலில் கூறியுள்ளார். 
சுளுந்தீ என்ற குச்சி போல சாதி தீ இந்த நாவல் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 

ஒரு நாவிதனைச் சுற்றியே முழு நாவலும் பயணிக்கிறது. ஒரு நாவிதன் படை வீரன் ஆக முடியுமா ?என்ற ஒற்றை அடிநாதமே மொத்த நாவலின் கரு.
 
 
 
ராமன், அரண்மனையார் கதிரியப்ப நாயக்கர் மற்றும் தளபதிக்கும் சவரம் செய்யும் நாவிதன். அதோடு பன்றிமலை சித்தரிடம் உதவியாளராக இருந்து மருந்து தயாரிக்கவும் கற்றுக் கொண்டவன். அதனால் சுற்று வட்டாரம் முழுவதும் பல்வேறுபட்ட உடல் உபாதைகளுக்கு மருத்துவமும் பார்த்து வந்தான். 

அந்த காலகட்டத்தில் நாவிதம் செய்பவர்களுக்கு மட்டுமே நிரந்தரமாக கத்தி வைத்திருக்கும் உரிமை இருந்து இருக்கிறது.
 
அரண்மனையாருக்கு ஒற்றர்கள் மூலம் வரும் செய்தியை ஆராய்ந்து அரசுக்கு எதிராக பயணிப்பவர்கள் நாவிதர்கள் மூலமாக யாருக்கும் தெரியாமல் கொலை செய்ய உத்தரவும் தருவார்கள்.
 
 

 
பன்றிமலை சித்தருக்கு நல்ல வைத்தியப் பணி செய்ததற்கு ஒரு குதிரையை காணிக்கையாக வருகிறது. அந்த குதிரையை சித்தர் ராமருக்கு கொடுக்கிறார்.  ராமர் அதை வளர்த்து தனது மகன் மாடனுக்கு கொடுக்கிறார்
 
 
தனது மகன் மாடனை வீரனாகி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் ராமன். அவனுக்கு பண்டுவத்தையும், குதிரை ஏற்றம், மல்யுத்தம், வாள் சுற்றுதல், ஈட்டி எறிதல் போன்ற பலவிதமான பயிற்சிகளை யாருக்கும் தெரியாமல் கமுக்கமாய் சொல்லித்தந்து வீரனுக்கு உரிய பல தகுதிகளை கற்றுத் தருகிறான் ராமன். தன்னைப்போல் ஊழியம் பார்க்காது வீரனாக வர வேண்டும் என்ற அதீத ஆசையில் ராமன் அனைத்தையும் கற்றுத் தருகிறான்.
 
 
ராமன் தனது மகனுக்கு வீரத்தை மட்டுமல்லாது முகச்சவரம் எவ்வாறு செய்ய வேண்டும், இடைசவரம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை மகனுக்கு சொல்லித் தரும் இடங்கள் அனைத்திலும் ராமன் குருவாக மாறி மிளிருவார்.
 

மாடன் ராமனை போல் அல்லாது சிறிது முரண்டு பிடித்தவன் ஆகவும், கோபக்காரானாகவும், சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும் தன்மை இல்லாது வளர்ந்தது ராமனுக்கு அச்சத்தைத் தந்தது. ராமனும் பண்டுவம் மருந்து தயாரிக்கும் பொழுது இறந்துவிடுகிறான். 

மாடன் அரண்மனை பண்டுவனாக நியமிக்கப்பட தளபதியின் கோபம் உச்சத்துக்கு செல்கிறது. ஊரே எதிர்த்த போதும் தாய் தடுத்த போதும் குதிரையிலேயே மிரட்டும் வீரனாக மாடன் வலம் வருகிறான். 

மாடன் தனது வீரத்தோடு போட்டி போட வீரர்கள் யாரும் உண்டா என்று சவால் விடுகிறான் சின்ன கதிரியப்ப நாயக்கரிடம். இங்கே தளபதியின் சூழ்ச்சியால் மாடனுக்கு மக்களிடையே எதிர்ப்பலை கிளம்புகிறது. இறுதியில் தந்தையின் விருப்பத்தின்படி வீரனாக மாடன் ஆனானா? இல்லையா? என்பதே மீதிக்கதை.  
 
ஆதிக்க சாதியும், அதிகார பீடமும், அடித்தட்டு மக்களை, கலவர பூமியின் வெறித்தனத்தோடுஅலைக்கழித்து பந்தாடி மகிழ்ந்ததை, வெளிச்சமிட்டு 
அம்பலப்படுத்துகிறதுசுளிந்தீ. 
 
