#படிங்க_ரொம்ப_பிடிக்கும்
அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார். எரிச்சலும் கொள்வார். ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்.
ஒருநாள் அவரது கணவர், "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" என்று அந்த பெண்ணிடம் கூறினார். அவரும் அமைதியாக சம்மதித்தார்.
மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான். அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும். முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக.
மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு. அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்.
குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்.
ஒருநாள் அந்த பெண்மணியே எல்லோரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்:
"சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது. அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு. என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம், என்னுடைய பயம், என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை. அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளை தான் அதிகரிக்கும்.
என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும். உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை நான் தருவேன். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.
ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை. உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு கூறல் வேண்டும். உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே தான் நான் அமைதியாகி விட்டேன்."
குடும்பமே வாயடைத்துப்
போனது...
அவர்களின்
செயல்பாடுகளுக்கு
அவர்களே பொறுப்பு
என்று அனைவரும்
உணர்ந்து விட்டால்
வாழ்க்கை
அமைதிப் பூங்காவாக
மாறும்