Tuesday, December 14, 2021

Enninaivugalin e pathivu

 முத்து இல்லம் ' என்று அழகாக பொன் எழுத்துக்களால் பொறித்த வீட்டிற்கு நுழைந்தும் நுழையாததுமாய்...


" இப்போது திருப்தியா அலமேலு ! நீ நினைச்சது போல செஞ்சாச்சு " என்றான் ராஜா என்ற முத்துராஜன்.


"என்னங்க அப்படி சொல்லிட்டீங்க. எனக்கு மட்டுமா சந்தோசம் ! ஏன்? உங்களுக்குமில்லையா ?இல்லே  நம்ம மாலா, லீலா குழந்தைங்களுக்குமில்லையா ? என்னமோ எனக்காக மட்டும் இந்த காரியத்தை செய்தாற்போல சலித்துக்கொள்றீங்களே" சற்று அழுத்தமான பேசினாள் அலமேலு.


அன்றைய பொழுது என்றைக்குமில்லாத அளவுக்கு மிக மிகச் சுதந்திரமாய் மகிழ்ச்சி கடலில் மூழ்கியது. நேற்று வரை இருந்த உணவு கட்டுப்பாடு தளர்ந்தது. நேற்று வரை  அதாவது இந்த நாளையில் இந்த உணவு தான் இந்த வேளைக்குச் சாப்பிடவேண்டுமென்ற கட்டளை நீங்கியது. அளவு சாப்பாடு என்று ஒன்று அன்று முதல் அளவற்ற சாப்பாடாக மாறியது. டி.வி ஓடும் நேரம் ஒரு மணி நேரமாய் இருந்த சட்டம் அன்றிலிருந்து  எந்நேரமும்  ஓடத் துவங்கியது. கண்ணில் காட்டாத அல்லது காணாமல் போயிருந்த நொறுக்கு தீனிகள் அன்று கணக்கில்லாமல் தீர்ந்தன. மாலைநேர குட்டி தூக்கம் நீளமாக மாறின. சாயும்கால குழந்தைகளின் படிப்பு சீரியல் பார்ப்பதிலும், பாட்டு கேட்பதில் கழிந்தன. இதுவரை முகவரி தெரியாத வாயில் நுழையாத ஹோட்டல் சாப்பாடு வகைகள் வீடு தேடி வந்தன. இந்த அவுத்துவிட்ட மகிழ்ச்சியில் அனைவரும் மறுநாள் பொழுது விடிவது கூட அறியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

காலையில் அந்த வீட்டு வாசலில் வழக்கம்போல பேப்பர் போடும் பையன் "சார்! பேப்பர். .. சார்.. பேப்பர் " என்றைக்குமே இப்படி கூப்பிடாதவன் அன்று மூன்று அழைத்தும் யாரும் வராத காரணத்தினால் அந்த தினசரி நாளிதழை வீட்டு வாசலில் தூக்கியெரிந்தான்.


அவனுக்கு அந்த வீட்டிலிருந்து எவ்வித பதிலும் வாராதது அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. நேற்று வரை இந்த வீட்டில் அந்த பேப்பர்கார பையன் வருவதற்கு முன்பே  அந்த வீட்டில் இருக்கும் பெரியவர் அதாவது முத்துராஜனின் அப்பா முத்துமணி காத்திருந்து அந்த தினசரியை கையில் தான் வாங்குவார். அது அவர் தினசரிக்கும் கொடுக்கும் மரியாதையா? என்று சரியாக தெரியவில்லை. இன்று அவர் வாசலில் இல்லாதது அவன் மனதை சற்று வருடியது. 


முத்து ராஜனின் நண்பர் நடேசன் வழக்கம் போல 'நடை மற்றும் தியான பயிற்சி' செய்வதற்கு தனது நண்பனுக்காக வீட்டிற்கு முன்பு காத்திருந்தான். அவர்கள் தினமும் இவைகளைச் செய்ய தவறுவதில்லை.              


" அவரு தூங்குறாரு, இனிமே தினமும் பயிற்சிக்கு வரமாட்டார். முடிஞ்சா வாரம் ஒரு நாள் அதுவும் ஞாயிறு கிழமை மட்டும் வருவார் " என்றவாறு அவருடைய பதிலுக்கு காத்திருக்காமல் வாசலில் இருந்த தினசரியையும், பாலையும் எடுத்துக்கொண்டு அவசரம் அவசரமாக சமையலறைக்கு ஓடினாள். 

வீட்டினுள் .. சமயலறையில் சமையல் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ஒருபுறம் குழந்தைகளுக்கு வேண்டியதை செய்துகொண்டும் மறுபுறம் தான் அலுவலகம் செல்வதற்கும் தயாராகிக் கொண்டிருந்தான் முத்து ராஜன். இந்த பரபரப்புக்கு காரணம் அனைவரும் அன்று நேரம் தாழ்ந்து எழுந்ததால் தான். கண்மூடித் திறப்பதற்குள் காலம் பறந்தது. எல்லா வேலைகளும் ஏனோதானோவென்று அரைகுறையாக நடந்தது.


