Wednesday, August 28, 2019

enninaivugalin e pathivu-----thirumanthiram

திருமந்திரம் :
                                 கல்லாதவர்களுக்கு  அறிவையும் , கற்றவர்களுக்கு  தெளிவையும்  கொடுக்கும்  கருத்துக்  கருவூலம்  திருமந்திரம்.

ஆழமான   கருத்துக்களை  எளிய  நடையில்  சொல்லும்  தமிழ்  சாஸ்திர  நூல் . தமிழில்  தோன்றிய  முதல்  யோக  நூல் . ஒன்பது  தந்திரங்கள்  கொண்டது.

முதல்  நான்கு  தந்திரங்கள்  அறம் , பொருள், இன்பம் ,வீடு  ஆகும்.
 ஐந்து  முதல்  ஒன்பது வரை உள்ள தந்திரங்கள்  வீடு பேறு ஆகும் .

 திருமூலர் மாலையெனுந் தெப்பத்தைப் பற்றிக்
கருவேலை யைக்கடப்போங் காண்.
      -சித்தாந்த தரிசனம்.
: திருமூலர் வரலாற்றைச் சொல்லப் புகுந்த தெய்வச்சேக்கிழார்,

‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார். திருமூலரும் இதனையே,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்று குறிப்பிடுகின்றார்.


"ஊனுடம்பிற் பிறவி விடந் தீர்த்துலகத் தோர்உய்ய

ஞான முதல் நான்குமலர் நல்திருமந் திரமாலை" (பா - 26)

என்பது சேக்கிழார் வாக்கு

சுந்தரமூர்த்தி நாயனார் "நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்" என்று குறிப்பிடுகின்றார். 

தேவர் குறளும்  திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனி மொழியும் --கோவை 
 திருவாசகமும்  திருமூலர் சொல்லும்  ஒரு வாசகம்  என்று  உணர்.
என்னும்  ஒளவையார்  அருளிய நல்வழிச்  செய்யுளே சான்றாம் .

பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையென்றும், மூவாயிரம் திருப்பாட்டுகள் கொண்ட முதுமொழியென்றும், தந்திரம் - மந்திரம் - உபதேசம் என்ற முக்கூறுகள் கொண்ட முதனூலென்றும் அறியப்பெறும் திருமந்திரம் வேதப்பொருளன்று; ஆகமப்பொருள். ஓதப்படுவது வேதம்; ஒழுங்குசெய்வது ஆகமம்.


ஆகமங்களின் பெயரையும், அவற்றின் தொகையையும், அவற்றைத் தாம் பெற்ற முறைமையையும், அவற்றில் கூறப்படும் பொருளையும் திருமூலநாயனார் குறிப்பாயும் வெளிப்படையாயும் உணர்த்துகின்றார்.

காமிகம் போன்ற ஆகமங்களில் ஆகமங்களின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சுதாசிவ பரமேஸ்வர மூர்த்தியின் ஈசான முகத்திலிருந்து பிரணவர் முதலிய சிவாம்சமுள்ள முப்பதின்மர் கேட்டறிந்தவை பத்து ஆகமங்கள் என்றும் ருத்திராம்சமுள்ள அநாதிருத்திரர் முதலிய முப்பத்தறுவர் கேட்டது பதினெட்டு ஆகமங்கள் என்றும் இவ்வரலாறுகளில் குறிப்பிடப்படுகின்றது.

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்து
ஆந்தி மதிபுனை அரன்அடி நாடொறும்
சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற் றேனே’  (2)

என்றும்,

‘நவவாகமம் எங்கள் நந்தி பெற்றானே’ (3)

என்றும்,

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தும் வாதுளம்
மற்றவ் (வி)யாமளம் ஆகுங் காலோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே’ (5)

ஆகமங்கள்  இருபத்தெட்டு .முக்கியமானவை  ஒன்பது .

.காரணம், காமிகம்,வீரம் ,சிந்தியம் ,வாதுளம் ,யாமளம் ,காலோத்தரம் ,சுப்பிரம் ,மகுடம்  ஆகிய  இவ் வொன்பத்தின்  சாரமே  திருமந்திரம்.