அரண்மனைக்குள் நடக்கும் பதவிப் போட்டியில் சவரக் கத்தி 
அந்தப்புரப் போர்க்கருவியானது!
 
 
பாளையம் என்ற சொல் உருது என்ற வார்த்தையிலிருந்து பிறந்து வந்தது என்ற புதிய செய்தி வியப்பைத் தந்தது. 
 
இதில் வரும் கதாபாத்திரங்கள் எத்தனை எத்தனை. இத்தனை கதாபாத்திரங்களையும் எந்தவித குழப்பமும் இல்லாமல் சொல்லியிருப்பது ஆசிரியரின் உழைப்பையும், இதற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதையும் இந்த நாவல் படிக்கும் பொழுது காண முடிகிறது.
 
ஒவ்வொரு பக்கங்களும் விசித்திரங்களையும் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் கொண்ட பக்கங்கள் சுளுந்தீ, உள்வாங்கி அந்த காலகட்டத்திற்கு சென்று அலைபாய வைத்தது.

 
நாவலில் வரும் தீக்கொழுத்தி, சித்தவர, குறுக்கம், கல்லுபித்தன், தொம்பரை, போடவு, சிலேப்பம், கல்பாசம், வாடன், ஏகாளி, சீந்திக்கொடி, கருங்கொடி, ராசபிலவை, கைசிரங்கை, பச்சநாவி, சேங்கொட்டை, வாய்கூடு, தாம்பு, சாங்கியம், தோதகத்தி, கடைக்கன்னி, குங்கிலியம், செந்தூரம், கடம்பம், வேப்லாளை, சக்களத்தி மூலிகை, இந்துப்பு, கல்மதம், கோரன்கிழங்கு, முக்குருணி, வராகம், குருசடி, அனல் வாதம், புனல் வாதம், நாம்பல், வாவி, காதவெளி, கூவகை, போதையிலை இப்படி நாம் கேள்விப்பட்ட, கேள்விப்படாத, தெரிந்தும் மறந்துபோன நூற்றுக்கணக்கான வார்த்தைகளை ஆசிரியர் சொல்லிருக்கும் அழகு நம்மை பிரமிக்கவைக்கிறது.
 
ஏராளமான சொலவடைகளையும் இந்த நூலில் 
நிரவிக் கிடக்கிறது. 
 
 
 
ஈத்தரக் கழுதை,  வெங்கம்பய,  எடுபட்ட பய போன்ற வழக்கொழிந்து போன 
 சாதாரண வட்டார வழக்கு சொற்களின் உண்மை யான அர்த்தங்கள் படிப்பவரை அதிர்சிக்குள்ளாக்குகிறது. 


 
நாவுதர்களின் கத்தியைக் கொண்டு எப்படி சாம்ராஜ்யங்கள் வீழ்தத்ப்படுகின்றன. தமிழர்களின் சடங்குகளை செய்து வந்த நாவிதர்கள், செம்மான்,போன்றவர்களின் இடத்தை பார்ப்பனர்களும் ஆரியர்களும் எப்படி பிடித்துக்கொண்டார்கள். உழுது விவசாயம் பார்த்த இடையர்களும் குடும்பர்களும் எப்படி நிலத்தை இழந்தார்கள் என்பதையும் ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் ஒரு சரியான தகவலை பதிவு செய்திருக்கிறார்.



 அழுக்கு துணியில் இன்னாருடையது என தெரிய குறியிடும் சாயம் கருத்தரிப்பூ நிறத்தில் இருக்கும். சேங்கொட்டையை இளந்தீயில் வாட்டி தண்ணீரில் குளிர வைத்தால் ஓட்டுக்குள் உள்ள விதை உருகி எண்ணெய் போல் வழ வழப்பாக வரும்

 ஈக்குச்சியால் சாயத்தை தொட்டு அழுக்கு துணியில் குறியிடுவர்.துணி கிழிந்தாலும் சாயக்குறி மட்டும் அழியவே அழியாது..
அனுபவத்தில் கண்ட உண்மை.எங்கள் வீட்டுத்துணிகளில் சிறு பிள்ளையாக இருக்கும் போது பார்த்திருக்கிறேன்..ஆனால் தயாரிப்பு இதே முறையா என  தெரியாது.
 
துணிகளை வெளுக்க வெள்ளாவியில் அடுக்குவதில் குல வாரியாக 
கீழிருந்து மேலாக உழைக்கும் மக்களின் துணிகளை அடியிலிருந்து 
அடுக்கி வருவது வர்க்க ரீதியான சமூக அமைப்பை அடையாளப் 
படுத்துகிறது. 


