இன்று ஒரு குட்டிக்கதை*
*ஸ்ரீராமருக்கும் ஹனுமனுக்கும் நடந்த போர்!*
ஸ்ரீராம நாமத்தின் பெருமை
எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் காணப்படுகிறானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன் என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டப்படுகிறது.
த்ரேதா யுகத்தில் ஹனுமனாக அவதரித்து ஸ்ரீ ராம சேவை செய்தார்.
துவாபர யுகத்தில் பாண்டவர்களில் ஒருவரான பீமனாக அவதரித்து ஸ்ரீகிருஷ்ண சேவை செய்தார்.
கலியுகத்தில் ஸ்ரீ மத்வாச்சார்யாராக அவதரித்து ஸ்ரீ வேதவ்யாச சேவை செய்தார்.
ஸ்ரீ ராமாவதாரத்தில் ஸ்ரீராம ஸேவை ஒன்றையே தன் லட்சியமாகக் கொண்டு, ஸ்ரீராம நாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக்கொண்டு இருப்பவர் சிரஞ்ஜீவியான ஹனுமன். அப்பேர்ப்பட்ட ஹனுமனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்தது என்று சொன்னால், நம்புவீர்களா?
ஆம் அப்படியொரு சம்பவம் நம் ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அது, காலத்தால் அழியாத உண்மை ஒன்றை உலகுக்கு எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பட்டாபிஷேகத்துக்குப் பிறகு நீதி தவறாது ராமராஜ்ஜியம் நடத்தி வந்த ஸ்ரீராமர், மக்களின் நலன் கருதி, நாட்டின் வளமைக்காக, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அத்ரி முதலான மகரிஷிகளைக் கொண்டு யாகம் ஒன்றை நடத்தினார்,
அவர் அயோத்தியை அடுத்த அழகிய வனத்தில், பெரிய யாக குண்டங்கள் அமைத்து, முனிவர்கள் யாகத்தை நடத்திக்கொண்டு இருந்தனர்.
சக்கரவர்த்தி ஸ்ரீராமரின் ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய நாட்டின் மன்னன் சகுந்தன். அவன் ஒருநாள், வேட்டையாடிவிட்டு வரும்போது, யாகசாலைக்கு அருகில் வந்தான். தான் வேட்டையாடிவிட்டுத் திரும்பியிருந்தபடியால், யாகசாலைக்குள் நுழைவது சரியல்ல என்று கருதி, வெளியில் நின்றபடியே நமஸ்கரித்து, வசிஷ்டாதி முனிவர்களுக்கு என் வணக்கங்கள் என்று கூறிப் புறப்படத் தயாரானான். சகுந்தன் கூறிய வார்த்தைகள், நாரத முனிவரின் காதில் விழுந்தது. விறு விறுப்பான நாடகம் ஒன்றைத் தொடங்க நினைத்தார். அற்புதமான கதைக்கு, கரு ஒன்று கிடைக்க... விடுவாரா நாரதர்?
நேராக, விஸ்வாமித்திரரிடம் சென்றார். ''பார்த்தீர்களா மகரிஷி. இந்தச் சகுந்தன் சாதாரண சிற்றரசன். இவனுக்கு எத்தனைத் திமிர்? இங்கே, யாகசாலைக்கு முன்னே நின்றுகொண்டு, வசிஷ்டாதி முனிவர்களுக்கு வணக்கம் என்று கூறிச் செல்கிறான். அப்படியென்ன வசிஷ்டர் உயர்ந்துவிட்டார்?. தாங்களும்தான் ஸ்ரீராமரின் குரு. தாங்களும்தான் இந்த யாகத்தை முன்னின்று நடத்துகிறீர்கள். தங்கள் பெயரையும் சொல்லி, ஒரு நமஸ்காரம் செய்திருக்கலாம்?. தங்களை வேண்டும் என்றே அவமானப்படுத்த, இவன் வசிஷ்டரை முதன்மைப்படுத்தி, மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி, அவருக்கு மட்டும் வணக்கம் செலுத்தியிருக்கிறான்" என்றார் நாரதர்.
உடனே விஸ்வாமித்திரரின் முகம் கோபத்தால் சிவந்தது. கண்களில் தீப்பொறி பறக்க அவர் சாபமிடத் தொடங்குமுன், நாரதர் தடுத்து நிறுத்தினார்.
"அந்த அற்பனுக்குச் சாபமிட்டு, தங்கள் தவ பலத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்?. தங்கள் சீடர் ஸ்ரீராமர். சகுந்தனோ அந்த ஸ்ரீராமரின் கீழே இருக்கிற சிற்றரசன். இவன் செய்த பிழையை ஸ்ரீராமரிடம் கூறி, இவனுக்கு உரிய தண்டனையை அவரையே தரச் சொல்லுங்கள்'' என்றார் நாரதர்.