திருமூலர் இறை அனுபவம் முற்றிலும் பெற்ற ஓர் ஒப்பற்ற யோகியாவார். இறவைனைப் புறத்திலும் அகத்திலும் வழிபட்டு, தனது யோகத்தின் வலிமையாலும், தவத்தின் சாதனையாலும் எங்கும், எவ்வுலகிலும் காணப்படும் பரம்பொருளைத் தம்முள் கண்டவராய் இறை அனுபவம் நிறைந்தவராகத் திகழ்கிறார். திருவருள் அவருக்கு இட்ட பணி. மக்களிடையே சைவத்தையும், ஆன்மீகத்தையும் பரப்புவதாகும். 

இதற்காகவே பூவுலகில் எண்ணற்ற ஆண்டுகள் திருமூலர் வாழ்ந்திருந்தார்.

"செப்புஞ் சிவாகமம் என்னும் அப் பேர்பெற்றும்

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்

ஒப்பில் எழுகோடி யுகம் இருந் தேனே".

இறைவனுடன் இரண்டறக் கலந்த உயிரின் இருப்பிடம் திருவருளேயாகும். அதற்கு இரவு பகல், இறப்பு பிறப்பு என்பது இல்லை. அத்தகைய உயிரின் நிலை உடலைச் சார்ந்த அனுபவங்களுக்கு அப்பாற்பட்டதாகும்.
திருமூலருடைய சுயானுபவம், சிவானுபவம் மேலும் வெளிவருகிறது.

"நந்திஅரு ளாலே மூலனை நாடிப்பின்

நந்திஅரு ளாலே சதாசிவ னாயினேன்

நந்திஅரு ளாலே மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்

நந்தி அருளாலே நானிருந் தேனே".

இந்த மந்திரத்தின் உட்கருத்து, மூலன் என்று பெயர் பெற்ற சிவயோகியார் நிண்ட காலம் இறைவனை நாடித் தீவிர யோக நிலையில் நின்றார். தன்னுள் இருக்கும் மூலாதாரச் சக்தியினைக் கட்டுப்படுத்தி மேற்செலுத்தி, சாதாரண வாழ்க்கையின்அடிப்படைப் பற்றுக்களை நீக்கி, இறைவன் அருளால் ஞான விளக்கம் பெற்று, நானென்றும், தானென்றும் காணப்படும் வேற்றுமையை ஒழித்துச் சிவசக்தியுடன் இரண்டறக் கலந்தார் என்பதேயாகும்.

கருணை நிரம்பிய உள்ளங்கள் உடையவர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள். அவைகள் இறைவனுடைய இருப்பிடங்கள். திருவருள் முழுமையாக அவர்களுடைய உள்ளத்தில் பதிந்து, அவர்களை வழிநடத்திச் செல்கிறது. 

இதுவே களிம்பறுத்தல் எனப்படும்.

"விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுருக்கியா ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே".

உயிரின் சாதனைக்கு உடம்பு இன்றியமையாதது. உயிரை வளர்க்க உடம்பைப் பேணவேண்டும். . எனவே, சித்தர்கள் உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே". 

என்று  அருளினார் .

சித்தர்கள் போதிப்பது சித்தாந்தம். அத்துடன் சிவத்தையும் சேர்த்துக் கொண்டால் நமக்குக் கிடைப்பது. சைவசித்தாந்தம். அதாவது சித்தர்கள் சிவமெனும் பரம்பொருளைஅனுபவித்துத் தங்கள் உணர்வினை வெளியிடுகிறார்கள். இருவினைக்கு அப்பால் நிற்கும் இறைவனை, பேரின்ப நிலையை, அன்பின் வடிவை, படைத்தால், காத்தல், அழித்தல், அருளல் போன்ற தொழில்களையெல்லாம் புரியும் தேவர்களுக்கு அப்பாற்பட்ட ஓர் உண்மையை, இப்பிரபஞ்சத்திற்கு ஆதாரமாய், பிரபஞ்சமாய், எல்லாவற்றிற்கும் காரணமாய், எல்லாவுமாய் விளங்குகின்ற ஒருவனை, மனத்திற்குள் உணர்ந்து, அவனுடைய தன்மையை விளக்கி, அவனை அடையும் வழிகளை உலகிற்கு எடுத்துக்காட்டுவதே சைவ சித்தாந்தமாகும்.

No comments:

Post a Comment