அனந்த வல்லியை மாடன் கொட்டகையில் பார்த்த பொன்னையன் புளுங்கும் இடம்.நாவிதனுக்கு வந்த வாழ்வை பாருடா.அவளோ பேரழகி.மூக்கு ஒன்னறை அங்குலம்,வாய் ரெண்டரை அங்குலம்,முத்தாலம்மனுக்கு மாதிரி கண்,பச்சை காடை இறகு போல புருவம்,சிரிச்சா கன்னம் இரண்டும் சிறுமுகடு மாதிரி இருக்கும்.சீரங்கம் கோயில் பெல்லால சிலை மாதிரி இருக்கா என புலம்புவான்

மிக மெல்லிய வெளிப்படையாக சொல்லப்படாத ஒரு தலைக் காதல் அனந்தவல்லி காதல்.மனதால் வரிந்து கொண்ட மாடனின் இறப்பிற்கு பின் தன்னை விதவையாக ஆக்கிக் கொண்ட இடம் நிகழ்ச்சி..தினமும்மாடனுக்கும்,கண் தெரியாத அவன் தாய்க்கும்  மோர் சாதம் கொடுத்து  வந்திருப்பாள்..கடைசியில் அவள் நிலை பாவம்.

ஆட்சி என்பதே சூழ்ச்சி தான்.என்பது ஒவ்வொரு  நிகழ்ச்சியிலும் தெள்ள தெளிவாக தெரிகிறது.

கதை முழுதும் சுளுந்தீ வெளிச்சம் காட்டிக் கொண்டே வருகிறது.சில நேரங்களில் சுடராக,சித்தருடன் ராமனிருக்கும் காலங்களில்,சில நேரங்களில் கை விளக்காக,ராமன் தன் மகன் மாடனுக்கு கற்பிக்கும் இடங்கள்,அழித்தொழிக்கும் ஆயுதமாக பெருமாள் தளபதிக்கு சவரம் செய்யும் இடம் ,சில நேரங்களில்  காட்டு தீயாக வங்காரன்,மாடன் சண்டைக் காட்சிகள் என.நாவல் முழுதும் சுளுந்தீ அணையாமல் எரிகிறது.அருமை.நன்றி ஆசிரியர் இரா.முத்துநாகு அவர்களுக்கு

Enninaivugalin e pathivu....velpari vemarsanam

 


நீண்ட மிக நீண்ட காலத்திற்கு பின் வரலாற்றையும் புனைவையும் இணைத்து இனிமையாக எழுத்தாற்றல் குறையாமல் நீண்ட கதையாக வழங்கியிருக்கிறார் சு.வெங்கடேசன் அவர்கள்.

கணிணியும் கைப்பேசியும் சிந்தை நிறைந்து ஆக்கிரமித்த இக்கால தலைமுறைகளையும் வசப்படுத்தும் வண்ணம் வியக்கத்தக்க பாணியில் இக் கதையில் சொல்லி  வெற்றி பெற்றிருக்கிறார் சு.வெ.அவர்கள்.

தாவரத்தை விட தச்சன் உருவாக்கிய தேர் ஒன்றும் பெரிதல்ல என நன்கு உணர்ந்து முல்லைக்கு தேர் கொடுத்தான்  என்ற அளவிலேயே அறிந்திருந்த பாரியைப் பற்றி,பறம்பின் மகனான பாரியைப் பற்றி வைகையின் மகனான சு.வெங்கடேசன் அவர்கள் வேள்பாரியில் கூறியிருக்கிறார்.

பாரியின் ஆட்சி வீரம்,  போர்திறன்,மட்டுமல்ல இராயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் அரசியல் சூழ்நிலை எப்படி இருந்தது,நாகரிகம் பண்பாடு எப்படி இருந்தது என்பதுடன் தமிழரின் அறிவு,மருத்துவம்,கலை இலக்கிய நுண்ணறிவு என பல செய்திகளை கூறியிருக்கிறார்.

உணவாக,மருந்தாக எந்த காய்,கனி,பூ பயன்பட்டது,போருக்கு வேட்டைக்கு உணவுக்கு என எந்த எந்த விலங்குகள் பயன்பட்டன போன்ற பல பல விஷயங்களை வாரி வாரி வழங்கியிருக்கிறார் சு.வெ.அவர்கள்

வெயில் ஆசிரியர் கூறியது போல பூவின் மகரந்த துகள் அளவே கிடைத்த தகவலைக் கொண்டு பெரும் காட்டையே புணைந்திருக்கிறார்.அவரது உழைப்பு பெரும் பாராட்டுக்குரியது..