விஸ்வாமித்திரருக்கும் அது சரியெனப்பட்டது. சில நாழிகைகள் கழித்து யாக சாலைக்கு வந்த ஸ்ரீராமரிடம், ''உன் குருவை ஒருவன் அவமதித்தால், அவனுக்கு நீ என்ன தண்டனை தருவாய்?'' என்று கோபத்துடன் கேட்டார்.
அவரை யாரோ அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டார் ஸ்ரீராமர்.
''குருதேவா! தங்களை அவமதித்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களுக்குத் தக்க தண்டனையை தாங்களே கூறுங்கள். நிறைவேற்றி வைப்பது என் கடமை'' என்றார்.
''சகுந்தன் என்னை அவமதித்து விட்டான். அவன் சிரசை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் என் காலடியில் சேர்க்கவேண்டும்'' என்று விஸ்வாமித்திரர் சொல்லி முடிக்கக் கூட இல்லை...
''தங்கள் ஆணைப்படியே செய்கிறேன். இது சத்தியம்! '' என்று வாக்களித்துவிட்டார் ஸ்ரீராமர். நாரதர் தொடங்கிய நாடகத்தின் முதல் காட்சி முடிந்தது.
ஸ்ரீராமர் செய்தியனுப்பினால் போதும், சகுந்தனே தன் தலையை வெட்டி ஒரு தட்டில் வைத்து அனுப்பிவிடுவான். இருந்தாலும், அது ஸ்ரீராமர் கடைப்பிடிக்கும் க்ஷத்திரிய தர்மத்துக்கு அழகாகுமா? எனவே, ஸ்ரீராமர் போர்க்கோலம் பூண்டு, சகுந்தனின் நாட்டை நோக்கிப் புறப்படத் தயாரானார்.
நாடகத்தின் இரண்டாவது
காட்சியைத் தொடங்கினார் நாரதர். நேரே சகுந்தனிடம் சென்றார்.
''என்ன காரியம் செய்து விட்டாயப்பா? வசிஷ்டரின் பெயரைச் சொன்னவன், விஸ்வாமித்திரர் பெயரையும்
சொல்லியிருக்கக் கூடாதா?. இப்போது பேராபத்தைக் தேடிக் கொண்டாயே! படையெடுத்து வருபவர் ஸ்ரீராமர் ஆயிற்றே! என்ன செய்யப் போகிறாய்?'' என்று ஆதங்கமாகக் கேட்டுவிட்டு, மற்ற விவரங்களையும் சொன்னார்.
''நான் என்ன செய்ய முடியும் சுவாமி? இலங்கேஸ்வரன் ராவணனாலேயே எதிர்க்க முடியாத ஸ்ரீராமரை நான் எப்படி எதிர்க்க முடியும்? முடியாது. என் தலைதானே ஸ்ரீராமருக்கு வேண்டும்? அதைத் தாங்களே வெட்டியெடுத்துச் சென்று, அவரிடம் தந்துவிடுங்கள்'' என்று உருக்கமாகக் கூறி, சகுந்தன் தன் வாளை உருவ, நாரதர் அவனைத் தடுத்துச் சிரித்தார்.
''சகுந்தா! உண்மையில் நீ விஸ்வாமித்திரரை அவமதிக்கவில்லையே... அப்படி இருக்கும்போது, ஏன் கலங்குகிறாய்? '' என்ற நாரதர்,
''சகுந்தா.. உன் நாட்டை அடுத்த வனத்தில், ஆஞ்சநேயனின் தாய் அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் இருக்கிறது. அங்கே சென்று தவம் செய். அவள் கருணை மிக்கவள். அவளால் உனக்கு உயிர்ப்பிச்சை தரமுடியும். பிறகு, ராம பாணம்கூட உன்னை ஒன்றும் செய்யமுடியாது'' என்று உறுதி கூறினார் நாரதர்.
சகுந்தன் மனதில் நம்பிக்கை பிறந்தது. அஞ்சனாதேவி ஆட்சி புரியும் கானகம் சென்றான். அங்கே அக்னியை வளர்த்தான். அஞ்சனாதேவி சரணம் என்று பக்தியுடன் அக்னியைச் சுற்றிப் பலமுறை வலம் வந்து பிராணத் தியாகம் செய்யத் தயாரானான். தாயல்லவா அவள்! தன்னைச் சரணடைந்த குழந்தையை சாக விடுவாளா?
