Friday, September 6, 2024

Enninaivugalin epathivu

 இலக்கியத்தில் அறம்


வே. முத்துலெஷ்மி

ஆசிரியை ஓய்வு

பிளாட் நம்பர் 38

கமலதளம்

வி.ஜி.பி. செல்வா நகர் விரிவு

முதல் குறுக்குத் தெரு

வேளச்சேரி

கைபேiசி : 7358272050

மின்னஞ்சல் : dhanvin.akshpearl@gmail.com

அக்கால மக்கள் அறம் என்பதை ஒரு கொள்கையாகவோ ,கோட்பாடாகவோ,

சமயமாகவோ, கருதாமல் வாழ்க்கை நெறியாகவே கருதி போற்றினார்கள். ஒழுக்க

நெறிக்குரிய விதிமுறைகளின் தொகுப்பாகவே அறம் கருதப்பட்டது.

ஔவையார் 'அறம் செய விரும்பு' என்கிறார்.

அற ஒழுங்கு ஊரை ஆளும் என்பது பழமொழி. அற ஒழுக்கத்தின்படி

நடந்தவர்களை நாடு போற்றும். வாழ்க்கை முழுமை பெற வேண்டுமானால்

அறத்துடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என தமிழ் இலக்கியங்கள்

குறிப்பிடுகிறது.

ஔவையாரின் படைப்புகள் அனைத்தும் அறத்தையே போதிக்கின்றன.

சிறுவர்க்கு அறிவுரையாக விளங்கும் 'ஆத்திசூடி' அறநூலை பாடி இருக்கிறார்.

சிறு பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற தொடக்க நூலாக 'ஆத்திசூடி'

அமைந்துள்ளது.

ஆத்திசூடியில் 'ஒளவியம் பேசேல்' என்ற ஓளவையார், கொன்றை

வேந்தனில் 'ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு' என்று அதன் விளைவையும்

விளக்கினார்.

ஒளவையார் பாடிய மற்றோர் அறநூல் ‘நல்வழி’யாகும்

ஔவையார் 108 பாடல்களை ஆத்திசூடியில் பாடியுள்ளார். அவை

ஒவ்வொன்றும் அறம் நிறைந்தவை.

இரு நோக்கத்தில் பாடியுள்ளார் ஔவையார். ஒன்று நல்லது. இன்னொன்று

கெட்டது.

கெட்டவற்றைக் குறிப்பிடும்போது ஔவை பயன்படுத்தும் சொற்கள்,

'விரும்பேல், பேசேல், அகற்று, ஒழி, இகழேல், பகரேல், சொல்லேல், நில்லேல்,


மறவேல்' இப்படியான பதங்களைப் பயன்படுத்துகிறார். இவை ஒவ்வொன்றும்

ஆழமான பொருள் வேறுபாடுடையவை. கெட்டவற்றைக் கைக்கொள்ளாதே என்கிற

ஒரே நோக்கத்தில், பயன்படுத்தப்பட்டவை.

எடுத்துக்காட்டாக,

நன்றி மறவேல்

வஞ்சகம் பேசேல்

ஔவை கூறிய கெட்டவற்றை அகற்றவில்லையெனில், வாழ்க்கை

அகன்றுவிடும்.

இதைப்போன்றே நல்லனவற்றைப் பின்பற்றுவதற்கும் வரிசையாகச்

சொற்களை அடுக்குகிறார்.

விரும்பு, கேள், முயல், திருந்தச்செய், சேர், பேண், கடைப்பிடி, வாழ், நில்

இப்படி…

அறம் செய்ய விரும்பு

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதினோறு நூல்கள் அறத்தையே

மக்களுக்கு புகட்டுகின்றன.

கடுஞ் சினத்த கொல் களிறும்

கதழ்பரிய கலிமாவும்

நெடுங் கொடிய நிமிர் நேரிடும்

நெஞ்சுடைய புகழ் மறவரும் என

நான்குடன் மாண்டதாயினும் மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்...

எனும் புறநானூற்றுப் பாடலில் மன்னன் யானை, குதிரை ,தேர், காலாட் படை என

பல படைகளை வைத்திருந்தாலும் அரசியல் நடத்தும் நிலையில் அறநெறியைக்

கடைப்பிடிக்க வேண்டும். அரசியலுக்கு 'அறமே அடிப்படை' என்ற கருத்தினை பெற

முடிகிறது.

