Friday, November 20, 2020

Enninaivugalin epathivu.பேணுவோம் இயற்கையை

 பேணுவோம்! தலைப்பு என்னவோ யோசித்து விட்டேன்! ஆனால் எந்த ஒரு மையக் கருத்தை எடுத்துக் கொள்வது? மனித நேயத்தையா,அறத்தையா,அன்பையா??


மனிதநேயத்துடன்,அறத்துடன்,அன்புடன், இப்ப நாம் பேண வேண்டியது இதயத் துடிப்புடன் தொடர்புடைய இயற்கையின்  பிடிப்பை..
எனவே,இயற்கையைப் பேணுவோம்.

வாழ்வு வசப்பட பாடுபடு! என முன்னோர் சொன்ன வார்த்தை. ஆனால் நாமோ,பாடுபடாமல் எளிதாக எது கிடைக்கும் என தேடித் தேடி திரிகிறோம்.பணம் தான் சகலமும் என வாழ்ந்து மனிதம் மட்டுமா இழந்தோம்,
இயற்கையையும் அல்லவா அறிந்தே அழித்து இழந்து நிற்கிறோம்.

அனைவருக்கும் தேவை உணவு.கோடிகளில் புரண்டாலும் விளைநிலம் இல்லையேல் அனைவரும் தெருக் கோடி தான்.எனவே  ஆரோக்கியமாக வாழ விவசாயம் கண்டிப்பாக வேண்டும் .

நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் இந்த ஐந்து பூதங்களைச் சுற்றி தான் சுற்றுச்சூழல் செயல்படுகிறது. எனவே,நாம் இந்த ஐந்தையும்  பாதுகாப்பது முக்கியம்.

நிலத்தில் விதையை மட்டுமா விதைக்கிறோம்! பிளாஸ்டிக் என்னும் எமனையும் விதைப்பதால் நிலம் மலட்டுத் தன்மை அடைகிறது.
மேலும், தொழிற்சாலை கழிவுகளால் நிலம் மாசுபடுகிறது.
நாம் வீசும் பிளாஸ்டிக், பாலிதீன், மக்காமல் நிலத்தில் புதையுண்டு,
நிலம் மாசுபட்டு  வீரிய மிக்க செடி 
கொடிகள் வளர்ச்சி தன்மையை இழந்து விடுகிறது.

பல ஆண்டுகளாக  நாம் அனுபவித்த இயற்கை வளங்கள் இன்று குறைந்து வருவதைக் காண்கிறோம்.
வனங்கள்,புல்வெளிகள்,தாதுக்கள்,ஆறுகள்,ஏரிகள்,கடல்கள் ,நுண்ணுயிர்கள், போன்றவை மட்டுமா இயற்கை வளங்கள்..
மழைத்துளியும் கூட இயற்கை வளமே! 
உயிர்கள் படைக்கப்பட்ட போதே அவற்றின் வாழ்வுக்காக இயற்கை வளங்களும் சேர்ந்தே படைக்கப்பட்டுள்ளன.இவை இல்லாமல்  நாம் வாழவே முடியாது..

இப்படி வாழ அவசியமான வளத்தை அழித்துவிட்டு,யாரோடு, எதனோடு,
எப்படி வாழ போகிறோமோ தெரியவில்லை! 

அதிகரித்து வரும் நகரமயமாதல்,
தொழில்மயமாதல்,மக்கள் பெருக்கம் போன்ற காரணங்களால் இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும்  தாமிரபரணியின் அன்றைய நிலையை கண்டிப்பாக கூறியே ஆக வேண்டும். 
மிகவும் அழகானவள் தாமிரபரணி.
நாங்கள் எங்க குடும்ப
உறுப்பினராகவே எண்ணுவோம்.

ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு அழகு.திருநெல்வேலியில் ஒரு அழகு என்றால் அம்பாசமுத்திரத்தில் நிறைய பாறைகளுடன்,
படித்துறையுடன் கூடிய அழகு. 

இருபுறமும் பச்சைப்பசேல் என வயல் பரப்பு கண்கொள்ளா காட்சி.

கல்லிடைக்குறிச்சி அப்பளம் ருசிக்க  இந்த தாமிரபரணி தண்ணீரே காரணம்.திருநெல்வேலி அல்வா ருசிக்கும் தாமிரபரணியே  காரணம் என சொல்லவும் வேண்டுமா!!

 தாமிரபரணியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்தி செல்வோம்.ஏழை முதல் பணக்காரர் 
வரை அருகருகே குளிப்பர்.

துண்டில் சோப்பு டப்பாவை சுற்றி கேரியரில் வைத்துக் கொண்டு,
சைக்கிளை தள்ளிக் கொண்டே செல்லும் பெரியவர்கள் அழகு!