இருசக்கரத்தில் அலுவலகம் சென்ற முத்து ராஜன் அன்று சீக்கிரமாகவே காரில் அவருடைய சக தொழிலாளி இரண்டு பேருடன் வீட்டிற்கு வந்து இறங்கினான். அவரை இருவரும் இருபக்கத்தில் கை தாங்களாக மெதுவாக வீட்டிற்குள் அழைத்து வந்து காற்றாடியை வேகமாக பறக்கவிட்டு கட்டிலில் படுக்க வைத்தனர். இந்த காட்சியை கண்ட அலமேலு "என்னங்க...." என்று துடிதுடித்துப் போனாள். கவனம் சிதறியதால் கை கால் உதறியது. அந்த நிகழ்வை கிரகித்துக்கொள்ள ரொம்பவும் கஷ்டப்பட்டாள்.

அவருடைய 'பாஸ் ' இன்னைக்கு லீவு. எல்லா வேலைகளும் இவன் மட்டுமே பார்த்தான். அதனாலே கொஞ்சம் பிரசர் அதிகமாயிருக்கும் என்று நினைக்கிறோம். அதை உறுதி செய்ய வரும்போது பக்கத்தில் இருந்த டாக்டரிடம் காட்டினோம். அவரும் பிரசர் இருப்பதை உறுதி செய்தார். ஆனால் இது ஆரம்பம் தான் என்றும் இப்போதிலிருந்து தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டால் சீக்கிரமே சரியாகிவிடும் என்றும் சொன்னார்." என்றனர் அவர்கள்.


அவர்கள் பேச பேச அதை கேட்க கேட்க அவளின் உடல் தெம்பு குறைந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அவளுடைய உடலும் ஏறக்குறைய சோர்வாய்த்  தான் இருந்தது.

குடும்ப டாக்டரிடம் போனார்கள்..

அவர் அட்வைஸ் பண்ண தொடங்கி விட்டார்...

உங்கப்பா முதியோர் இல்லத்தில் நல்லா இருக்கின்றாரா?"

நல்லா நினைச்சு பாரு. அவரு உங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அதிகாலையிலே எழுந்து அவராலே முடிஞ்ச வீட்டு வேலைகள் செய்தது உங்களுக்கு உதவியா இருந்தார்.. அதனாலே எல்லா வேலையும் நிதானமா செய்தீங்க. அதே சமயத்தில் நீங்கள் எல்லோரும் காலையில் எழுந்து அதாவது உங்க மனைவி வீட்டு வேலைகள் பரபரப்பில்லாம செய்ததாலே உடம்பு பெருக்காம ஆரோக்கியமா இருந்துச்சு. இப்போ பெருத்திட்டா. நீயும் நடை, தியானம் செய்யாம விட்டதாலே உனக்கு இரத்த கொதிப்பு, மன அழுத்தம், அது மட்டுமில்லே எந்நேரமும் குழந்தைங்க டி.வி பார்த்ததினாலே கண்ணாடி போடவேண்டிய நிலைமை. அத்தனையும் தாண்டி பழமையான கட்டுப்பாடானான உணவு பழக்கம் உங்களின் உடல் நலத்தை நல்லபடியாக இருக்க உதவியது . அவர் உங்களுக்கு நல்ல பழக்கவழக்கத்தை உண்டுபண்ணினார். அது உங்களுடைய சுதந்திரத்தை பறிப்பதாக நினைசீங்க. ஒழுக்கம் உங்களுக்கு பாரமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. கடைசியாக உங்களுக்கு சொல்றேன். மருந்து ,மாத்திரை இல்லாம , உடம்பு கஷ்டம் இல்லாம இருக்கனும்ன்னு விரும்பினா இப்போவே உங்கப்பாவை முதியோர் இல்லத்திலிருந்து முத்து இல்லத்திற்கு அழைத்து வந்திருங்க. ஏன்னா, அவருடைய கண்டிப்பு உங்க வாழ்க்கைக்கு மிகவும் நல்லது. குழந்தைங்களின் எதிர்காலத்திற்கும் நல்லது. அது தான் நீங்கள் அவருக்கு கொடுக்கும் மரியாதையும்,  நீங்க செய்ய வேண்டிய கடமையும் ஆகும். இல்லே சாப்பாட்டுக்கு பதிலா நான் கொடுக்கிற மருந்து, மாத்திரை சாப்பிடுறதா இருந்தா இந்த மருந்து சிட்டையில் இருப்பதை வாங்கிக்கொண்டு சாபிடுங்க. முடிவு உங்கள் கையில் !" என்றார் ஆணித்தரமாக.


 

"அமாங்க, உடனே போவோம். மாமனாரை அன்புடன் அழைத்து வருவோம். கட்டுப்பாட்டுடன் உள்ள சுதந்திரம் தான் நீண்ட ஆரோக்கியம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொண்டேன்." என்று அவசரப் படுத்தினார்.


"ஐய்யா .. தாத்தா இனிமேல் நம்ம கூட இருக்கப் போகிறார் " என்கிற சந்தோசத்துடன் இருந்தனர்.

No comments:

Post a Comment