கற்பு, அன்பு, அருள், மக்கள் நலன், பசிப்பிணி நீக்குதல், மனிதநேயம்,

கள்ளாமை, கொல்லாமை, வாய்மை, விருந்தோம்பல், கல்வி தருதல், குளம்

வெட்டுதல், போர் நெறி முதலிய அறக் கோட்பாடுகளை ஐம்பெரும் காப்பியங்கள்

வலியுறுத்துகின்றன.

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழியை வைத்து அதனோடு

தொடர்புடைய நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டி அறத்தை வலியுறுத்தும் தன்மையில்

பழமொழி நானூறு அமைந்துள்ளது.

உறக்கும் துணையதோர் ஆலம் வித் தீண்டி


இறப்ப நிழற் பயந் தாஅங்கு - அறப்பயனும்

தான் சிறிதாயினும் தக்கார் கைப் பட்டக்கால்

வான் சிறிதாப் போர்த்து விடும்.

விரலால் கிள்ளி எடுக்கும் அளவே உள்ள ஆலம் விதை வளர்ந்து ஓங்கி

தழைத்து மிக்க நிழலைத் தருவது போல அறப் பொருள் சிறியதாயினும் தகுதி

உடையவர் கையில் சேர்ந்தால் அதன் பயன் வானினும் பெரிதாக விளங்கும் என

விளக்குகிறது நாலடியார்..

நாலடியார் அறத்துப் பாலில், துறவுநெறி அறங்களும், இல்லறநெறி

அறங்களும் காணப்படுகின்றன.

நாலடியார், மக்கள் வாழ வேண்டிய பாங்கினைச் சொல்வதுடன், கல்வி

சிறப்பையும், கற்க வேண்டியதின் அவசியத்தையும், வலியுறுத்துகிறது. சான்றோர்

இயல்பையும், பெருமையையும், பண்பிலார் இயல்பையும் பட்டியலிடுகிறது.

பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அளித்தல் சான்றவர்க்கு

எல்லாம் கடன் என்று நல்லாதனார் கலித் தொகையில் குறிப்பிடுகிறார்.

வாய்மையையே பெரிய அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்பதனை

வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்

பொய்யாச் செந் நா தெளிய ஏத்திப்

பாடுப என்ப பரிசிலர் நாளும்

என புறப் பாடலில் குறிப்பிட்டுள்ளார் சாத்தனார்.

பீடு இல் மன்னர் புகழ்சி வேண்டிச்

செய்யா கூறிக் கிளத்தல்

எய்யாது ஆகின்று எம் சிறு செந் நாவே

என்கிறார் வன்பரணர்.

பின்னால் அறம் செய்யலாம் என காலம் தாழ்த்த வேண்டாம். இப்போதே

அறம் செய்க என்றுரைக்கும் பாடல் இதோ..

மற்றறிவாம் நல்வினையாம் இளையோம் என்னாது

கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்

முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்

நற்காய் உதிர்தலும் உண்டு.

நான்மணிக்கடிகை கூறுவது :

கல்லா ஒருவர்க்குத் தம் வாயில் சொல் கூற்றம்


மெல் இலை வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்

அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்: கூற்றமே

இல் இருந்து தீங்கு ஒழுகுவாள்.

மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் வழி காட்டும் நூல்

திரிகடுகம். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக் கருத்துகள் சொல்லப்

படுகின்றன.

வறுமையில் துன்பப்பட்டவர்க்கு அவர் விரும்பும் பொருட்களைக்

கொடுப்பதால் உண்டாகும் புகழும், வறுமையால் தளர்ச்சி ஏற்பட்ட போதும் தன்

குடிக்கேற்ற இயல்பினின்று குறையாத தன்மையும், நாள்தோறும் அன்பு மிகுந்து

நட்பினரைப் பெருக்கிக் கொள்ளுதலும் ஆகிய இம்மூன்றும் கேட்கப்படும் அறங்கள்

பலவற்றிலும் சிறந்தவையாகும்.