வணிகம் இயற்கைக்கு விரோதமானது.இயற்கை வழங்குகிறது நாம் வாழ்கிறோம்.இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?
இதை தான் கதையின் மையக் கருத்தாக கொண்டிருப்பார்.

இயற்கையோடு ஒட்டி உறவாடி கூடி வாழும் பறம்புக்காடு.அதை வண்புணர்ச்சி செய்து மகிழும் மூவேந்தர்கள் நாடு.

பகைவருக்கும் ஆதரவு கொடுக்கும் பறம்பு படை..தங்களுக்குள் சூழ்ச்சி செய்யும் மூவேந்தர் படை..

நிலப்பரப்பில் பெற்ற வெற்றி காணாது என கடல் வணிகத்திலும் வெற்றி பெற பேராசை கொண்ட மூவேந்தர்கள்...கடல் பயணத்தில் வட திசை நோக்கி அமர்வதின் மூலம் திசை காண உதவும் தேவாங்கு விலங்கை பாரியிடமிருந்து பறிக்க மூவேந்தர்களும் கூடி போரிட்டனர். 
கதையின் மைய போராட்டமும் இதுவே.

 குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை இல்லையோ எனும் குறை தீர்க்க தட்டியங்காட்டுப் போர்..

 50க்கும் அதிக போர் அத்தியாயத்தை அவ்வளவு விறுவிறுப்பாக கூறியிருக்கிறார். நாமும் போரில் பங்கு கொண்ட உணர்வு ஏற்பட்டது என்றால் மிகையில்லை. 
கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களை, போரில் பயன்படுத்திய முறை ,கூறி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

பாரி,கபிலரை மட்டுமன்றி ,ஆதினி,அங்கவை,சங்கவை,நீலன்,தேக்கன், இராவதன்,திசைவேழர்,மயூர்கிழார்,பொற்சுவை என பலருக்கும் காலத்தால் அழிக்க முடியாத கதை மாந்தர்கள் அந்தஸ்து கொடுத்து சிறப்பித்திருக்கிறார் 

Wrong party right person என குலசேகரப்பாண்டியனின் அனுபவ மொழிகளையும் நாம் ரசிக்க முடிகிறது

 காதலில் தான் எத்தனை வகை..அத்தனையையும் காதல்ரசம் சொட்ட சொட்ட வழங்கி இருக்கிறார்.

முருகன் வள்ளி காதல் ---காவியம்
பாரி ஆதினி ---- இலட்சியம் 
நீலன் மயிலா ----   இயல்பு
பொதியவெற்பன் பொற்சுவை   ---- ஒப்பந்தம் 
உதிரன் அங்கவை --- நேசம்

 கதையாய் ஓவியமா?
ஓவியமாய் கதையா?
பாலோடு கலந்த தேன் போல
மணியன் செல்வன் அவர்களுடைய ஓவியங்கள் அத்தனையும் அருமை.

நம்முடைய அக இன்பத்தைப் பெற்ற பாரி கபிலரின் நட்பு ..சால சிறந்தது,மென்மையானது,புரிதலும் புனிதமும் ஆனது.

தமிழர் பண்பாட்டை அன்பு,பண்பு,நேசம்,காதல்,வீரம்,நாகரிகம்,என கொணர்ந்து கதையுடன் படிப்பவரை மூழ்கச் செய்வதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் சு.வெங்கடேசன் அவர்கள்.


ஒரு கதையை படிக்கும் போது கதையோடு ஒன்றிவிடுவது இயற்கை. வேள்பாரியிலும் அந்த அனுபவம் கிடைக்கிறது.
ஆனால் படித்து முடித்த பிறகும் கூட மீண்டும் மீண்டும் என படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகிறது வேள்பாரி.
மீள் வாசிப்பு செய்ய செய்ய புதிய புதிய அனுபவங்களை வழங்குகிறது வேள்பாரி.

பாரி அழிந்த சமுதாயத்தின் அடையாளமாக இருக்க கூடாது.அழியக்கூடாத மனித பண்பாட்டின்  அழியா அடையாளமாக அழியா புகழ் பெற வேண்டும் என்பார் ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள். வரும் காலத்தில்  மனித பண்பாட்டின்  அழியா அடையாளமாக பாரி திகழ்வான் என்பது சர்வ நிச்சயம்.

அறம் காக்கும் தெய்வங்கள்  நம்மை காக்கட்டும்.