அவன் முன் தோன்றி, "குழந்தாய், கவலைப்படாதே! என்னைச் சரணடைந்த உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது. தீர்க்காயுஷ்மான் பவது'' என்று ஆசி கூறி, அவன் நீண்ட ஆயுள் வாழ வரம் தந்தாள். சகுந்தன் அவளது திருவடியில் விழுந்து வணங்கினான். "நான் மரண கண்டத்தில் சிக்கியுள்ளேன் தாயே! ஸ்ரீராமர், என் சிரஸைத் தன் குருவின் காலடியில் சூர்ய அஸ்தமனத்துக்குள் சேர்க்கும் சபதம் பூண்டு, என் மீது போர் தொடுத்து வருகிறார். இப்போது நான் உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் என அருளுங்கள்" என்றான்.
அதைக் கேட்டுப் பதறிப் போனாள் அஞ்சனாதேவி. ஸ்ரீராமரின் பாணத்திலிருந்து சகுந்தனைக் காப்பாற்றுவது என்பது இயலாத காரியமாயிற்றே எனக் கலங்கினாள். இருந்தாலும், தான் உயிர்ப்பிச்சை அளித்தவனைக் காக்க வேண்டியது தன் கடமை என்பதில் உறுதியாக இருந்தாள். தன் வாக்கைக் காக்கும் பொறுப்பை, தன் மைந்தன் ஹனுமனிடம் ஒப்படைக்க முடிவு செய்தாள்.
தன் மகனை, தன் முன்னே தோன்றும்படி சங்கல்பித்தாள். அந்த நிமிடமே, எதிரே வந்து நின்று வணங்கினான் ஹனுமன். ஸ்ரீராமரின் பித்ரு பக்திக்கு ஹனுமனின் மாத்ரு பக்தி எந்த விதத்திலும் சற்றும் குறைந்ததல்ல.
''மகனே! இவன் சகுந்தராஜன். பிராணத்தியாகம் செய்யத் துணிந்தபோது, இவனைக் காப்பாற்றி, உயிர்ப்பிச்சை தருவதாக வாக்குறுதி தந்துவிட்டேன். என் வாக்கைக் காப்பாற்றும் பொறுப்பை இப்போது உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவனை எப்படியேனும் காப்பாற்று!'' என்று கட்டளையிட்டாள்.
அப்படியே ஆகட்டும் தாயே! என உறுதியளித்தான் ஹனுமன்.
பின்பு, தனது உயிரைப் பறிப்பதற்கு ஸ்ரீராமர்தான் தேடுகிறார் என்பதைச் சகுந்தன் சொல்ல.. ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டார் வாயு புத்ர ஹனுமன்.
எதிர்ப்பது நம் பிரபுவையா ஸ்ரீராமரையா..????? ஆனாலும், தன் தாயிடம் அடைக்கலம் கேட்டு வந்தவனைக் காப்பது தன் கடமை என்று, இது பிரபு ஜெய் ஸ்ரீராமரின் திருவிளையாடலே என உறுதியுடன் நின்றான். எந்த ஆபத்தையும் எதிர்க்கும் வல்லமையின் ரகசியம் ஒன்றை அவன் அறிந்து வைத்திருந்தான். தன் வாலை நீளமாக வளர்த்து, அதனை ஒரு கோட்டைபோல அமைத்தான். அதற்குள் சகுந்தனைப் பாதுகாப்பாக அமர்த்திவிட்டு, சிறு குரங்கின் உருவெடுத்து, வால் கோட்டையின் மேல் அமர்ந்து கொண்டு, தாய்க்குச் செய்யும் கடமைக்காகத் தாயினும் மேலான தலைவனையே எதிர்க்கத் தயாரானான்!
இதனிடையில் ராம, லட்சுமணர்களின் சைன்யம் சகுந்தராஜனின் தலைநகரில் புகுந்தது. உயிருக்குப் பயந்து, சகுந்தன் அஞ்சனா வனத்தில் மறைந்து இருப்பதை அறிந்து, ஸ்ரீராமர் அங்கே சென்று, போரைத் தொடங்கினார். சகுந்தராஜன் மறைந்திருக்கும் மலை போன்ற வால் கோட்டையை நோக்கி ஸ்ரீராமரின் அஸ்திரங்கள் சரமாரியாக வானில் பறந்தன. ஆனால், அவர் எய்த அஸ்திரங்கள் யாவும் அடுத்த சில விநாடிகளில் அவரின் திருவடிகளிலேயே திரும்பி வந்து விழுந்தன. அதிசயித்துப் போனார் ஸ்ரீராமர். யுத்தம் தொடர்ந்தது. ஸ்ரீராமர் கற்ற அஸ்திர வித்தைகள் அனைத்துமே தோற்று நின்றன. இதற்கான காரணம் தெரியாமல் ஸ்ரீராமர் திகைத்து நிற்க, நாரத முனிவர் தான் போட்ட முடிச்சை அவிழ்க்க, அங்கே வந்து நின்றார்.