‘அலர்ந்தார்க் கொன்று ஈந்த புகழும் துளங்கினும்

தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி

நாள்நாளும் நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்

கேள்வியுள் எல்லாந் தலை.’

என்கிறது திரிகடுகம்.

கொல்லாமை பொய்யாமை புலால் உண்ணாமை களவு செய்யாமை இவை

நான்கும் மக்கள் வினையைத் தீர்க்கும் வலிமை படைத்தன என்கிறது சிறு பஞ்ச

மூலம்.

பொருள் உடையான்கண்ணதே போகம் அறனும்

அருள் உடையான்கண்ணதே ஆகும் அருள் உடையான்

செய்யான் பழி பாவம் சேரான் புறமொழியும்

உய்யான் பிறன் செவிக்கு உய்த்து

என்கிறது சிறுபஞ்ச மூலம்

வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை

குறிப்படறல் தீச் சொற்களோடு--மொழிப்பட்ட

காய்ந்து விடுதல் களைந்துயக் கற்றவர்

ஆய்ந்து விடுதல் அறம்.

என்கிறது மற்றுமொர் சிறு பஞ்ச மூலப் பாடல்.

செயலுக்கு அடிப்படை எண்ணம். அந்த எண்ணம் தூய்மையாக அமைய

மனம் மாசு இல்லாமல் இருக்க வேண்டும். மனத்திலுள்ள மாசைப் போக்க

முயல்வதே அறம்.

இதையே வள்ளுவர்


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற..

என்கிறார்.

திருவள்ளுவர் அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தின் மூலம் உலக மக்கள்

அனைவரும் சாதி மதம் இனம் கடந்து குறளின் அடிநாதமே அறம் என்பதை

தெளிவாக்கி விடுகின்றது.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வா யெல்லாஞ் செயல்.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

அறநெறிப்படி வாழ்வை நடத்துபவன் எப்படி இருப்பான் என்பதைக் கூறும்

ஏலாதி பாடல்:

பல்லுயிர்க்கும் தாய்:

நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே

பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை

வேயன்ன தோளாய் இவை உடையான் பல்லுயிர்க்கும்

தாய்அன்னன் என்னத் தகும்.

இலக்கிய உலகில் நாலடியார் சிறந்ததோர் அற இலக்கியமாக விளங்குகிறது.

வைகலும் வைகல் வரக் கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகல் தம் வாழ்நாள் மேல் வைகுதல்

வைகலை வைத்துணராதார்.

என்கிறது நாலடியார்.

மேலும்

இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது

பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி

ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்

மருவுமின் மாண்டார் அறம்.

இறப்பு இன்று வருமோ அன்று வருமோ என்று வருமோ என்று நினையாமல்

எமன் பின்புறத்திலேயே நிற்கிறான் என எண்ணித் தீய செயல்களை விட்டு

விடுங்கள். முடிந்த வரை மாண்புடையார் போற்றிய அறத்தை செய்யுங்கள் .


என்றும் நாலடியார் கூறுகிறது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற

நாவல் பெண்ணின் பெருமையைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், சிறந்த ஆண்;

சிறந்த பெண், குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தமிழ் சமுதாயத்தின்

அறவழியில் நின்று பேசுகிறது.

முடிவுரை

உயிர் இன்றி உடம்பு எவ்வாறு இயக்கம் பெறாதோ அதைப்போல தமிழ்

இலக்கியங்களில் அறக்கோட்பாடுகள் இன்றி அவனி நிலை பெறாது என்பதை

உணர்ந்தே நம் முன்னோர்கள் தமிழ் இலக்கியங்களில் அறத்தை ஆங்காங்கு

வகுத்தும் தொகுத்தும் அளித்துள்ளனர்.

இலக்கியத்தின் வாயிலாக அக்கால மக்கள் கண்ட அறம், பழக்க

வழக்கங்களாலும், நீதியாலும், கடமையுணர்வாலும், ஒழுக்கத்தாலும், ஈகையாலும்,

கொடையாலும், வளர்ச்சியடைந்து பரந்துள்ளதை மேற்கூறிய கட்டுரையின் மூலம்

அறியலாம்.


*

No comments:

Post a Comment