Tuesday, January 17, 2012

privacy-pongal


பொங்கல்:
        உழைப்பில் கிடைத்த தானியத்தை நன்றி தெரிவிக்கும் முறையாக, தன் உற்றார் உறவினருடன் கூடி, பொங்கலிடுவார்கள்
சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்க வாசலில் திறந்த வெளியில் கோலமிட்டு விளக்கு, காய்கறிகள், கரும்பு,மஞ்சள் கொலை, சாணிப் பிள்ளையார்,எல்லாம் வைத்து மண் அடுப்பில், பொங்கல் பானையை வைப்பார்கள். ஓலை எறித்து,பாலைக் காய்ச்சுவார்கள். பால் என்றால் மாட்டுப் பாலோ, பாக்கட் பாலோ அல்ல. தங்கள் உழைப்பில் விளைந்த அரிசியை களைந்து அந்த தண்ணிரையே பாலாக கொண்டு காய்ச்சுவார்கள்.
பால் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல்,பொங்கலோ பொங்கல்என குலவை இடுவார்கள்(குலவை என்றால் வாயைக் குவித்து கையால் மூடி,நாக்கை சுழற்றி, சத்தம் எழுப்புவார்கள்)சூரிய உதயத்திற்கு முன் பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து தங்கள் நன்றியை தெரிவிப்பார்கள்.
பொங்கலன்று பெரியவர்கள் சிறியவர்களுக்கு பணம் கொடுப்பார்கள். அதை பொங்கல்படி என்பர்.

மாட்டுப் பொங்கல்:
                   உழவர்களின் நண்பனான மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.அன்று தங்கள் வீட்டு மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரிப்பர். கொம்புகளில் வண்ணங்களை தீட்டுவார்கள். மாட்டுக் கொட்டகையில் பொங்கலிட்டு, மாடுகளுக்கு படைப்பர். கோ பூஜை பண்ணுவார்கள்.
தமிழகத்தில் கொம்புகள் கூர்சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு தனித்தன்மை வாய்ந்தது மட்டுமல்ல, தமிழரின் வீரத்திற்கும், வீரத்துடன் ஒன்றிணைந்த பண்பாட்டிற்கும் சான்றாகத் திகழ்கிறது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் ஒரு முறை இறங்கிய காளையர் எவரும் அடுத்த ஆண்டும் இறங்கி தங்கள் திறனை தொடர்ந்து நிரூபிக்காமல் இருப்பதில்லை. உடல் பலம் உள்ளவரை ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு, தங்கள் உயிரை பணயமாக வைத்து தமிழரின் வீர மரபை தொடர்ந்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் பல ஊர்களில் ஒரு காலத்தில் தீவிரமாக காளை அடக்குவதில் போட்டி போட்டவர்கள், இன்று வயது முதிர்ந்த நிலையிலும் கூட, ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் பட்டிக்குச் சென்று, சீரிக் கொண்டு பாய்ந்துவரும் காளை ஒன்றை தொட்டுவிட்டு வீடு திரும்பும் வழக்கம் இன்றும் உள்ளது.


திருநெல்வேலியில் இந் நாளை கரிநாள் என்றும் சொல்வர்.அதாவது கடைவைத்திருப்பவர்கள் அன்று க்டைதிறக்க மாட்டார்கள். அவர்கள் வருடத்தில் இந் நாளிலேயே முழு ஓய்வு எடுப்பர். குடும்பத்துடன் தண்ணீர் கரைக்கு செல்வர். பொங்கலன்று சமைத்த குழம்பு,,அவியல், பொரியல் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ,சூடு பண்ணி எடுத்து செல்வர். இதை சுண்டக் கறி என்று கூறுவார்கள். சிலர் மறுமாற்றம் என்றும் சொல்வார்கள்.பொங்கலன்று பொங்கிய சாதத்தில் நீர் ஊற்றி,வைத்திருப்பர். அந்த சாத்த்துடன்,சுண்டக் கறி வைத்து சாப்பிடுவார்கள்.. 

காணும் பொங்கல்:
                    கிராமத்தில் மாட்டுப் பொங்கலுக்கு, தண்ணீர் கரை அதாவது ஆறு, நீர்வீழ்ச்சி,போன்ற இட்த்திற்கு செல்வர். சென்னை போன்ற நகரத்தில் காணும் பொங்கலன்று, பீச், பார்க், மியூசியம், போன்ற இடங்களுக்கு தங்கள் சொந்தங்களூடன் சென்று மகிழ்வர்.

நானறிந்த பொங்கலை உங்களோடு பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி...
மீண்டும் எனது பொங்கல் நல்வாழ்த்தை கூறி கட்டுரையை நிறைவு செய்கிறேன்......நன்றி......நன்றி.....
வே.முத்துலஷ்மி    



No comments:

Post a Comment