''ராமா! உன் அஸ்திரங்களின் சிம்ம நாதமும், உனது யுத்த பேரிகையின் சப்தமும் ஒரு கணம் நிற்கட்டும். அப்போது இதன் காரணத்தை நீ அறியலாம்'' என்றார் சூசகமாக.
ஒரு கணம் யுத்த பூமியில் அமைதி தோன்றியது. அப்போது எங்கிருந்தோ, காற்றில் மிதந்து வந்த ராம்.. ராம் என்னும் ராம நாம சப்தம் கேட்டு, அனைவரும் மெய்சிலிர்த்தனர்.
அது ஹனுமனின் குரல்தான். அவன் ஒருவனால்தான் ராம நாமத்தை அத்தனை பக்தியோடும், சக்தியோடும் ஜபிக்க முடியும் என்பது ஸ்ரீராமருக்குத் தெரியும். நாடகத்தின் இறுதிக் காட்சிக்கு வந்தார் நாரதர்.
''ராமா! உன் திருநாமத்தின் சக்திக்கு முன்னால், உன்னாலேயே எதுவும் செய்ய முடியாது. உன் நாமம் அத்தனை புனிதமானது. சக்தி வாய்ந்தது. உலகின் எந்த சக்தியாலும் உன் நாமத்தை எதிர்த்து நிற்க முடியாது. காலத்தால் அழியாத பெருமை வாய்ந்தது உன் நாமம். அதிலும், அதனை ஆஞ்சநேயன் ஜபிக்கிறான் என்றால், அதை வெல்ல எவராலும் முடியாது?'' என்று கூறி, நடந்ததையெல்லாம் விளக்கினார்.
''ஹனுமன் ராம நாமம் ஜபிப்பதை நிறுத்தினால்தான், உன் அஸ்திரங்கள் இந்த எல்லையைக் கடக்கும். ஹனுமனை அழித்தால்தான் அந்த நாமம் ஒலிப்பது ஓயும். அவன் இதயத்திலோ, ஸ்ரீராமனையோ பிரதிஷ்டை செய்து வைத்திருக்கிறான். அவனை அழிப்பது சுலபமல்ல. ஆனால், ஹனுமனை வென்றால்தான் சகுந்தனை வெல்ல முடியும். அப்படியெனில், ஸ்ரீராமன் தன்னையே அழித்துக் கொண்டால்தான் இது சாத்தியமாகும்'' என்று சிக்கலை மேலும் சிக்கலாக்கி, நாரதர் விளக்கியபோது,
''வேண்டாம் ராமா, வேண்டாம்! இந்த விபரீதத்துக்கு என் அகந்தையே காரணம். போரை நிறுத்திவிடு. சகுந்தன் நிரபராதி'' என்று கூறியபடியே, ஓடி வந்தார் விஸ்வாமித்திரர்.
சரி... ஆனால், சகுந்தனின் சிரசை சூரிய அஸ்மனத்துக்குள் விஸ்வாமித்திரரின் பாதத்தில் சேர்ப்பதாக வாக்களித்தாரே ஸ்ரீராமர்! அது என்ன ஆவது?. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் வாக்கு பொய்ப்பதா?
அதற்கும் ஒரு வழி சொன்னார் நாரதர்.
சகுந்தராஜனை நாரதர் அழைக்க, அவன் வால் கோட்டையிலிருந்து வெளியே வந்து, விஸ்வாமித்திரர் பாதங்களில் தன் சிரம் படும்படி நமஸ்கரித்தான். சகுந்தன் சிரசைத் தன் காலடியில் சேர்க்க வேண்டும் என்று தானே அவர் கேட்டிருந்தார். ஆக, ஸ்ரீராமரின் வாக்கும் பொய்க்கவில்லை. சகுந்தனின் சிரம் விஸ்வாமித்திரரின் பாதங்களில் சேர்ந்தது. அஞ்சனா தேவியின் வாக்கும் பொய்க்கவில்லை. ஹனுமனும் எடுத்த கடமையில் இருந்து தவறவில்லை.
ஸ்ரீராம நாமத்தின் பெருமையை உலகத்தார் அனைவரும் தெரிந்துகொள்ள நாரதர் நடத்திய அருமையான நாடகம் இது.
ராம ராம ராம ராம ராம ராம ராம
ReplyForward |