குளித்து முடித்து ஈர புடவையுடன்
,திருநீறு நெற்றியில் காய்ந்தும் காயாமலும் மணக்க,திருமுறைகளை முணுமுணுத்தபடி திரும்பும் மூதாட்டிகள்  அழகு!

ஆற்றங்கரையிலுள்ள நாவல்மர பழங்களை சாப்பிட்டபடி நாக்கு கலர் மாறிட்டா என்றபடி வீடு திரும்பும் சிறுவர் கூட்டம் அழகு!

ஆத்துக்கு குளிக்க வந்தியா என 
( நமக்கு அசட்டு தனமாக தோன்றும்) கேள்வி கேட்டபடி வீடு திரும்பும் பெண்கள் அழகு..

  ஆனால் இப்ப வீட்டுக்கு வீடு குழாய். 
நதியும் மாசுபட்டு காணப்படுகிறது.
பாறைகளே மிஞ்சி இருக்கின்றன.
நீரின் சுவையும் நாளுக்கு  நாள் மாறி வருகிறது. நதியின் போக்கு மாறியதால் பல இடங்களில் ஓடையாக காட்சியளிக்கிறது. கழிவுகளை தாங்கும் பள்ளமாக மாறி இருப்பது வேதனை தருகிறது.
கழிவுநீரால் பிராணவாயு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழிந்து விட்டது. 

இப்படி ஆறுகளில் (நீர்நிலைகளில்) ஏற்படும் மாற்றத்திற்கும்,காற்றில் ஏற்படும் மாசிற்கும் காரணம் காடுகளை மரங்களை அழிப்பதே என்பதை நாம் மறுக்க முடியாது.


அன்று  நீர் வளத்துடன்  காற்று மாசு இல்லாமல் இருந்தது. முக்கியமாக ஒலி மாசு கிடையாது.இனிமையாக பறவைகளின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
வானவில்லும் ஏழு கலரில் காணப்பட்டது.இன்றோ...வானவில் மாசினால் பல வண்ணங்களில் காணப்படுகிறது.
வாகன ஒலி,தொழிற்சாலைகள் ஒலி,போன்றவற்றால்செவிப்பறை,
நரம்புமண்டலம்,பாதிக்கப்படுகிறது.மன அமைதியும்,உடல் நலமும் பாதிக்கப் படுகிறது.

அதிகமான மரங்களை ஒருபுறம் வெட்டிச் சாய்த்து மறுபுறம் மக்கள் தொகை அதிகரித்ததால்,பிராண வாயுவில் சமநிலை ஏற்பட வழி இல்லை.எல்லாவகையான மாசினாலும் பூமி வெப்பமாகிறது.
செல்போன் சூடானால் கவலை கொள்ளும் நாம் பூமியின் வெப்பத்தை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம்.ஓசோன் படலத்திலும்பாதிப்பு.
பூமியின்சீரான வெப்பநிலையை பராமரிக்க வழி இல்லாமல் பருவநிலை மாறுபாடுகள்,பல அழிவுகள், என ஏற்படுகிறது.

எனவே, பூமிவெப்பமாகாமல்,
காற்று,நீர்,நிலம்,மாசுபடாமல் இயற்கையை பாதுகாக்க வேண்டும். 

இயற்கையை இயற்கையாகவே வைத்திருக்க வேண்டும்.

"மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரப்புகட் டாவிடினும் 
அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண்மீது மரங்கள்வகைவகையா நெற்கள் 
புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
உங்களுக்குத் தொழில் இங்கே அன்புசெய்தல் கண்டீர்!"

என பாரதி கூறியது போல,

நம் வேலை  ,இயற்கையை நேசிப்பதே. அது நம் கடமை மட்டு மல்ல..பொறுப்பும்கூட. 
நம் தலைமுறைக்கு சொத்து சேர்த்து 
வைப்பதைப் போல இயற்கையையும் பாதுகாத்து கொடுப்போம்.

நம் வாழ்நாளில் ஒரு மரத்தையாவது நட்டு நம் சந்ததிகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும். ஒரு மரத்தை மிகவும் அவசியம் கருதி வெட்டினால்,பதிலாக பத்து மரங்களை நட முடிவு எடுக்க வேண்டும். செல் நோண்டும் பல மணி நேரங்களில் சில நிமிடங்கள் ஒதுக்கி மண் நோண்டி மரம் நடுவோம்.

நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத இயற்கை வளத்தை காப்போம்.
தொலைநோக்கு பார்வையுடன் நம் தலைமுறையின் தேவைகளுக்கும் விட்டுச் செல்வோம்.

No comments:

Post a Comment