நீண்ட மிக நீண்ட காலத்திற்கு பின் வரலாற்றையும் புனைவையும் இணைத்து இனிமையாக எழுத்தாற்றல் குறையாமல் நீண்ட கதையாக வழங்கியிருக்கிறார் சு.வெங்கடேசன் அவர்கள்.
கணிணியும் கைப்பேசியும் சிந்தை நிறைந்து ஆக்கிரமித்த இக்கால தலைமுறைகளையும் வசப்படுத்தும் வண்ணம் வியக்கத்தக்க பாணியில் இக் கதையில் சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார் சு.வெ.அவர்கள்.
தாவரத்தை விட தச்சன் உருவாக்கிய தேர் ஒன்றும் பெரிதல்ல என நன்கு உணர்ந்து முல்லைக்கு தேர் கொடுத்தான் என்ற அளவிலேயே அறிந்திருந்த பாரியைப் பற்றி,பறம்பின் மகனான பாரியைப் பற்றி வைகையின் மகனான சு.வெங்கடேசன் அவர்கள் வேள்பாரியில் கூறியிருக்கிறார்.
பாரியின் ஆட்சி வீரம், போர்திறன்,மட்டுமல்ல இராயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் அரசியல் சூழ்நிலை எப்படி இருந்தது,நாகரிகம் பண்பாடு எப்படி இருந்தது என்பதுடன் தமிழரின் அறிவு,மருத்துவம்,கலை இலக்கிய நுண்ணறிவு என பல செய்திகளை கூறியிருக்கிறார்.
உணவாக,மருந்தாக எந்த காய்,கனி,பூ பயன்பட்டது,போருக்கு வேட்டைக்கு உணவுக்கு என எந்த எந்த விலங்குகள் பயன்பட்டன போன்ற பல பல விஷயங்களை வாரி வாரி வழங்கியிருக்கிறார் சு.வெ.அவர்கள்
வெயில் ஆசிரியர் கூறியது போல பூவின் மகரந்த துகள் அளவே கிடைத்த தகவலைக் கொண்டு பெரும் காட்டையே புணைந்திருக்கிறார்.அவரது உழைப்பு பெரும் பாராட்டுக்குரியது..
வணிகம் இயற்கைக்கு விரோதமானது.இயற்கை வழங்குகிறது நாம் வாழ்கிறோம்.இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?
இதை தான் கதையின் மையக் கருத்தாக கொண்டிருப்பார்.
இயற்கையோடு ஒட்டி உறவாடி கூடி வாழும் பறம்புக்காடு.அதை வண்புணர்ச்சி செய்து மகிழும் மூவேந்தர்கள் நாடு.
பகைவருக்கும் ஆதரவு கொடுக்கும் பறம்பு படை..தங்களுக்குள் சூழ்ச்சி செய்யும் மூவேந்தர் படை..
நிலப்பரப்பில் பெற்ற வெற்றி காணாது என கடல் வணிகத்திலும் வெற்றி பெற பேராசை கொண்ட மூவேந்தர்கள்...கடல் பயணத்தில் வட திசை நோக்கி அமர்வதின் மூலம் திசை காண உதவும் தேவாங்கு விலங்கை பாரியிடமிருந்து பறிக்க மூவேந்தர்களும் கூடி போரிட்டனர்.
கதையின் மைய போராட்டமும் இதுவே.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை இல்லையோ எனும் குறை தீர்க்க தட்டியங்காட்டுப் போர்..
50க்கும் அதிக போர் அத்தியாயத்தை அவ்வளவு விறுவிறுப்பாக கூறியிருக்கிறார். நாமும் போரில் பங்கு கொண்ட உணர்வு ஏற்பட்டது என்றால் மிகையில்லை.
கற்பனைக்கு எட்டாத பல விஷயங்களை, போரில் பயன்படுத்திய முறை ,கூறி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
பாரி,கபிலரை மட்டுமன்றி ,ஆதினி,அங்கவை,சங்கவை,நீலன்,தே க்கன், இராவதன்,திசைவேழர்,மயூர்கிழார், பொற்சுவை என பலருக்கும் காலத்தால் அழிக்க முடியாத கதை மாந்தர்கள் அந்தஸ்து கொடுத்து சிறப்பித்திருக்கிறார்
Wrong party right person என குலசேகரப்பாண்டியனின் அனுபவ மொழிகளையும் நாம் ரசிக்க முடிகிறது
காதலில் தான் எத்தனை வகை..அத்தனையையும் காதல்ரசம் சொட்ட சொட்ட வழங்கி இருக்கிறார்.
முருகன் வள்ளி காதல் ---காவியம்
பாரி ஆதினி ---- இலட்சியம்
நீலன் மயிலா ---- இயல்பு
பொதியவெற்பன் பொற்சுவை ---- ஒப்பந்தம்
உதிரன் அங்கவை --- நேசம்
கதையாய் ஓவியமா?
ஓவியமாய் கதையா?
பாலோடு கலந்த தேன் போல
மணியன் செல்வன் அவர்களுடைய ஓவியங்கள் அத்தனையும் அருமை.
நம்முடைய அக இன்பத்தைப் பெற்ற பாரி கபிலரின் நட்பு ..சால சிறந்தது,மென்மையானது,புரிதலும் புனிதமும் ஆனது.
தமிழர் பண்பாட்டை அன்பு,பண்பு,நேசம்,காதல்,வீரம், நாகரிகம்,என கொணர்ந்து கதையுடன் படிப்பவரை மூழ்கச் செய்வதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் சு.வெங்கடேசன் அவர்கள்.
ஒரு கதையை படிக்கும் போது கதையோடு ஒன்றிவிடுவது இயற்கை. வேள்பாரியிலும் அந்த அனுபவம் கிடைக்கிறது.
ஆனால் படித்து முடித்த பிறகும் கூட மீண்டும் மீண்டும் என படிக்க ஆர்வத்தை ஏற்படுத்துகிறது வேள்பாரி.
மீள் வாசிப்பு செய்ய செய்ய புதிய புதிய அனுபவங்களை வழங்குகிறது வேள்பாரி.
பாரி அழிந்த சமுதாயத்தின் அடையாளமாக இருக்க கூடாது.அழியக்கூடாத மனித பண்பாட்டின் அழியா அடையாளமாக அழியா புகழ் பெற வேண்டும் என்பார் ஆசிரியர் சு.வெங்கடேசன் அவர்கள். வரும் காலத்தில் மனித பண்பாட்டின் அழியா அடையாளமாக பாரி திகழ்வான் என்பது சர்வ நிச்சயம்.
அறம் காக்கும் தெய்வங்கள் நம்மை காக்கட்டும்.
No comments:
Post a Comment