என் வீட்டிற்கு புதிதாய்த்
திருமணம் செய்த அவர்களை விருந்திற்கு அழைத்திருந்தோம். அந்த மணமகனை நட்பு என்ற
வகையில் தான் பழக்கம்.
அந்த இளம் ஜோடியுடன் அந்த மணமகனின்
தாயும் வந்திருந்தார். அவர்களுடன் என் கணவரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருந்தார்கள். நான் அடுப்பறையில் வேலையாக இருந்தேன்.
அப்பொழுது அந்த பெண் வந்தாள்.
வந்தவள் “உங்களிடம் ஒன்று கெட்கவேண்டும்“ என்றாள் சற்றுத் தயங்கி.
புதியதாக நம் வீட்டிற்கு வருகிறாள்
இல்லையா...? மிகவும் தயக்கமாகப் பேசியதால்... “என்னம்மா வேண்டும்? பயப்படாமல்
கேள்“ என்றேன்.
அவளும் உடனே “நீங்கள் உங்கள் கணவரை
எப்படி கூப்பிடுவீர்கள்...?“ என்று கெட்டாள்.
இது என்னடா.. புது மாதிரியான
கேள்வியாக இருக்கிறதே என்று நான் சற்றுத் தயங்கி... “ஏனம்மா...? என்ன விசயம்?“ என்றேன்.
அவளும், “உங்களுக்கே தெரியும
தானே... நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்தவள். என் அம்மா அப்பாவைப் பெயர் விட்டு
தான் கூப்பிடுவார். நானும் அவரை அப்படித்தான் அவரின் பெயர் சொல்லிக் கூப்பிட்டேன்.
ஆனால் என் மாமியார் அதைத் தப்பு என்றும் இந்த மாதிரி என் பிள்ளையை பெயர் சொல்லிக்
கூப்பிடாதே... என்றும் கோபமாகத் திட்டினார்கள். பிறகு அவரை எப்படி அவங்க எதிரில்
கூப்பிடுவது என்று தெரியாமல் அவர் எதிரில் எதுவுமே பேசாமல் கையசைத்துப்
பேசுகிறேன்...“ என்றாள்.
எனக்கு சிரிப்பாக வந்தது. நான் சிரித்தைக்கண்டு
அவள் கோபமுற்று... “சரிக்காதீங்க ஆண்டி. எப்படி கூப்பிடனும்ன்னு சொல்லுங்க“
என்றாள் உரிமையாக.
நான் என்னவென்று சொல்வது... நாம
“மூடு“க்குத் தகுந்தவாறு ஏதேதோ சொல்லிக் கூப்பிடுவோம். அதைப்போய் இவளிடம் எப்படி
சொல்வதென்று யோசிக்கும் பொழுதே... “ஆண்டி... அங்கிள் ஹாலில் இருக்கிறார். இப்போ
நீங்கள் அவரை எப்படி கூப்பிடுவீர்கள்?“ என்று கேட்டாள்.
அப்பாடா... நல்ல வழி கிடைத்த்து
என்று நானும் உடனே.. (நம் முன்னோர்கள் சொன்னபடி) “ஏங்க.... இங்க கொஞ்சம் வாங்க...“
என்று கூப்பிடுவேன் என்றேன். அவளும் சரியென்று தலையாட்டினாள்.
அதன் பிறகு நான் அவரிடம்...
“ஏங்க... இதைக் கொண்டு போங்கள்... ஏங்க.... இதைச் செய்யுங்கள் ...“ என்று நிறைய
“ஏங்க போட்டதும் அவளும் புரிந்து கொண்டிருப்பாள் என்று தான் நினைத்தேன்...
இது நடந்து இரண்டு நாள் கழித்து
அவளின் மாமியாரிடமிருந்து ஒரு போன் வந்தது. “ஏம்மா அருணா.... நீ தான் என்
மருமகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தியா...?“ என்றார்கள்.
நான் தமிழ் கற்றுக் கொடுத்தேனா....?
என்ன இது வம்பாப் போச்சேன்னு நினைத்து “ஏன் மாமி... என்ன ஆச்சி?“ என்றேன்.
அவர்களும் “நடந்ததைக் கேள் அருணா“
என்றார்கள் சிரித்த படி.
அதாவது... அந்த பெண்ணின் கணவன் வேலை
முடித்து வரும் போது இரெயிலைத் தவற விட்டுவிட்டான். அதனால் தன் மனைவிக்குப் போன்
செய்து “நான் டிரெயினைத் தவற விட்டுவிட்டேன். அடுத்த டிரெயின் ரொம்ப லேட்டாகக்
கிளம்பும். அதனால் நான் வர லேட்டாகும். அம்மாவிடம் சொல்லி அவங்களை எனக்காக
காத்திருக்க வேண்டாம். சாப்பிட்டு படுக்கச் சொல்“ என்று சொல்லி இருக்கிறான்.
அந்தப் பெண்ணும் தன் மாமியாரிடம்
வந்து “ஏங்க டிரெயினை தவறவிட்டாராம். அதனால் ஏங்க வர லேட்டாகுமாம். நீங்கள் ஏங்கக்காக
காத்திருக்க வேண்டாமாம். உங்களைச் சாப்பிட்டு ஏங்க தூங்கச் சொல்ல சொன்னார்“ என்று
சொல்லியிருக்கிறாள்.
அவர்களுக்கு முதலில் ஒன்றும்
விளங்காமல் திரும்பவும் கேட்டதற்கு திரும்பவும் அவள் நிறைய “ஏங்க“ போட்டு பதில்
சொல்லியிருக்கிறாள். அவர்களுக்குப் புரிந்தவுடன் இந்த நகைச்சுவையை “நீயும்
கேட்டு சிரி“ என்று எனக்குப் போன் செய்து சொன்னார்கள்.
பிறகு நானும் அவர்களுடன் சேர்ந்து
சிரித்தேன்.
ஆமாம்... நண்பர்களே... “ஏங்க“ என்றால் உண்மையில் என்ன அர்த்தம்...?
தெரிந்தவர்கள் எழுதுங்களேன். நானும் தெரிந்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment