Monday, December 6, 2021

Enninaivugalin e pathivu

 காலம் ஒரு சக்கரம் போன்றது ......


ஒரு எலி ஒரு பண்ணையார் வீட்டில் வெகுகாலமாக உல்லாசமாக வாழ்ந்தது. வழக்கம்போல் இரவில் உணவு தேட வெளியே புறப்பட்டது அப்போது பண்ணையாரும் அவருடைய மனைவியும் ஒரு அட்டைப்பெட்டியை பிரிப்பதை கண்டது தனக்குத்தான் ஏதோ உணவு கிடைக்கப்போகிறது என்ற ஆவலுடன் எலியும் அதை ஆர்வமாக உற்று பார்க்க அவர்கள் அதிலிருந்து ஒரு பெரிய எலி பொறியை வெளியே எடுத்தனர்...

அதை கண்ட எலி மிகவும் பயந்தது நொந்து போனது, இந்த எலி பொறியை வீட்டிலிருந்து தூக்கி எறிய வேண்டும், அல்லது இதை உடைத்தெறிய வேண்டும் என்று திட்டம் போட்டது அதற்கு உதவிட இன்னோரு ஆள் வேண்டும் என்று தோன்றியது அதன்படி... வேகமாக தோட்டத்திற்கு சென்று அங்கு ஒரு கோழியிடம்...

"என்னை கொல்ல பொறி வைத்திருக்கிறார்கள் நீங்கள்தான் அதை உடைக்க எனக்கு உதவி செய்யவேண்டும்!" என்றது கோழியோ சத்தமாக சிரித்து... "அந்த பொறியினால் எனக்கு எந்த ஆபத்துமில்லை அது உன்னுடைய பிரச்சினை அதை நீதான் சரிசெய்யவேண்டும் முதலில் இடத்தை காலி பன்னு இங்கிருந்து போ!" என சொல்லி விரட்டியது,

அடுத்து வேகமாக ஓடி ஒரு கிடா ஆட்டிடம் சென்று "கிடா அண்ணே... என்னை கொலை செய்ய ஒரு பொறி. வைத்திருக்கிறார்கள் நீங்கள்தான் அதை... உடைக்க...!" என்றது... நக்கலுடன் சிரித்த அந்த கிடா ஆடு "எலி பொறிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன், உனக்கு உதவினால் எனக்கென்ன லாபம் கிடைக்கும்? நீ இருந்தாலும் செத்தாலும் எனக்கென்ன வந்தது...!" என்றது...

மிகவும் மன வருத்தத்தில் இருந்த அந்த எலி வானத்தை பார்த்து கடவுளிடம் வேண்டியது.... அப்போது திடீரென "படார்" என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது பண்ணையார் அம்மா வேகமாக ஓடி அந்த எலி பொறியில் ஒரு பாம்பு மாட்டிக்கொண்டது என தெரியாமல் அதை திறக்க... வலியில் துடித்த அந்த பாம்பு ஓங்கி ஒரே போடாக பண்ணையார் அம்மாவை கொத்திவிட்டது....

வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் பரபரப்புடன் பண்ணையார் அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தனர், விஷம் இறங்கிவிட்டது ஆனால் காய்ச்சல்தான் இன்னும் இறங்கவில்லை என்றார் டாக்டர்... அதற்கு கோழி அடித்து சூப் வைத்து குடித்தால் காய்ச்சல் இறங்கிவிடும் என்று கூட்டத்தில் யாரோ ஒருவர் கூற... அதன்படி உடனே பண்ணையிலிருந்து ஒரு கோழியை பிடித்து சூப்பு வைத்து கொடுத்தனர்...

தன் மனைவிக்கு உடல் நலம் தேறி நல்லபடியாக வீட்டிற்கு வந்தால் குலச்சாமிக்கு ஒரு கிடா விருந்து வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்ட அந்த பண்ணையார்... அதன்படி அவர் மனைவியும் உடல் நலன் தேறி வீட்டிற்கு வர... உடனே

பண்ணையிலிருந்து ஒரு கிடா ஆட்டை பிடித்து மனமும் ருசியுமாக எல்லோருக்கும் விருந்து வைத்தார். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த அந்த எலி தன்னுடைய பிரச்சினை மட்டும் இன்னும் தீரவில்லையே என மறுபடியும் சோகமானது...

திடீரென ஏதோ சிந்தனையில் அந்த பண்ணையார் இந்த எலி பொறியினால்தான் தன் மனைவிக்கு இந்த நிலைமை தனக்கும் எவ்வளவு செலவு என அந்த எலி பொறியை தூக்கி குப்பையில் எறிந்துவிடுகிறார். அதை பார்த்த அந்த எலி ஒரு மெல்லிய புன்னையுடன் வானத்தை பார்த்து கடவுளுக்கு நன்றி சொன்னது.

#நீதி 👌

ஒருவர் பிரச்சினை என்று உங்களிடம் வந்தால் அவரை மேலும் புண்படுத்தாதீர். ஏனெனில் காலம் ஒரு சக்கரம் போன்றது எப்போது யாருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்.🙂

No comments:

Post a Comment